- கல்வி ஒருவரது சிந்தனையைத் தெளிவாக்கி அறிவை விசாலப்படுத்தும் என்பதற்காகத்தான் பெண் கல்விக்காகப் பலர் போராடினர். ஆனால், நூல் பல கற்றுத் தேர்ந்தும் மூளையில் படிந்து கிடக்கும் பிற்போக்குத்தனத்தைச் சிலரால் கைவிட முடியாதது முரணே. இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என நாம் கொண்டாடுகிற ஒருவர் அப்படியான கசப்பான உண்மைக்கு உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார். ஆனால், அவரது பிற்போக்குத்தனத்தைத் தன் அறிவாலும் திறமையாலும் மாற்றிக்காட்டியவர் கமலா சோஹோனி.
- பம்பாயின் மேல்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கமலா. இவருடைய அப்பா நாராயணராவ், அப்பாவின் சகோதரர் மாதவராவ் இருவரும் பம்பாய் பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்தவர்கள். பெங்களூரு ‘டாடா அறிவியல் நிறுவன’த்தில் (தற்போது இந்திய அறிவியல் நிறுவனம்) வேதியியலில் பட்டப்படிப்பை முடித்த ‘முதல்’வர்கள். வீட்டுப் பெரியவர்கள் இருவர் புகழ்பெற்ற வேதியியலாளர்களாக இருப்பதைப் பார்த்து வளர்ந்த சிறுமி கமலாவுக்கு, வளர்ந்த பிறகு தானும் அவர்களைப் போலவே வேதியியல் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் பிறந்தது. அதற்காகத் தன்னைத் தகுதிபடுத்திக்கொண்டார். அவர்களைப் போலவே பம்பாய் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளநிலைப் பட்டம் பெற்ற கமலா, 1930இல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுகலை வேதியியல் படிப்புக்கு விண்ணப்பித்தார்.
- இளநிலையில் கல்லூரியில் சிறந்த மாணவியாகத் தேர்வான கமலா, முதுகலைப் படிப்பில் எளிதாகத் தனக்கு இடம் கிடைத்துவிடும் என நம்பினார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. வலுவான பொருளாதாரப் பின்புலம், மேல்தட்டு வர்க்கம், கல்லூரியில் மிகச் சிறந்த மதிப்பெண் என இவ்வளவு தகுதிகள் இருந்தும் கமலாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்திய அறிவியல் நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் சி.வி.ராமன் அதற்கான காரணமாக இருந்தார். பெண்களுக்கு அறிவியல் ஆய்வுகளில் ஈடுபடுகிற அளவுக்குத் திறமை இருக்காது என நினைத்த அவர், கமலாவின் விண்ணப்பத்தை நிராகரித்தார். இயற்பியலில் அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது ‘ராமன் விளைவு’ என்றால் வழிவழியாக அவருக்குக் கற்பிக்கப்பட்ட வழக்கத்தால் கமலாவின் விண்ணப்பத்தை நிராகரித்தது ‘சமூக விளைவு’.
- பெண் என்பதற்காகத் தனக்கு இடம் மறுக்கப்பட்டதை அறிந்து அதிர்ந்த கமலா, தான் நிராகரிக்கப்பட்டதற்கு அலுவல்ரீதியான காரணம் கேட்டு இயக்குநர் அலுவலகத்தின் முன் அமைதிவழியில் போராடினார். கமலாவை நிராகரிக்க அவர் பெண் என்பதைத் தவிர வேறு எந்தக் காரணத்தையும் விஞ்ஞானி ராமனால் சொல்ல முடியவில்லை. அதனால், வேறுவழியில்லாமல் கமலாவை அங்கே படிக்க அனுமதித்தார், சில நிபந்தனைகளோடு.
மூன்று நிபந்தனைகள்
- பெண்களால் அறிவியல் ஆய்வில் நீடிக்க முடியாது என்பதால் கமலாவை முழுநேரப் படிப்பில் ராமன் சேர்த்துக்கொள்ளவில்லை. முதலாமாண்டை கமலாவின் திறமையைச் சோதிக்கும் காலமாக நிர்ணயித்தார். அதில் இயக்குநருக்குத் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே கமலாவால் இரண்டாமாண்டைத் தொடர முடியும். பகலில் ஆய்வகத்தில் ஆண்கள் இருப்பார்கள் என்பதால் கமலா தன்னுடைய வழிகாட்டியின் உதவியோடு இரவு நேரத்தில் மட்டுமே ஆய்வகத்தைப் பயன்படுத்த வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலே ஆய்வகத்தில் ஆண்களின் கவனத்தை கமலா சிதறடிக்கக் கூடாது! சக ஆராய்ச்சி மாணவியைப் பார்த்து கவனம் சிதறக் கூடாது என்று ஆண்களிடம் சொல்வதற்குப் பதிலாக, கமலாவை மாணவர்களின் முன்னால் வரக் கூடாது என்று சொல்வது எளிதாக இருந்தது. கவனம் சிதறுவது ஆண்களின் தவறுதானே தவிர, பெண்ணாகப் பிறந்த கமலாவின் தவறல்ல. வேதியியல் துறை மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த கமலா இந்த மூன்று நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டார். பெண்களின் அறிவு குறித்த விஞ்ஞானி ராமனின் எண்ணம் தவறு என்பதைத் தன் அறிவாலும் திறமையாலும் கமலா உணர்த்தினார். முதலாமாண்டுப் படிப்பைச் சிறந்த மதிப்பெண்களோடு முடித்து, இரண்டாமாண்டு முழுநேர மாணவியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
வழிகாட்டிய குரு
- முதுகலைப் படிப்பு கமலாவுக்கு வேறொரு பாடத்தையும் கற்றுத்தந்தது. சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றிருந்தபோதும் பெண் என்கிற ஒரே காரணத்துக்காகத் தான் நிராகரிக்கப் பட்டாலும் அதே வளாகத்தில்தான் அவருடைய குருவான சீனிவாசய்யாவைச் சந்தித்தார். ஆண்கள் அனைவருமே பெண்கள் குறித்த பிற்போக்கான கருத்துகளைக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதற்கு சீனிவாசய்யா உதாரணமாகத் திகழ்ந்தார். அவரது வழிகாட்டுதலில் உயிர்வேதியியலில் பல ஆய்வுகளை கமலா வெற்றிகரமாக முடித்தார்.
- முதுகலைப் படிப்பை முடித்த கமலாவுக்கு முனைவர் பட்டப் படிப்பில் சேர கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு கிடைத்தது. அங்கே 14 மாதங்களில் ஆய்வுப் படிப்பை நிறைவுசெய்த கமலா, பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் ஒன்றில் முனைவர் பட்டத்தை முடித்த முதல் இந்தியப் பெண் என்கிற பெருமையைப் பெற்றார். 1939இல் இந்தியா திரும்பியவர், ஊட்டச்சத்து, சீருணவு போன்றவை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். இந்தியாவில் தலைவிரித்தாடிய பஞ்சத்தைப் போக்க திட்டக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்த நேரம் அது. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் இந்தியக் குழந்தைகளுக்காகப் பனைமரத்திலிருந்து தயாரிக்கப்படும் ‘நீரா’ (பதநீர்) எனப்படும் சத்து ஆகாரத்தை அவர் பரிந்துரைத்தார். திருமணம், குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கைக்குள் நுழைந்தபோதும் தனது ஆய்வுப் பணிகளை கமலா நிறுத்தவில்லை. 1969இல் ஓய்வுபெறும்வரை ஆய்வுகளைத் தொடர்ந்தார்.
கல்விப் புரட்சி
- உயிர் வேதியியலில் பல்வேறு ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்த கமலாவுக்கு, 22 வயதில் அவர் அவமானப்படுத்தப்பட்டது ஆறாத காயமாக நிலைத்துவிட்டது. இந்தியப் பெண் விஞ்ஞானிகள் சங்கம் நடத்திய விழாவொன்றில் பேசிய கமலா, “மிகச் சிறந்த விஞ்ஞானியாக இருந்தபோதும் ராமன், குறுகிய மனப்பான்மை கொண்டிருந்தார். நான் பெண் என்பதால் என்னை அவர் நடத்திய விதத்தை மறக்கவே முடியாது. அது எனக்கு மிகப் பெரிய அவமானம். பாலினப் பாகுபாடு மிக மோசமாகச் செயல்பட்ட காலம் அது. நோபல் பரிசு பெற்ற ஒருவரே இப்படி நடந்துகொள்ளும்போது வேறு எதை எதிர்பார்க்க முடியும்?” என்று வருத்தத்தோடு பேசியிருந்தார். அதன் பிறகுதான் இந்திய அறிவியல் நிறுவனத்தில் நடந்த பாலினப் பாகுபாடு வெளியே தெரிந்தது. கமலாவின் குடும்பத்தினரும் இதை ஒப்புக்கொண்டதாக இந்திய அறிவியல் நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வை நிறைவுசெய்த அனிருபன் மித்ரா பதிவுசெய்திருக்கிறார்.
- அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தன் திறமையை நிரூபித்த கமலா, மற்றுமொரு புரட்சியையும் செய்திருந்தார். கமலாவின் வருகைக்குப் பிறகு இந்திய அறிவியல் நிறுவனத்தில் பெண்களுக்குத் தடைவிதிக்கப்படவில்லை. உயர்கல்வி பயிலும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதற்குக் காலந்தோறும் கமலாவைப் போன்ற பெண்களும் முற்போக்குச் சிந்தனை கொண்ட ஆண்களும் பாதை அமைத்துத் தந்திருக்கிறார்கள்.
- சமூக – சாதியக் கட்டுப்பாடுகளுக்கும் விஞ்ஞானி ராமனின் பெண்கள் குறித்த பிற்போக்குக் கருத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனக் காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டுக் கடைபிடிக்கப்பட்டுவந்த நடைமுறையின் வெளிப்பாடுதான் ராமன் நடந்துகொண்டதும். மிகச் சிலரே கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர். பெரும்பான்மை மக்கள், பெண்கள் உள்பட அனைத்தையும் பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றின் பெயரால் ஏற்றுக்கொள்கிறோம். வாய்ப்பை வழங்குகிற அதிகாரத்தில் இருப்பவர்களின் சிந்தனை பெண்களை எப்படி நல்லவிதமாகவும் கெட்டவிதமாகவும் பாதிக்கிறது என்பதற்கு சீனிவாசய்யாவும் ராமனும் முன்னுதாரணங்கள்.
நன்றி: இந்து தமிழ் திசை (01 - 10 – 2023)