TNPSC Thervupettagam

ரிசர்வ் வங்கியின் உபரி நிதி

February 21 , 2019 2104 days 1566 0
  • மத்திய அரசின் கணக்குக்கு ரூ.28,000 கோடியை இடைக்கால உபரியாகத் தருவது என்று முடிவுசெய்திருக்கிறது ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம்.
உபரி நிதி
  • மொத்த ஜிடிபியில் 4% ஆக நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தியாக வேண்டிய நிலையில் இருக்கும் மத்திய அரசுக்கு இது மிகப் பெரிய ஆறுதல் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தொகையுடன் 2017-18 நிதியாண்டின் முதல் பாதியில் ரிசர்வ் வங்கி வழங்கிய ரூ.40,000 கோடியையும் சேர்த்தால் மொத்தம் ரூ68,000 கோடியாகிறது. 2017-18-ல் கிடைத்த ரூ.50,000 கோடியைவிட 2018-19ல் கிடைத்திருப்பது மிக அதிகம். இந்தக் கூடுதல் நிதி சில கேள்விகளுக்கு வழிவகுத்திருக்கிறது.
  • தொடர்ந்து இரண்டாவது நிதியாண்டாக மத்திய அரசுக்கு இப்படி உபரி நிதியை ரிசர்வ் வங்கி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.10,000 கோடி தரப்பட்டது. பங்குதாரர், இடைக்கால நிவாரணம் கேட்பதில் தவறு இல்லை. ஆனால், கடந்த ஆண்டில் உபரியாகக் கூடிய தொகையிலிருந்து முன்கூட்டியே இடைக்கால நிவாரணம் தர வேண்டும் என்று நெருக்குதல் தந்து வாங்குவதுதான் பிரச்சினையே!
  • உபரியைத் தருவதைத் தொடர்வதில்லை என்ற முடிவை ரிசர்வ் வங்கி எடுத்தால் அரசின் வருவாய் கணிசமாகச் சரிந்துவிடும். அடுத்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி உபரி தரும் என்ற எதிர்பார்ப்பில் ரூ.82,911 கோடி எதிர்பார்க்கும் வரவாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கி என்பது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல, மத்திய அரசும் பங்குதாரர் அல்ல. ரிசர்வ் வங்கியின் வருமானத்தையும் உபரி வளர்ச்சியையும் வணிகநோக்கில் அளவிடக் கூடாது. ரிசர்வ் வங்கிக்கு வரும் வருமானத்தில் பெரும்பகுதி, அரசியல் சட்டப்படி அது ஆற்றும் கடமைகளுக்காகப் பெறப்படுவது என்பதை மறந்துவிடக் கூடாது.
விமல் ஜலான் குழு
  • ரிசர்வ் வங்கியின் மூலதனக் கட்டமைப்பை ஆராய்ந்து இதுபோன்ற பிரச்சினைகளுக்கு வழிகாட்ட ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் விமல் ஜலான் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பரிந்துரை இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் நிதி நிர்வாகம் தனிநபர்களைப் பொறுத்ததாக அல்லாமல், அமைப்புரீதியாக மேற்கொள்ளப்படுவதற்கு இந்தக் குழுவின் பரிந்துரைகள் வழிகாட்டும் என்று எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories