TNPSC Thervupettagam

ராவணன் மீசையை பார்த்திருக்கிறீர்களா

December 16 , 2023 379 days 344 0
  • ராவணன் மீசை எனக்கு அறிமுகமானது, சிறு வயதில் அம்மாவிடம் நான் கேட்ட கதைகளின் வழியேதான். அம்மா படித்தது வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில். அவரது பள்ளி நாள்களில் அங்குள்ள கடற்கரைக்குச் சென்றிருந்தபோது பார்த்த ராவணன் மீசை, சீதா பவளத்தைப் போன்ற கடலோரத் தாவரங்களைப் பற்றிக் கூறுவார். நெய்தல் நிலப் பகுதியில் வசிப்பவராக இருந்தால், கடற்கரையோரம் உள்ள மணல் மேடுகளில் ராவண மீசையைக் கண்டிருக்கலாம். சினிமா பார்ப்பவராக இருந்தால் - குறிப்பாக அதில் வரும் தாவரங்களையும், மற்ற உயிரினங்களையும், நிலவமைப்பையும் கவனிப்பவராக இருந்தால் 90களில் வெளிவந்த ‘ஆவாரம்பூ’ திரைப்படத்தில் இந்தச் செடியைக் கண்டிருக்கலாம். படத்தின் நாயகன் முதன்முறையாகக் கடலைப் பார்த்ததும் ‘எவ்ளோ பெரிய குளம்!’ என்று வெகுளியாகப் பேசுவார். அந்தக் காட்சிக்கு அடுத்ததாக ராவணன் மீசை காட்டப்படும்.

பெயர்க்காரணம்

  • கடலோரத்தில் கொத்துக்கொத்தாக வளர்ந்தாலும், இதன் கிளைகள் தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இதனாலேயே இதற்கு இப்பெயர் வந்திருக்கக்கூடும். இவற்றின் கூர்மையான முனைகளைக் கொண்ட பந்து போன்ற உருண்டையான விதை, காய்ந்தவுடன் உதிர்ந்து, காற்றடிக்கும்போது வெவ்வேறு இடங்களுக்குப் பரவும். இது ஒரு புல் வகைத் தாவரம். இதன் அறிவியல் பெயர் ஸ்பினிஃபெக்ஸ் லிட்டோரியஸ் (Spinifex littoreus). தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் இது பரவிக் காணப்படுகிறது. மணல் அரிப்பைத் தடுக்கும் இயல்புடையத் தாவரம்.

பெயரின் வயது

  • கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் மதராசப்பட்டினம் புனித ஜார்ஜ் கோட்டையின் மருத்துவராக இருந்த எட்வட் பல்க்லி குறித்த விவரங்களைப் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு சுவாரசியத் தகவல் கிடைத்தது. அது சார்ந்து ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ தாவரவியல் பூங்காவில் தாவரவியலாளராக உள்ள முனைவர் ஹென்றி நோல்டியின் கட்டுரையைப் படித்தேன். அதில் உலர் தாவரத்தின் பாடம்செய்யப்பட்ட படம் ஒன்று இருந்தது. அதை உற்றுநோக்கிய போது, அதில் Ravanumese Malab என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டு வியப் படைந்தேன். ராவணன் மீசை எனும் தமிழ்ப் பெயர்தான் Ravanumese என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. Malab என்றால் தமிழ் மொழியைக் குறிக்கும்.
  • இதை உறுதிப்படுத்த ஹென்றியை மின்னஞ்சலில் தொடர்புகொண்டபோது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்கையியல் முன்னோடிகளில் ஒருவரான ஜான் ரே, லத்தீன் மொழியில் பதிப்பித்த ஹிஸ்டோரா பிளான்டாரம் (Historia Plantarum) எனும் நூலின் மூன்றாவது பாகத்திலும் இதே பெயர் தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் பாகம் வெளிவந்தது பொ.ஆ. (கி.பி.) 1704இல்.
  • அப்படி என்றால் ராவணன் மீசை என்கிற பெயர் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு சுமார் 320 ஆண்டுகள் ஆகின்றன! இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாவரத்தின் பெயர் மலையாளத்தில் இல்லி முள்ளு என ஹோர்ட்டஸ் மலபாரிகஸ் (Hortus Malabaricus) எனும் மலபார் (தற்போதைய கேரளம்) பகுதியிலுள்ள தாவரங்களின் விவரங்களும், வரைபடங்களும் அடங்கிய 12 பாகங்களைக் கொண்ட தொகுப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
  • சங்க இலக்கியத்தில் இத்தாவரம் பற்றிய குறிப்பு உள்ளதா என முனைவர் கு. வி. கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது, இருப்பதற்கான வாய்ப்பு உண்டு, சரியாகத் தேடிப்பார்க்க வேண்டும் என்றார். இந்தத் தாவரத்திற்குக் கடலோரப் பகுதிகளில் உள்ள ஊர்களில் வேறு சில பெயர்கள் இருக்கக்கூடும். அவற்றையெல்லாம் ஆவணப்படுத்த வேண்டும்.

ஹெர்பேரியம்

  • தாவரங்களைப் பாடம்செய்து வைக்கும் முறைக்கு ஆங்கிலத்தில் Herbarium (ஹெர்பேரியம்) என்பர். சரி, இந்த ராவணன் மீசை தாவரத்தின் ஹெர்பேரியம் எப்படி ஸ்காட்லாந்துக்குச் சென்றது? கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் மருத்துவர்களாக இருந்த சாமுவேல் பிரெளன், எட்வட் பல்க்லி ஆகிய இருவரும் அப்பகுதிக்கு அருகில் உள்ள பல மருத்துவக் குணமுள்ள தாவரங்களைச் சேகரித்து, இங்கிலாந்தில் உள்ள தாவரவியலாளர்களுக்கு அனுப்பி யுள்ளனர். அப்படி பொ.ஆ. 1700-1712 ஆண்டுகளில் அனுப்பப்பட்ட தொகுப்பில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒன்றுதான் இந்த ராவணன் மீசை தாவரத்தின் ஹெர்பேரியம்.
  • மதராசப்பட்டினத்தில் வாழ்ந்து மறைந்த எட்வட் பல்க்லியின் சமாதி சென்னை மருத்துவக் கல்லூரிக்கு எதிரே உள்ள ராணுவ வளாகத்தில் உள்ளது. அதில் உள்ள லத்தீன் வாசகத்தின் தமிழாக்கம்: ‘ஓ பயணியே, ஆச்சரியப்படாதே. இந்தத் தோட்டத்தில் இவர் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தினார். மீண்டும் புத்துயிர் பெறும் நம்பிக்கையுடன் இத்தோட்டத்தில் தன் உயிரற்ற உடல் இளைப்பாற விரும்பினார்.’ இதில் நாம் கவனிக்க வேண்டியது, ‘தோட்டம்’ எனும் வார்த்தையை. ஹெர்மன் மோல் என்பவர் பொ.ஆ. 1717இல் தயாரித்த புனித ஜார்ஜ் கோட்டைப் பகுதியின் நிலப்படத்தில் குறைந்தது பத்து இடங்களில் Garden (தோட்டம்) என்கிற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இவற்றில் பெரும்பாலானவை மூலிகைத் தாவரத் தோட்டங்களே. இவற்றில் ஒன்றுதான் எட்வட் பல்க்லியின் தோட்டமும். இவரும் சாமுவேல் பிரெளனும் உள்ளூர் சித்தா, யுனானி மருத்துவர்களிடமிருந்து மூலிகைத் தாவரங்கள் குறித்த தகவல்களைச் சேகரித்தும், அத்தாவரங்களை அங்குள்ள தோட்டங்களில் வைத்து வளர்த்தும் வந்துள்ளனர். உள்ளூர் ஆள்களின் உதவியுடன் பல இடங்களில் இருந்து தாவரங்களைச் சேகரித்து வந்துள்ளனர். இத்தாவரங்களைச் சேகரித்து பாடம்செய்வது மட்டுமல்லாமல் அவற்றின் தமிழ், தெலுங்குப் பெயர்களையும் ஆவணப்படுத்தியுள்ளனர். தாவரங்களின் மருத்துவக் குணங்களைப் பற்றிய ஆய்வில் மருத்துவத் துறைக்கும் தாவரவியலுக்கும் இவர்கள் பெரும் பங்களித்துள்ளனர் என்தில் சந்தேகமில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories