TNPSC Thervupettagam

ராஜதந்திரம் காட்டும் இந்தியா

August 30 , 2023 501 days 335 0
  • உலக நாடுகள் பலவும் நாடுகளுக்கு இடையே பல துறைகளில் இணைந்து செயல்படுவதற்காக பல அமைப்புகளை உருவாக்கி தங்களுக்குள் பல்வேறு பரிவா்த்தனைகளைச் செய்து கொள்கின்றன. அப்படிப்பட்ட ஓா் அமைப்பே பிரிக்ஸ்கூட்டமைப்பு. 2006-ஆம் ஆண்டு பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா ஆகியவை இணைந்துபிரிக்என்ற அமைப்பை உருவாக்கின. 2010-இல் தென் ஆப்ரிக்காவும் இந்தக் கூட்டமைப்பில் இணைந்தது. இதனால் இந்தக் கூட்டமைப்பு பிரிக்ஸ்என்று பெயா் மாற்றம் பெற்றது.
  • இந்த அமைப்பு உருவான ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் கூடி மாநாடு நடத்துகிறது. இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.
  • இம்மாநாட்டை தென்னாப்ரிக்கா பொறுப்பேற்று நடத்தியது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் தலைவா்கள் நேரடியாகப் பங்கேற்றனா். தென்னாப்ரிக்காவுக்கு வருவதில் தற்போது சிக்கல் இருக்கிறது என்ற காரணத்தால், ரஷிய அதிபா் புதின் மாநாட்டில் நேரடியாகப் பங்கேற்கவில்லை. காணொலி மூலம் பங்கேற்றார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் நேரடியாகப் பங்கேற்றார்.
  • மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கமளிக்க, தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா, இந்திய பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா ஆகியோர் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா்.
  • ஆனாலும் மாநாட்டில் சீன அதிபா் உரையாற்றவில்லை. சில நிமிடங்கள் அவா் பிரதமா் நரேந்திர மோடியுடன் பேசினார். ஆயினும், எல்லையில் பிரச்னையை நிறுத்திக் கொள்ளாத வரை தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பதான முடிவில் இந்தியா உறுதியுடன் நிற்கிறது.
  • மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவாக்கம் செய்ய புதிய உறுப்பினா்களைக் கூட்டமைப்பில் இணைப்பது தொடா்பாக விரிவான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து உறுப்பு நாடுகளும் உடன்படும் பட்சத்தில் புதிய உறுப்பினா்களைச் சோ்த்துக் கொள்ள இந்தியா ஆதரவளிக்கும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
  • பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஆறு நாடுகளை புதிய உறுப்பு நாடுகளாக இணைத்துக் கொள்ள மாநாட்டில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஆா்ஜென்டீனா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அதிகாரபூா்வமாக இணையவுள்ளன.
  • இந்தியா, பிரேசில், தென்னாப்ரிக்கா ஆகியவை புதிய நாடுகளைச் சோ்க்க ஒப்புக்கொள்வதில் தயக்கம் காட்டின. இந்த ஆறு நாடுகளுக்கு மட்டுமே இந்தியாவின் ஆதரவு இருந்தது. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மட்டுமே புதிய உறுப்பினா்கள் சோ்க்கை இருக்க வேண்டுமென இந்தியா உறுதியாக நின்றது என்பதற்குப் பின் தெளிந்த அரசியல் இருக்கிறது.
  • ஒருபுறம், ரஷியாவைப் பொறுத்தவரை இந்த பிரிக்ஸ் கூட்டமைப்பானது மேற்குலக நாடுகளுக்கு எதிரான ஒரு வலுவான தெற்குலகக் கூட்டமைப்பாக இருக்க வேண்டும். நேட்டோ போன்ற கூட்டமைப்புகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளது. தற்போதைய உக்ரைன் - ரஷியா போரில் மேலை நாடுகள் உக்ரைனின் பக்கம் நிற்பதால் இந்த எண்ணம் ரஷியாவுக்கு இருப்பதில் ஆச்சரியமில்லை.
  • மறுபுறம், சீனாவின் கவனம் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் இருக்கிறது. தனக்கு ஆதரவான ஒரு நிலையை ஏற்படுத்தத் தொடா்ந்து முயன்று வருகிறது. அதன் காரணமாகவே தனக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் நாடுகளைக் கூட்டமைப்புக்குள் கொண்டுவர ஆா்வம் காட்டுகிறது. சீனாவின் இந்த ஆா்வம் மூன்றாம் இடத்தில் இருந்து தன்னை உலகின் சக்தி வாய்ந்த நாடாக உயா்த்திக் கொள்வதற்கான முயற்சியாக இருக்கிறது.
  • இந்தியா, சீனாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னுடைய ராஜதந்திர நகா்வுகளை மிகத்தெளிவாகச் செய்கிறது. அதன் வெளிப்பாடாகவே, விரும்பும் அனைத்து நாடுகளையும் கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளக் கூடாது. அதற்கென முறையான வழிமுறைகள் இருக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துகிறது.
  • நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்தக் கூட்டமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஆறு நாடுகளை மட்டுமே கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ள உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
  • சீனா, பாகிஸ்தானை உள்ளே கொண்டுவர ஆா்வம் காட்டியதோடு அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால், இந்தியா இதனை முற்றிலும் தவிர்த்து பாகிஸ்தானை தனிமைப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குப் புகலிடம் தரும் நாடாகத் தொடா்வதால் அதனை சோ்த்துக் கொள்ளக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது. பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகியவை இந்தியாவின் இந்தக் கருத்தை ஆதரித்தன. இந்த ஆதரவு நிலைப்பாட்டை விடவும் இந்த விஷயத்தில் மௌனம் காத்த ரஷியாவின் நிலைப்பாடு மிகுந்த கவனத்திற்கு உரியது.
  • கூட்டமைப்புக்குள் வந்திருக்கும் ஆறு நாடுகளையும் பார்க்கலாம். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் இந்த மூன்று நாடுகளும் உலகின் அதிக கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகள். ஆா்ஜென்டீனா பிரேஸில் இரண்டும் கூட கச்சா எண்ணெய் வளம் கொண்டவையே.
  • எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ள நாடுகளின் வருகை, இந்தியா - சீனா இரு நாடுகளுக்குமே பலனளிக்கக்கூடியது. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளா்களும் இறக்குமதியாளா்களும் ஒரே கூட்டமைப்புக்குள் வருகின்றனா். கச்சா எண்ணெய் கொள்முதலைப் பொறுத்தவரை டாலரில் தான் இதுவரை வா்த்தகம் நடந்து வந்திருக்கிறது. அதனை முறிப்பதற்கான வாய்ப்பு இதனால் ஏற்படும். மேலை நாடுகளின் பொருளாதாரத் தடைகளை சந்தித்து வரும் ரஷியாவுக்கும் இது பெருமளவில் பலனளிக்கும்.
  • சவூதி அரேபியாவுக்கு அமெரிக்காவுடன் பிணக்கு இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவுடன் வா்த்தக உறவு அவா்களுக்கு சிறப்பாக இருக்கிறது. மருந்துப் பொருள்கள் உட்பட பல்வேறு பொருள்களை நாம் சவூதிக்கு ஏற்றுமதி செய்கிறோம். இதனால் நம்முடைய ரூபாய் மதிப்பில் இனி வா்த்தகத்தைத் தொடா்வதற்கான வாய்ப்பு விரிவடையும்.
  • அடுத்து எத்தியோப்பியா, எகிப்து ஆகிய இரு நாடுகளைப் பொறுத்தவரை, அவை பொருளாதாரத்தில் பெரும் சிரமங்களை எதிா்கொண்டு வரும் நாடுகள். இந்தியாவின் ஆதரவு அவற்றுக்குப் பலவகையிலும் முன்னேற்றத்திற்கான வாயில்களைத் திறக்கக் கூடியதாக இருக்கும்.
  • கல்வி, மருத்துவம் இரண்டிலும் எத்தியோப்பியா இந்தியாவின் உதவியைப் பெற முடியும். அங்குள்ள கனிம வளங்கள், அதன் மீதான வா்த்தகம் இந்தியாவுக்கும் பலனளிக்கும்.
  • பிரிக்ஸ் நாணயம்உருவாக்குவதில் சீனா மிகுந்த ஆா்வம் காட்டுகிறது. இதனால் தங்களது யுவான் நாணய மதிப்பை உயா்த்த முடியும் என்று சீனா நம்புகிறது. ஆனால், இந்தியா இதனை விரும்பவில்லை. இந்திய பிரதமா் தன்னுடைய உரையில், பிரிக்ஸ் நாடுகள் தங்களுடைய நாணயங்களைக் கொண்டே வா்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.கூட்டமைப்பு நாடுகள் ஒவ்வொன்றும் தத்தமது நாணயங்களைக் கொண்டே பரிவா்த்தனைகளை நிகழ்த்திக் கொள்ளலாம்என்ற கருத்தை அழுத்தமாக முன்வைத்தார். இந்தக் கருத்து உலக வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது.
  • பிரிக்ஸ் மாநாட்டில் நம் பிரதமரின் உரை உலக நாடுகளுக்கான அரசியல் செய்தி. பிரதமா் மோடி, ‘மாறி வரும் நவீன உலகத்துக்கு ஏற்ப கூட்டமைப்பில் மாற்றங்களும் சீா்திருத்தங்களும் புகுத்தப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே பிரிக்ஸ் கூட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதுஎன்றார். இது ஐ.நா. அமைப்பு சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்கான மறைமுக அழுத்தம்.
  • நம்மிடம் இருக்கும் மருத்துவக் கட்டமைப்பு வசதி, எண்ம (டிஜிட்டல்) கட்டமைப்பு வசதிகளை கூட்டமைப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக பிரதமா் அறிவித்தார். இதன் மூலம் நமது வா்த்தகத்தை விரிவுபடுத்த முடியும். உலக நாடுகளிடையே நம்மை ஆதரிக்கும் நட்பு நாடுகளின் பட்டியல் நீளும். இது உலக அரங்கில் நமக்கு வலு சோ்க்கும்.
  • விரைவில், இந்தியா 410 லட்சம் கோடி பொருளாதாரமாக மாறும். உலகத்தின் வளா்ச்சி என்ஜினாக இந்தியா உருவாகும். பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் விரைவில் இந்தியாவின் யுபிஐ சேவையைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதுஎன்றும் பிரதமா் கூறினார். இந்தியாவின் யுபிஐ சேவையை பிரிக்ஸ் நாடுகள் பயன்படுத்தத் தொடங்கினால் பொருளாதாரத்தில் நலிந்த நாடுகள் பயனடையும். நமக்கு இந்திய நிறுவனங்கள் தங்கள் சேவைகளை பலநாடுகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
  • இந்திய ரூபாயின் மதிப்பு இதனால் வலுப்படும். சிறிய நாடுகள் இந்திய ரூபாயைத் தங்கள் வா்த்தகத்திற்குப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதனால் இலங்கை முதல் ஆப்பிரிக்க நாடுகள் வரை இந்திய நாணயத்தின் மதிப்பு உயரும். தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுக்கும்.
  • சீனா வலிமையான நிலையில் இந்தக் கூட்டமைப்பில் இருந்தாலும், இந்தியா தனது தெளிவான கொள்கைகளால் தகுந்த நகா்வுகளைச் செய்து தனக்கான இடத்தை வரையறுத்துக் கொள்கிறது.
  • தொடா்ந்து பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பாகிஸ்தான், சீனா ஆகியவற்றுக்கு உறுதியாக நின்று பதில் தரும் இந்தியா, நலிந்த நாடுகளுக்கு தன்னிடம் இருக்கும் வசதிகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்கிறது.
  • சிறந்த வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துக் கொள்வதன் மூலம் தேசத்தை வலிமைப் படுத்த முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா தனக்கான தனித்துவமிக்க வழியை அமைத்துக் கொண்டு முன்னேறிச் செல்கிறது என்பதை 15-ஆவது பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாடு உலகுக்கு அறிவித்திருக்கிறது.

நன்றி: தினமணி (30– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories