TNPSC Thervupettagam

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்குமா?

February 6 , 2025 8 hrs 0 min 11 0

ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்குமா?

  • பிப்ரவரி 1-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், வளர்ச்சி சார்ந்தது. மொத்த தேவையின் இரண்டு முக்கிய கூறுகள், தனியார் நுகர்வு மற்றும் தனியார் முதலீடு, இந்த இரண்டு கூறுகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யைத் தீர்மானிக்கின்றன. தனியார் நுகர்வு மட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60% பங்களிக்கிறது. பொருளாதாரத்தின் தற்போதைய மந்தநிலைக்கு, நகர்ப்புற மற்றும் கிராமப்புறத் துறைகளின் தனியார் நுகர்வு வீழ்ச்சி காரணமாகும்.
  • வருமான வரி விலக்கு, நிதியமைச்சர் வழங்கும் இதர சலுகைகள் நகர்ப்புற, கிராமப்புற மக்களின் கைகளில்-நுகர்வோரின் கைகளில் -அதிக பணத்தைக் கொண்டு சேர்க்கும். இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய். குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு நுகர்வு ஆகும். மீதமுள்ளவை சேமிப்பு மற்றும் சில முதலீடுகள். சலுகைகள் மற்றும் விலக்குகள் காரணமாக இழந்த வரி வருவாய் மொத்த வருவாயில் சுமார் 6% -8% ஆகும்.
  • கடந்த டிசம்பரில், சமையல் எண்ணெய்கள், சோப்புகள், ஷாம்புகள், பிஸ்கட், டீ போன்ற அன்றாடப் பொருட்களின் விலை 2% முதல் 5% வரை உயர்ந்தது. உற்பத்தியாளர்கள், விலைவாசி உயரும் போது, உற்பத்தியாளர்கள் லாபத்தைப் (மார்ஜின்ஸ்) பாதுகாக்கவும், உயரும் உள்ளீட்டுச் செலவுகளை ஈடுகட்டவும் விரும்புவார்கள். எப்படியிருந்தாலும், மக்களின் கைகளில் அதிகப் பணம் இருப்பதன் மூலம் சரிபார்க்கக் கூடிய விளைவு சில்லறை பணவீக்க குறியீட்டு தரவு ஆகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு இது ஒரு சவால்.
  • இந்த மாதம் 5-7 தேதிகளில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, புதிய ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்வதற்காக தனது இருமாதத்திற்கான ஒருமுறை கூட்டத்தை நடத்துகிறது. டிசம்பர் 10 -இலிருந்து புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட சஞ்சய் மல்ஹோத்ராவின் தலைமையில் புதிய வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் கூட்டம் நடைபெறுகிறது.
  • நடப்பு 2024-25 நிதியாண்டில், அக்டோபரில் இருந்து இந்தியப் பொருளாதாரம் தொடர்பான கவலை அதிகரித்து வருகிறது. அப்போதுதான் அமெரிக்க டாலர் மற்றும் பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. புதிய நிதியாண்டு தொடக்கத்திலிருந்தே மந்த நிலை தொடங்கியது. எனவே புதிய சூழ்நிலை மிகவும் சிக்கலானது. விலைவாசி உயர்வுக்கு மத்தியில், வளர்ச்சியை எப்படி உயர்த்துவது?
  • முந்தைய மூன்று காலாண்டுகளில் 8.0 சதவீதத்துக்கு இருந்த மேலான வளர்ச்சிக்குப் பிறகு நிதியாண்டு 2024 -இன் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டில், வளர்ச்சி விகிதங்கள் 6.3% மற்றும் 5.4% ஆக சரிந்தன. இது அரசாங்கத்திற்கு பெரும் அதிர்ச்சி. பணவீக்கத்துக்கு எதிரான நடவடிக்கையாக ஏப்ரல், 2023 முதல் நடைமுறைக்கு வந்து இன்னும் தொடரும் 6.5% வட்டி விகிதத்தை அவர்கள் குற்றம்சாட்டினர். பணவீக்க விகித கணக்கீட்டில், உணவுப் பணவீக்கத்தை புறக்கணிக்க வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
  • நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் நுகர்வு வீழ்ச்சியால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று வணிகர்கள் சொன்னார்கள். ஏனென்றால், அதிக வட்டி விகிதத்தின் காரணமாக நுகர்வு அதிகரிப்பதற்கான கடன்கள் குறைந்துள்ளன என்பது அவர்கள் வாதம். கடந்த அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் குளிர்கால மாதங்களில் உணவு மற்றும் காய்கறிகளின் விலைகள் குறைந்திருந்தாலும், இயற்கைப் பேரழிவு எதிர்பார்க்கப்படாதவை. நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கத்தின் கணக்கீட்டில் உணவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்கு 46% ஆகும். மனிதர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வானிலை தொடர்பான காரணிகளால் உணவு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 6.21% ஆக இருந்தது. ஆயினும் பண வீக்க இலக்கு 4 % -க்கு மேல், சாதகமான வானிலை காரணமாக நவம்பரில் பணவீக்கம் உணவுப் பணவீக்கத்துடன் 5.5 % ஆகக் குறைந்துள்ளது. டிசம்பரில் உணவுப் பணவீக்கம் 5.2 % ஆக இருந்தது.
  • ஜனவரி 2025 -இன் பணவீக்கத் தரவு பிப்ரவரி, 12 அன்று மட்டுமே கிடைக்கும் என்பதால், பிப்ரவரி 5-7 -ஆம் தேதிகளுக்குப் பதிலாக ரிசர்வ் வங்கி அதன் கமிட்டி கூட்டத்தை பிப்ரவரி மூன்றாவது வாரத்திற்கு (18-20 தேதிகளில்) ஒத்திவைக்குமா? என்று தெரியவில்லை.
  • இதற்கிடையில், டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதால் புதிய நிச்சயமற்ற தன்மைகள் அதிகரித்துள்ளன.
  • 2024 -ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, தேர்தல் பிரசாரம் மற்றும் அமெரிக்க வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பல. ஜனவரி 20 அன்று அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், கார்ப்பரேட் வரி விகிதத்தை தற்போதைய 25 % லிருந்து 15 % ஆகக் குறைப்பதாகவும், சுங்கச் சுவர்களுக்குப் பின்னால் உலகத்திற்கான உற்பத்திக்காக அமெரிக்க நிறுவனங்களை சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு திரும்பப் பெறுவதாகவும், மற்றும் சட்டவிரோத வந்தேறிகளை அவர்களின் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புதல் மூலம் மீண்டும் அமெரிக்கா வாகை சூடும் எனவும் நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.
  • செப்டம்பர் மாத இறுதியில், வெளிநாட்டு குறுகிய கால போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள், பெரிய வருமானத்தைத் தேடத் தொடங்கினர். அமெரிக்காவில் முதலீடு செய்வதற்காக வளர்ந்து வரும் சந்தை மற்றும் மேம்பாட்டுப் பொருளாதாரங்களில் வைத்திருக்கும் பத்திரங்கள் மற்றும் பங்குகளில் குறுகிய கால முதலீடுகளில் இருந்து அவர்கள் தங்கள் நிதிகளை எடுக்கத் தொடங்கினர். டாலர் குறியீட்டெண் முன்னெப்போதும் இல்லாத வகையில் 110 ஆக உயர்ந்தது. ஆப்பிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க கரன்சிகள் மட்டுமின்றி, முன்னேறிய நாடுகளின் கரன்சிகளும் மதிப்பு குறைந்துள்ளன.
  • யூரோ மற்றும் ஜப்பானிய யென் முறையே 7 % மற்றும் 11 % குறைந்துள்ளது. கடந்த 12 மாதங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு 3.6 % குறைந்தாலும், அது போதுமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வோர் பொருள்களைத் தவிர, இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருள்கள் உள்ளிட்ட, குறிப்பாக சுத்திகரிப்பு நிலையங்களுக்கான எரிசக்தி தொடர்பான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவை விலை உயர்வுக்கான அறிகுறிகளைக் காட்டின.
  • அக்டோபர் மாதம் முதல் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரியத் தொடங்கியது. இந்திய ரிசர்வ் வங்கி டாலரை ரூபாய்க்கு விற்பதன் மூலம் ஏற்ற இறக்கத்தைக் குறைக்க தலையிட்டு வருகிறது. பணப்புழக்கத்தின் இழப்பை ஈடுகட்ட திறந்த சந்தை நடவடிக்கைகளின் மூலம் பணப்புழக்க பற்றாக்குறையை சந்திக்க வேண்டும். இந்த செயல்பாட்டில், அந்நிய செலாவணி கையிருப்பு பெரும் உதவியாக உள்ளது.
  • செப்டம்பரில் எட்டப்பட்ட 705 பில்லியன் டாலர் என்ற சாதனை கையிருப்பு, ரூபாயின் ஏற்ற இறக்கத்தைத் தடுக்கவும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கவும் போதுமானதாக இருக்கிறது. தற்போது புத்தாண்டில், ஜனவரி 17 -ஆம் தேதியுடன் முடிவடைந்த முழு வாரத்தில் அந்நியச் செலாவணி 624 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது மற்றும் டாலர் மதிப்பு ரூ. 83 டாலரில் இருந்து ஜனவரி 17 -ஆம் தேதி வார கடைசி தேதியில் ரூ. 86 ஆக உயர்ந்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் வாராந்திர தரவு அறிவிக்கிறது.
  • பொருளாதாரம் பற்றிய ஜனவரியில் வெளியிடப்பட்ட அறிக்கையின் தொனியில் எச்சரிக்கையுடன் நம்பிக்கையும் உள்ளது. உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியின் தேவை மீண்டும் அதிகரிப்பதால், உணவுப் பணவீக்கம் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும். கிராமப்புறத் தேவைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இது விவசாயத்தால் நிறைவு செய்யப்படுகிறது. இது உள்கட்டமைப்புக்கான பொது மூலதனச் செலவின் (கேபெக்ஸ்) மறுமலர்ச்சியுடன், நிதியாண்டில் வளர்ச்சி 6.4 % ஆக இருக்கும் பணவீக்க அழுத்தங்கள் உள்ளன. ரூபாய் மதிப்பு சரிவைப் புறக்கணிப்பது தவறு. ஆக, இந்த கட்டத்தில் வட்டி குறைக்கப்பட வேண்டுமா என்பது கேள்வி.
  • நிதிக் கொள்கைக் குழு, அறியப்படாத ஆழத்தில் மூழ்குவதற்கு தயங்கக்கூடும். ஏப்ரல் 2025 -இன் அடுத்த இருமாத கூட்டத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருந்து அதன் பின்னரே வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றத்தைக் கருத்தில் கொள்ள விரும்பலாம். ஆகவே, வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இல்லை.
  • ரிசர்வ் வங்கி எந்த குறிப்பிட்ட செலாவணி மாற்று வீதத்தையும் குறி வைக்கவில்லை. தினசரி சந்தை வீதம், கட்டற்ற சந்தை சக்திகளால் நிர்ணயிக்கப்படும் பெயரளவு மாற்று வீதம் என குறிப்பிடப்படுகிறது. ஏற்றுமதி போட்டித்தன்மையை நிர்ணயிப்பதற்கான உண்மையான பயனுள்ள பரிமாற்ற வீதம் (ரியல் எஃபெக்டிவ் எக்சேஞ்ச் ரேட்) என அறியப்படுவது மிகவும் பொருத்தமானது. உண்மையான பயனுள்ள பரிமாற்ற வீதம் என்பது இந்தியா (இந்தியாநுகர்வோர் விலைக் குறியீடு) மற்றும் உலக விலைக் குறியீடு (அமெரிக்கா மற்றும் முக்கிய நாடுகளின் சராசரி நுகர்வோர் விலைக் குறியீடு) ஆகியவற்றின் ஒப்பீட்டு விலை நிலைகளுக்கு சரிசெய்யப்பட்ட விகிதம்) ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் நுகர்வோர் விலைக் குறியீட்டு தரவை வெளியிடுகிறது. இந்த மதிப்பீட்டு நடைமுறையால் இந்திய ரூபாயின் மதிப்பு 8 % அதிகமாக இருப்பதாக டிசம்பர் மாத வெளியீடு கூறுகிறது. எனவே, பெயரளவிலான ரூபாயின் மதிப்பு தற்போதைய 3.6 % வீழ்ச்சியிலிருந்து இன்னும், 4 % மேல் சரிந்தால் இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்தன்மையை மேம்படுத்தும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories