PREVIOUS
இந்தியப் பிரதமர்களில் நேருவுக்குப் பின் அதிகமான தாக்கத்தை வரலாற்றில் உண்டாக்கியவரான பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த நூற்றாண்டில் அவரை நாடு நினைவுகூர்வதானது, அவருடைய முக்கியத்துவத்தை மட்டும் அல்லாமல், அவரைப் போன்ற ஆளுமைகளின் முக்கியத்துவத்தையும், அவர்களைப் போன்றோரிடமிருந்து நாடு பெற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களையும் பேசுவதற்கான தருணத்தை உருவாக்கியிருக்கிறது.
பிரதமராகப் பொறுப்பேற்கும் வரை தன்னுடைய கட்சித் தலைமை வகுத்த பாதையிலேயே பயணப்பட்டுவந்தவரான ராவ், தன்னுடைய கட்சியையும் நாட்டையும் ஒருசேர அடுத்த கட்டப் பயணத்துக்கு அழைத்துச்செல்லும் கால நிர்ப்பந்தப் பின்னணியிலேயே பிரதமர் ஆனார்.
சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப் பின் உலகச் சூழல் முற்றிலும் மாறத் தொடங்கியிருந்த நிலையில், மாற்றத்தின் திசை அறிந்து தேசத்தைச் செலுத்தியவர் அவர்.
நாட்டு மக்களிடம் முதல் தடவையாகத் தொலைக்காட்சியில் உரையாற்றியபோதே நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியைப் பற்றித்தான் அவர் பேச வேண்டியிருந்தது.
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்குத் தங்கத்தை அடமானம் வைக்கும் நிலைக்கு அன்றைக்கு இந்தியா தள்ளப்பட்டிருந்தது.
காங்கிரஸின் சோஷலிஸத் தலைமுறையின் பிடிமானத்தோடு வளர்ந்தவர்தான் என்றாலும், முன்னதாக இந்தியா தேர்ந்தெடுத்திருந்த பொருளாதாரக் கொள்கையின் காலத் தேக்கத்தையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார்.
மன்மோகன் சிங் போன்ற ஒரு பொருளியல் நிபுணரின் கைகளில் தேசத்தின் நிதித் துறையை ஒப்படைத்து, அவருடைய உத்வேகமான செயல்பாட்டுக்கு உறுதியான ஆதரவைத் தந்தார்.
இந்தியத் தொழில் துறையை ‘லைசென்ஸ் சிறை’யிலிருந்து அவர் விடுவித்தார் என்று சொல்வதைக் காட்டிலும் இந்தியச் சந்தையை உலகச் சந்தையோடு அவர் இணைத்தார் என்று சொல்லலாம்.
இதன் விளைவுகள் முழுக்கவும் நேர்மறையாக மட்டுமே இருந்தன என்று சொல்லிவிட முடியாது.
முக்கியமாக, ஏழை – பணக்காரர் பிளவு மேலும் மேலும் தீவிரமானது என்றாலும், பல கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர்; நடுத்தர வர்க்கத்தின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது; முக்கியமாக, பசிக்குப் பெரிய அளவில் இந்தியா விடை கொடுக்கத் தலைப்பட்டது.
உலகின் முன்னணிப் பொருளாதாரங்களில் ஒன்றாகவும், சர்வதேசச் செல்வாக்கு மிக்க சக்திகளில் ஒன்றாகவும் தலையெடுக்க ராவ் முன்னெடுத்த சீர்திருத்தங்கள் வழிவகுத்தன.
சீனாவில் மாவோவினுடைய கொள்கைகளின் உள்ளடக்கத்தை மாற்றிய டெங்கோடு ஒப்பிடக் கூடிய முன்னெடுப்பு நேருவினுடைய கொள்கைகளின் உள்ளடக்கத்தில் ராவ் முன்னெடுத்த மாற்றங்கள்.
ஆனால், சீனாவால் தவிர்க்க முடிந்த சீரழிவுகளை இந்தியாவால் தவிர்க்க முடியவில்லை. பொருளாதார முன்னேற்றத்தில் காட்டிய அக்கறையைச் சமூகங்களை ஒருங்கிணைப்பதிலும் சீனா காட்டியது இதற்கான காரணம்.
டெங்குக்கு இருந்த அரசியல் ஸ்திரத்தன்மை ராவுக்கு வாய்க்கவில்லை என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
வெறும் ஐந்து ஆண்டுகளில், தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கொண்டிருந்த சிறுபான்மை அமைச்சரவையைக் கொண்டே அவர் காரியங்களை முன்னெடுத்தார்.
கட்சியிலும் ஆட்சியிலும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே அவர் பயணப்பட வேண்டியிருந்தது. விளைவாக, பல சமரசங்களுக்கு ராவ் ஆட்பட்டார். சில விஷயங்களில் உறுதியான முடிவுகளை எடுக்கத் தயங்கினார்.
இந்த அணுகுமுறைதான் பாபர் மசூதி இடிப்பு அவருடைய அரசியல் வாழ்வின் பெரும் களங்கமாகச் சொல்லப்பட வழிவகுத்தது. மசூதி கூடவே கோயிலும் இடம்பெறும் ஒரு தீர்வை அவர் சிந்தித்தாலும் அதைச் சாத்தியமாக்கப் பெரிய முயற்சிகளை அவர் எடுக்கவில்லை.
சில அடிப்படையான விழுமியங்களைப் பாதுகாக்க தவறுவது சமூகத்தில் எவ்வளவு பெரிய பிளவுகளையும் சேதங்களையும் பின்னாளில் உருவாக்கிடும் என்பதையும் சேர்த்தே அவரை நினைவுகூரும் இந்தக் காலகட்டம் நமக்குச் சொல்கிறது.
நரசிம்ம ராவ் ஆட்சிக்குப் பிந்தைய கால் நூற்றாண்டு அனுபவம் சில முக்கியமான பாடங்களை இந்தியாவுக்குச் சொல்கிறது. பொருளாதாரம் தொடர்பிலான நம்முடைய பார்வையிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பும் சமூக ஒற்றுமையும் விலகிடலாகாது என்பதே அதில் முதன்மையானது.
நன்றி: தி இந்து (28-07-2020)