TNPSC Thervupettagam

ரேபிஸிலிருந்து மக்களைக் காக்க என்ன வழி

December 5 , 2023 406 days 549 0
  • சென்னை ராயபுரத்தில், சமீபத்தில் 28 பேரைக் கடித்த தெருநாய்க்கு ‘ரேபிஸ்’ தொற்று (rabies infection) இருந்ததாக வெளியான செய்தி, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடுமுழுவதும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில், தினமும் 20 முதல் 25 பேர் நாய்க்கடி சிகிச்சைக்காக வரும் நிலையில், இந்தச் செய்தி அதிர்ச்சி ஏற்படுத்தியதில் ஆச்சரியமில்லை. இந்நிலையில், வெறிநாய்க்கடி, ரேபிஸ் வைரஸ் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை.

ரேபிஸ் வைரஸ்

  • ரேப்டோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த, லைசா வைரஸ் வகைதான் ரேபிஸ் வைரஸ். இது புல்லட் வடிவத்தைக் கொண்டது. ரேபிஸ் தொற்றுக்குள்ளான குரங்கு, பூனை, குதிரை, நரி, கீரி, ஓநாய், வௌவால் போன்ற பாலூட்டி விலங்குகள் கடிப்பதன் மூலமும் மனிதர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் நாய்கள் மூலமாகவே ரேபிஸ் நோய் மனிதர்களுக்குப் பரவுகிறது. மனிதர்களின் அன்றாட வாழ்வில் அதிகம் தொடர்புள்ள விலங்கு, நாய்.
  • தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95% இந்த நோய் ஏற்படுகிறது. அதனால்தான் இதனை ‘வெறிநாய்க்கடி நோய்’ என்கிறோம். குழந்தைகள் நாய்க்கடிக்கு உள்ளாகும்போது, தொற்று ஆபத்து அதிகம். இந்த நோயால் உயிரிழக்கும் 10 பேரில் 4 பேர், 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் எனத் தெரியவந்திருக்கிறது. நாய் கடித்தாலே ரேபிஸ் வரும் என்று கூற முடியாது. ரேபிஸ் தொற்று இருந்தால்தான் அதற்கான வாய்ப்பு உண்டு. இருந்தாலும், எந்தவிதத்திலும் இந்த மோசமான நோய்க்கு வாய்ப்பு தரக் கூடாது என்பதால், நாயிடம் கடிபடுவதைத் தடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வெறிநாய் நம்மைக் கடித்தாலோ, பிறாண்டினாலோ அல்லது காயம்பட்ட இடத்தில் நக்கினாலோ, காயமே இல்லாத மெல்லிய சவ்வுப் பகுதியில் (mucous membrane) நக்கினாலோ ரேபிஸ் வைரஸ் நமக்குப் பரவுகிறது. பாதிக்கப்பட்ட வவ்வால் மூச்சுக் காற்றின் மூலம் தொற்று பரவ வாய்ப்பு உண்டு. ரேபிஸ் தொற்றுக்குள்ளான மனிதரிடமிருந்து மற்றவருக்குத் தொற்று பரவ வாய்ப்பு இருந்தாலும் அது மிக அரிதாகவே நிகழ்கிறது. மனிதத் தோல் அல்லது சதைப் பகுதியை அடைந்த வைரஸ், தண்டுவடத்துக்கும் மூளைக்கும் முன்னேறுகிறது. வைரஸ் மூளையை எட்டியவுடன் தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் அறிகுறிகள் தோன்றுகின்றன.

நோய் அறிகுறிகள்

  • ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாயின் எச்சில் மூலமாக இந்த வைரஸ் பரவுகிறது. அதாவது வைரஸ் கிருமி, அந்த நாய்க்கு நோய்க்கான அறிகுறிகள் தொடங்குவதற்கு 3 அல்லது 4 நாள்கள் முன்னதாகவே எச்சிலில் இருக்கும். தொடர்ந்து அந்த நாய் இறக்கும்வரை அதாவது, சுமார் 7 முதல் 10 நாள்கள் வரை எச்சில் மூலம் நோய் பரவுவதற்கு வாய்ப்பு உண்டு.
  • பொதுவாக, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட (Incubation period) மனிதர்களுக்கு 3ஆவது வாரத்தில் இருந்து 8ஆவது வாரத்துக்குள் அறிகுறிகள் தெரியவரும். ஒருசிலருக்கு மட்டும் பல மாதங்கள் கழித்தும் அறிகுறிகள் வரலாம். ஆரம்பத்தில் தலைவலி, சோர்வு, தொண்டை வலி, லேசான காய்ச்சல் 3 அல்லது 4 நாள்களுக்குக் காணப்படும். தொடர்ந்து நரம்பு மண்டலத்தின் பாதிப்பால் பிரகாசமான ஒளி, சத்தத்தைப் பொறுத்துக்கொள்ள இயலாமை காணப்படும்.
  • சிலருக்கு, காற்றை எதிர்கொள்ள முடியாத அச்ச உணர்வு (ஏரோபோபியா [aerophobia]) காணப்படும். மன அழுத்தம், கவனச் சிதறல், உடல் உறுப்புகள் செயலிழப்பு, அளவுக்கு அதிகமாக எச்சில் சுரத்தல் போன்றவை ரேபிஸ் நோயின் அறிகுறிகள். நோயின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்போது, ஹைட்ரோபோபியா (hydrophobia) எனப்படும் நீரைக் கண்டு அஞ்சுதல், நீரைக் கண்டால் அல்லது தண்ணீர் சத்தம் கேட்டால் வெறுக்கும் தன்மை, பதற்றம் ஆகியவை ஏற்படும்

நாய் கடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்

  • முதலாவதாக, கடிபட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் 10 நிமிடங்களுக்கு நன்றாகக் கழுவ வேண்டும். வைரஸ் கிருமிநாசினி அயோடின் தயாரிப்புகள் மூலம் காயத்தைக் கழுவுவது அவசியம். இரண்டாவதாக, விலை உயர்ந்த மருந்தான ரிக் (Rabies Immunoglobulin) மருந்தை, கடிபட்ட இடத்தைச் சுற்றிலும் அதிகமாகவே ஊசி மூலம் செலுத்திவிட்டு, மீதமுள்ள மருந்தை வழக்கம்போல் ஊசி மூலம் உடலில் செலுத்த வேண்டும். குறிப்பாக, ரத்தக் காயம் உள்ளிட்ட மூன்றாவது நிலை (Class 3) நாய்க்கடிக்குக் கட்டாயம் இதைச் செலுத்த வேண்டும்.
  • மூன்றாவதாக, ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும். நாய் கடித்தவுடன் ஒரு தடுப்பூசி, அதன் பின்னர் மூன்றாவது நாள், ஏழாவது நாள், 14 ஆவது நாள் என (0, 3, 7, 14 என்ற நாள் வரிசையில்) நான்குரேபிஸ் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும்.விலங்கு கடித்தால் கர்ப்பிணிகள் அல்லது பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வளரும் கருவைத் தடுப்பூசி பாதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊசிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் உள்ளன. நாய்க்கடிதானே என்று யாருமே அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. கண்டிப்பாக ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.

முன்னெச்சரிக்கைத் தடுப்பூசிகள்

  • ரேபிஸ் வைரஸ் ஆய்வகங்களில் வேலை பார்ப்பவர்கள், கால்நடை மருத்துவர்கள், எந்த நேரமும் வெறிநாய்களைக் கையாள வேண்டிய பணியாளர்கள் ஆகியோர் 0, 7, 28 என்ற நாள்களில் மூன்று தடுப்பூசிகள் (Pre exposure prophylaxis) போட்டுக்கொள்ள வேண்டும். மேலும், ரேபிஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள், மனிதர்களோடு தொடர்பு ஏற்படக்கூடிய - நாய் பிடிக்கும் தொழிலாளர்களும், மருத்துவப் பணியாளர்களும் தடுப்பூசியைத் தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும்.
  • இறந்த விலங்குகளிலிருந்தும் ரேபிஸ் பரவலாம் என்பதால், விலங்குகளின் சடலங்களைக் கவனமாகக் கையாள வேண்டும். வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள், கால்நடை மருத்துவரிடம் அவற்றை அழைத்துச் சென்று, கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். வீட்டு விலங்குகளுக்கு உரிய காலத்தில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
  • மேலும், சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாய்களுக்கான கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்குத் தடுப்பூசி போடுவதை 100% உறுதிப்படுத்த வேண்டும். அதுபோல நாய்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க (Castration) வேண்டும். அரசு மட்டு மின்றி, தன்னார்வலர்களும், பொதுமக்களும் முயன்றால்தான் இவையெல்லாம் சாத்தியமாகும்.
  • ஒருவருக்கு ரேபிஸ் வந்தால் மரணம் உறுதி என்பதை அனைவரும் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். இன்று எத்தனையோ சவால் களைச் சமாளித்து, வெவ்வேறு வகையில் ஏற்படும் உயிரிழப்புகளை நாம் வெகுவாகக் குறைத்துள்ளோம். இந்த நிலையில், தொடர்ந்து வெறிநாய்க் கடியால் உயிரிழப்பு ஏற்படுவதை நம்மால் அனுமதிக்க முடியாது. ரேபிஸால் இனி ஒரு உயிரைக்கூடப் பலியாகவிடமாட்டோம் எனச் சபதம் ஏற்போம். நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, தடுப்பூசி செலுத்தி, ஆரோக்கியமாக மனிதகுலம் வாழ உறுதியேற்போம்!

நன்றி: தி இந்து (05 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories