TNPSC Thervupettagam

ராமர் ஏன் அப்படிச் செய்தார்?

February 2 , 2025 6 hrs 0 min 14 0

ராமர் ஏன் அப்படிச் செய்தார்?

  • ராவணன், சீதையை சிறையெடுத்துப்போய் தனது நகரத்தில் வைத்திருந்தான். அந்தச் சீதையுடன் ராமன் வாழ்க்கை நடத்துவது இழிவானதாகும் என்று மக்கள் பேசுவதாக ஒற்றர்கள் ராமனிடம் கூறுகின்றனர். ராமன் மிகுந்த மனவேதனை அடைகிறார். சீதை, தீயினுள் மூழ்கித் தன் கற்பை நிரூபித்தாள். என் மனத்துக்கும் தூய்மை உடையவளாகவே விளங்குகிறாள். ஆனாலும் உலகத்தார் சீதையைப் பழித்துரைக்கின்றனர். உலகத்தாரோடு இணங்கி நடப்பதே அரசனின் கடமை.எனவே, சீதையைக் காட்டிலுள்ள முனிவர்களின் இருப்பிடத்தில் விட்டுவர இலட்சுமணனைப் பணிக்கிறார் ராமன். சீதையைக் காட்டில்விட ராமன் உள்ளிட்ட யாருக்கும் உடன்பாடில்லை. ஆனாலும் ஊராரின் பழிக்கு அஞ்சியே ராமன் இதனைச் செய்யத் துணிகிறார். இந்த இடத்தில் ராமன் ஓர் அரசனாகவே இந்த முடிவை எடுக்கிறார். அசோகமித்திரன் இந்த நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு ‘உத்தர ராமாயணம்’ என்றொரு சிறுகதையை எழுதியிருக்கிறார்.
  • இக்​கதையில் தொன்மத்தை அவர் நேரடி​யாகப் பயன்படுத்​தவில்லை. ஆனால் இக்கதையின் மையம் உத்தர காண்டத்தின் நவீன வடிவமாக இருக்​கிறது. அசோகமித்​திரன் வாழ்க்கையில் நிழலைப்​போலப் பின்தொடரும் கசப்புகளை மெல்லிய பகடியாக மாற்றிப் புனைவுகளாக எழுதி​யவர். இவரது புனைவுகள் நவீனத்து​வத்தின் அடையாளங்கள். அவரது சிறுவயது அனுபவ​மாகவே இக்கதை எழுதப்​பட்​டுள்ளது.
  • ராம்லால், சோட்டு இருவரும் சகோதரர்கள். அம்மாவுடன் வசிக்​கிறார்கள். ராம்லாலின் மனைவி ஜானகி​பாய். சகோதரர்கள் இருவரும் பால் வியாபாரம் செய்கின்​றனர்.
  • இவர்களுக்கு வெற்றிலைப் பாக்குக் கடையும் உண்டு. கதைசொல்​லியான சிறுவன் குழந்​தையி​லிருந்தே ஜானகி​பாயின் அரவணைப்பில் வளர்ந்​தவன். அவள் அழகாக இருப்​பாள். எளிமையான புடவைதான் உடுத்​தி​யிருப்​பாள். ஆனால் சுத்தம் மணக்க இருக்​கும். சகோதரர்கள் இருவருமே சுத்தத்​திற்கு எதிரானவர்கள். ஜானகிபாய் அவ்வளவு அன்பானவள். மணி கோத்தல், எம்ப்​ராய்டரி, தையல், சமையல் என எல்லாத் திறமை​களும் கொண்டவள். ஜானகிபாய் தன்னைச் சுற்றி​யுள்ள எல்லோருக்கும் உதவுகிறாள். அது அவள் குணம். அவளுக்குக் குழந்தை இல்லை. இதனை அவள் மாமியார் ஒரு குறையாகச் சொல்லிக்​கொண்டே இருக்​கிறாள். வீட்டிலும் அவ்வப்போது பிரச்சினை நடக்கிறது. எந்தச் சூழ்நிலை​யிலும் தூய்மையைப் பேணுவதைத் தன் சுபாவ​மாகவே மாற்றிக்​கொள்​கிறாள் ஜானகி​பாய். சகோதரர்​களுக்கு அது குறித்த எவ்விதப் புரிதலும் இல்லை.
  • ஜானகிபாய் ஒருநாள் வீட்டை​விட்டு வெளியேறி​விடு​கிறாள். சிறுவனின் அப்பா அவளைத் தேடச் சொல்கிறார். ‘நான் ராஜ்புத், தெரியுமா உங்களுக்கு? ஓடிப் போனவளை நான் மறுபடியும் வீட்டில் காலடி வைக்க விடமாட்​டேன்! அவளை அப்படியே கண்டந்​துண்டமாக வெட்டிப் போட்டு​விடு​வேன்’ என்கிறான் ராம்லால். சில நாட்களுக்குப் பிறகு சிறுவன் தன் வீட்டு எருமை​மாட்டைத் தேடிக்​கொண்டு பக்கத்துக் கிராமத்​திற்குச் செல்கிறான். ஜானகிபாயை அங்குப் பார்க்​கிறான். அவள் வசிக்கும் வீடு மிகச்​சிறியது. ஒரேயொரு அறை மட்டும். அதே ஒழுங்கு; அதே தூய்மை. ‘என்னைக் கோபித்​துக்​கொள்ள ஒன்றுமே கிடையாது, பாபு’ என்கிறாள் ஜானகி​பாய். வரும் வழியில் சைக்கிளில் ராம்லால் அந்த ஊர் பக்கம் போவதைப் பார்க்​கிறான். ‘என்ன விபரீதம் நிகழப் போகிறதோ?’ என்ற பதைபதைப்பில் ஓரமாக ஒதுங்கி நிற்கிறான். சிறிது நேரத்தில் ராம்லால் திரும்பி வருகிறான். அவன் கையில் ஜானகிபாய் வீட்டில் கவிழ்த்து வைத்திருந்த காலி பாத்திரங்கள் இருக்​கின்றன.
  • ‘உத்தர ராமாயணம்’ ராமன் குறித்த தொன்மக்​கதை​யின்மீது புதிய வாசிப்பை நிகழ்த்​தி​யிருக்​கிறது. அசோகமித்​திரன் எவ்வளவு சாதாரணமாக இதனைச் செய்திருக்​கிறார். படைப்​பாளியின் சார்பு அரசியலும் இக்கதைக்குள் தொழிற்​பட்​டிருக்​கின்றன. இக்கதையின் ராம்லால் ராமன்; ஜானகிபாய் சீதை. சோட்டு இயல்பாகவே இலட்சுமணனுக்​குரிய இடத்தைப் பெறுகிறான். எனவே, அசோகமித்​திரன் திட்ட​மிட்டே இக்கதையை எழுதி​யிருக்​கிறார். ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்​பியதற்குப் பின்னணி​யாகச் சமூக அழுத்தம் செயல்​பட்​டிருக்​கிறது. இதனைத்தான் ராம்லால் கதாபாத்​திரத்தின் மூலமாக அசோகமித்​திரன் வெளிப்​படுத்​தி​யிருக்​கிறார். சீதை எதிர்​கொண்ட பிரச்​சினையைத்தான் ஜானகிபாய் நிகழ்​காலத்தில் எதிர்​கொள்​கிறாள். அங்கே கற்பு காரணமாகப் பேசப்​பட்டது; இங்கே குழந்​தை​யின்மை. இரண்டு பிரச்​சினை​களுமே பெண்ணுடல் சார்ந்தது என்பதைக் கவனிக்க வேண்டும்.
  • சீதையைக் காட்டுக்கு அனுப்பு​வதில் ராமனுக்கு விருப்பம் இல்லை; நாட்டு மக்களின் பழிச்​சொல்​லுக்கு அஞ்சியே அவளைப் பிரிந்தார் என உத்தர காண்டம் சொல்கிறது. இச்சிறுகதை​யிலும் அதுதான் நிகழ்​கிறது. பொதுவெளியில் ராஜ்புத் சமூகத்தின் பெருமையை ராம்லால் பேசிக் கொண்டிருந்​தாலும் ஜானகி​பாயைப் பிரிவதில் அவனுக்கும் உடன்பாடில்லை என்பதை அசோகமித்​திரன் எழுதி​யிருக்​கிறார். இச்சிறுகதை ஜானகி​பாய்க்கு ஏன் குழந்தை இல்லை என்பதை விவாதிக்க​வில்லை. அது இந்தக் கதையின் நோக்கமும் இல்லை. எந்தப் பிரச்​சினையின் பொருட்டும் ஒரு பெண் மட்டும் ஏன் வீட்டை​விட்டு வெளியேற்​றப்​படு​கிறாள் என்ற புள்ளியைத்தான் கதை விவாதத்​துக்கு எடுத்துக் கொள்கிறது.
  • அசோகமித்​திரன், ஜானகி​பாயின் குணத்தைச் சீதையின் புனிதத் தன்மை​யுடன் ஒப்பிட்டு தொடர்ந்து நினைவு​படுத்​திக்​கொண்டே இருக்​கிறார். ஜானகிபாய் இருக்​குமிடம் அவ்வளவு தூய்மையாக இருக்​கிறது. எளிய வாழ்க்கை வாழ்ந்​தாலும் அதில் ஒரு நிறைவைக் காண்கிறாள். பக்கத்து​வீட்டில் வசித்த சிறுவனின் குடும்பத்தைத் தன் குடும்​பம்​போலக் கவனித்துக் கொள்கிறாள். அந்த வீட்டில் கடைசியில் பிறந்த மூன்று குழந்தை​களுக்கும் இவள் அம்மாவைப்​போன்றே அன்பு காட்டு​கிறாள். அக்குழந்தை​களைப் பார்க்​குந்​தோறும் வாரி அணைத்துக் கொள்கிறாள். இவளைத்தான் இச்சமூகம் அழுத்தம் கொடுத்து வெளியேற்றுகிறது. எளியவர்​களின் அன்பை அசோகமித்​திரன் தம் புனைவு​களில் தொடர்ந்து கவனப்​படுத்​திக்​கொண்டே வந்திருக்​கிறார். இந்தக் கதையிலும் அது தொடர்ந்​திருக்​கிறது.
  • ஜானகிபாய் வீட்டை​விட்டு அவளாக வெளியேறி​னாளா? இல்லை ராம்லாலின் ஏற்பாடா என்பதெல்லாம் புனைவின் மறைபொருள். ஜானகி​பாய்க்கு குழந்தை குறித்த ஏக்கம் இல்லாமல் இல்லை. அந்த ஏக்கத்தைத் தணித்​துக்​கொள்ளவே சிறுவனின் வீட்டிற்கு அடிக்கடி வருகிறாள். அதுவும் ஒரு கட்டத்தில் குறையத் தொடங்கு​கிறது. இதற்கிடையில் சோட்டு​வுக்குத் திருமணம் நடந்து, அடுத்த வருடமே குழந்​தையும் பிறந்து விடுகிறது. ஜானகி​பாய்க்கு அழுத்தம் அதிகரிக்​கிறது. எனவே, தன்னைக் காணாமல் ஆக்கிக்​கொள்​கிறாள்.
  • இச்சிறுகதையில் ஜானகி​பாயின் கதையுடன் ஓர் எருமை​மாட்டின் கதையும் தொடர்ந்து வருகிறது. காணாமல்போன எருமையைத் தேடி அச்சிறுவன் அலைகிறான். ஆனால், அன்பு காட்டிய ஜானகிபாயை அக்குடும்பம் கைவிட்டு​விடு​கிறது. ஜானகி​பாயின் துயரத்​தின்மீது வாசகர்​களின் கவனம் குவிவதைக் கட்டுப்​படுத்​தவும் எருமை​மாட்டின் கதை பிரதிக்குப் பயன்பட்​டிருக்​கிறது. சமூக அழுத்​தத்தின் காரணமாகவே ராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்​பினார் என்பதையே இக்கதை பிரதான​மாகப் பகிர்ந்​து​கொள்​கிறது. ராமனைக் குற்றவுணர்​விலிருந்து விடுவித்​திருக்கிறது. தன் படைப்​பினூடாக ராமனின் செயலுக்கு நியாயம் சேர்த்​திருக்​கிறார் அசோகமித்​திரன்​.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories