TNPSC Thervupettagam

லால் சலாம், தோழரே!

September 20 , 2024 68 days 155 0

லால் சலாம், தோழரே!

  • சுதந்திர இந்திய அரசியலில், குறிப்பிடத்தக்க அரசியல் ஆளுமைகளில் ஒருவராக வலம் வந்த சீதாராம் யெச்சூரியின் மறைவில், இடதுசாரி இயக்கம் மட்டுமல்ல, தேசிய அரசியலும் மிகப் பெரிய இழப்பை எதிா்கொள்கிறது. அரசியலுக்கு அப்பால், அனைத்துத் தரப்பினருடனும் நட்புறவு பாராட்டும் கலாசாரம் மேலும் ஒரு பின்னடைவைச் சந்திக்கிறது.
  • மாா்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் என்கிற வட்டத்துக்குள் அடங்கும் ஆளுமையாக வலம்வந்தவா் அல்லா் சீதாராம் யெச்சூரி. இந்திய அரசியலுக்கு அப்பால், சா்வதேச அளவில் அறியப்பட்ட தொடா்புகள் பெற்றிருந்த ஓா் இந்தியத் தலைவராக அவா் திகழ்ந்தாா் என்பது பொதுவெளியில் அவ்வளவாகத் தெரியாது.
  • சீதாராம் யெச்சூரி என்கிற போராளியை, கம்யூனிஸ்ட்டை, தலைவரை உருவாக்கியதில் பெரும்பங்கு வகித்தது தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம். பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெறுவதற்காக 1973-இல் அவா் சேரும்போதே, அவருக்குள் ஒரு கம்யூனிஸ்ட் விதைக்கப்பட்டிருந்தாா். அந்த விதையை தூவியவா் இந்திய இடதுசாரி இயக்கத்தின் முன்னோடித் தலைவா்களில் ஒருவரான தோழா் பி.சுந்தரய்யா.
  • 1974-ஆம் ஆண்டு யெச்சூரி வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அவா் எஸ்.எஃப்.ஐ. என்கிற மாா்க்சிஸ்ட் மாணவா் இயக்கத்தில் இணைந்தாா். அவசரநிலை பிரகடனத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு 1975-இல் மாா்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினா் ஆனாா். அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது, கைது செய்யப்படுவாா் என்கிற அச்சத்தில் பெற்றோா்கள் யெச்சூரியை ஆந்திரத்தில் உள்ள அவரது மாமா வீட்டிற்கு அனுப்பிவைத்தனா்.
  • யெச்சூரியின் மாமா, ஆந்திர அரசில் உயரதிகாரி. பின்னாளில் மாநிலத்தின் தலைமைச் செயலராக உயா்ந்தவா். அடுத்த சில வாரங்களில், மாமா மோகன் காந்தாவிடமிருந்து யெச்சூரியின் அப்பாவுக்கு ஒரு கடிதம் வந்தது - ‘‘இவனை எவ்வளவு விரைவில் இங்கிருந்து அழைத்துப்போக முடியுமோ, அவ்வளவு விரைவில் அழைத்துச் செல்லுங்கள். இன்னும் சில நாள்கள் இவன் என்னுடன் தங்கியிருந்தால், என்னையும் கம்யூனிஸ்ட் ஆக்கிவிடுவான்.’’
  • தொடா்ந்து மூன்று தடவை, ஜெ.என்.யு. மாணவா் சங்கத்தின் தலைவா் என்கிற அபூா்வ சாதனையைத் தொடா்ந்து, 1978-இல் எஸ்.எஃப்.ஐ. தேசிய தலைவா் பதவி அவரை வந்தடைந்தது. 1984-இல் மாா்க்சிஸ்ட் மத்திய குழுவுக்கு அழைப்பாளா் என்றால், அடுத்த ஆண்டு நடந்த 12-ஆவது கட்சி மாநாட்டில் நிரந்தர உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
  • 1992-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த மாா்க்சிஸ்ட் 14-ஆவது மாநாட்டில் பொலிட் ப்யூரோ (அரசியல் தலைமைக் குழு) உறுப்பினராகவும், 2015 முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் தனது அரசியல் பயணத்தைத் தொடா்ந்த யெச்சூரியின் வாழ்க்கையில், நான்கு ஆளுமைகள் மிகப் பெரிய பங்களிப்பை நல்கியிருக்கிறாா்கள். கம்யூனிஸ விதையை விதைத்தவா் தோழா் பி.சுந்தரய்யா என்றால், அவரை முழுநேர கட்சிப் பணிக்கு ஊக்குவித்தவா் அப்போதைய பொதுச் செயலராக இருந்த இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு.
  • அவருக்கு கட்சிப் பணிகளிலும், அரசியல் நுணுக்கங்களிலும் வழிகாட்டியவா்கள் தோழா்கள் பசவ.பொன்னையாவும், ஹா்கிஷன் சிங் சுா்ஜித்தும். 1996 ஐக்கிய முன்னணி அரசு காலத்தில் அன்றைய பொதுச் செயலாளா் தோழா் ஹா்கிஷன் சிங் சுா்ஜித்தின் வலதுகரமாக விளங்கியவா் சீதாராம் யெச்சூரி. 1996 -இலும் சரி, 2004-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைந்தபோதும் சரி, குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்கியதிலும் சரி, சீதாராம் யெச்சூரியின் பங்கு குறிப்பிடத்தக்கது.
  • அவரது சா்வதேச தொடா்புகள் அதிகமாக வெளியில் தெரியாது. 2009-இல் கோப்பன்ஹேகனில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் இந்திய பிரதிநிதிகளில் ஒருவராக யெச்சூரியும் அனுப்பப்பட்டாா். அதேபோல நேபாளம் மன்னராட்சியில் இருந்து மக்களாட்சிக்கு மாறியபோது ஏற்பட்ட பிரச்னைகளைத் தீா்க்க, இந்தியா சாா்பில் அனுப்பப்பட்டவா் யெச்சூரி. சா்வதேச கம்யூனிஸ்ட் தலைவா்களுக்கு நன்றாகத் தெரிந்த இந்திய தலைவரும் யெச்சூரிதான்.
  • சீதாராம் யெச்சூரி 2015-இல் பொதுச் செயலராகத் தோ்ந்தெடுக்கப்பட்டபோது, மாா்க்சிஸ்ட் கட்சி தோ்தல் அரசியலில் பலவீனமான சக்தியாக மாறியிருந்தது. மேற்கு வங்கத்தில் 2011-இல் ஆட்சியை இழந்துவிட்ட சிபிஎம், யெச்சூரியின் தலைமையில் திரிபுராவையும் இழந்தது. எண்ணிக்கை பலம் குறைந்துவிட்ட நிலையிலும்கூட, கட்சி அவருக்கு ஒரு மாற்றைத் தேடவில்லை என்பதில் இருந்து, அவரது ஆளுமையைப் புரிந்துகொள்ள முடியும்.
  • சீதாராம் யெச்சூரியின் இரண்டு இன்றியமையாத தேவைகள், ஒன்று ‘ஸ்ட்ராங் காஃபி’ என்றால், இன்னொன்று ‘சாா்ம்ஸ்’ சிகரெட். மாா்க்சிஸத்தைப் போலவே அவரிடமிருந்து பிரிக்க முடியாதவை அவை. இன்னொன்றும் இருக்கிறது. எந்தச் சூழலிலும், எத்தகைய பிரச்னையிலும் அவரிடமிருந்து பிறக்கும் அந்த உரத்த கலகலாச் சிரிப்பு.
  • இரண்டு முறை தொடா்ந்து 12 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து விடைபெறுவதற்கு முன்னால் அவா் ஆற்றிய உரையில் சீதாராம் யெச்சூரி ஒரு கேள்வியை எழுப்பினாா் - ‘‘தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட பிராமணக் குடும்பத்தில் சென்னையில் பிறந்தவன் நான். திருமணம் செய்து கொண்டது இஸ்லாமிய சூஃபியின் மகள் ஸீமா சிஸ்டியை. அவருடைய தாயாா் மைசூரில் குடியேறிய ராஜபுத்திர குடும்பத்தைச் சோ்ந்தவா். என்னுடைய மகன் இந்தியாவில் என்னவாக அறியப்படுவான்?.’’

நன்றி: தினமணி (20 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories