TNPSC Thervupettagam

வக்ஃபு திருத்த மசோதா எதிர்க்கப்படுவதன் காரணம்

August 16 , 2024 149 days 208 0

வக்ஃபு திருத்த மசோதா எதிர்க்கப்படுவதன் காரணம்

  • வக்ஃபு சட்டத்தில் திருத்​தங்களை மேற்கொள்ள நாடாளு​மன்​றத்தில் கொண்டு​வரப்​பட்டிருக்கும் மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்​பி​யிருக்​கிறது. சிறுபான்​மை​யினரின் விவகாரங்​களில் தலையிடும் வகையிலும், அவர்களுக்குச் சொந்தமான நிலங்களை அரசு கையகப்​படுத்த வழிசெய்யும் வகையிலும் இந்த மசோதா அமைந்திருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பின்னணி என்ன?

  • இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள், செல்வந்​தர்கள், மக்களின் பயன்பாட்டுக்காக இறையருள் பெருகத் தங்கள் பகுதியில் இருக்கும் மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் பெயரால் தானமாக வழங்கப்​பட்டவையே வக்ஃபு சொத்துக்​களாகும். அவை அசையும் சொத்துக்​களாக​வும், அசையாச் சொத்துக்​களாகவும் இருக்​கின்றன. இந்தச் சொத்துக்​களைக் கண்காணிப்​ப​தற்​காக​வும், அதில் தவறு நிகழ்ந்​து​விடக் கூடாது என்பதற்​காக​வும், நாடாளு​மன்​றத்தில் வக்ஃபு சட்டங்களை அரசு 1954இல் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங்​களிலும் வக்ஃபு வாரியங்கள் 1958இல் ஏற்படுத்தப்​பட்டன.
  • இச்சட்டங்கள் பின்னர் 1995இல் விரிவாக்கம் செய்யப்​பட்டு, முழுமைப்​படுத்​தப்​பட்டு, அந்தச் சட்ட விதிகளின் அடிப்​படையில் அவை நிர்வகிக்​கப்​பட்டும், கண்காணிக்​கப்​பட்டும் வருகின்றன. இந்த நிலையில்​தான், வக்ஃபு வாரியத்தின் நிர்வாகச் செயல்​திறனை மேம்படுத்​திட​வும், வக்ஃபு வாரியம் தொடர்பான பிரச்​சினை​களுக்குத் தீர்வு காணவும் வக்ஃபு சட்டத்தில் திருத்​தங்கள் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறி ‘வக்ஃபு சட்டத் திருத்த மசோதா 2024’ என்ற பெயரிலான மசோதாவை மத்திய அரசு தற்போது கொண்டு​வந்திருக்கிறது.

என்னென்ன அம்சங்கள்

  • ‘வக்ஃபு சட்டம் 1995’ என்பது ‘ஒருங்​கிணைந்த வக்ஃபு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மேம்பாடு சட்டம் 2024’ என்று பெயர் மாற்றம் செய்யப்​படு​கிறது. இவற்றில் வக்ஃபு வாரியத்​துக்கு நிலத்தைக் கொடுப்​பவர், குறைந்​த​பட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்று​பவர்களாக இருக்க வேண்டும்; வாரியத்தில் இஸ்லாமியப் பெண்களுக்கும் பிரதி​நி​தித்துவம் வழங்குவது; இஸ்லாம் அல்லாதவர்​களும் பிரதி​நி​தித்து​வத்தை உறுதி​செய்வது என்பன போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்​கின்றன.
  • வக்ஃபு கவுன்​சிலிலும், மாநில அளவிலான வக்ஃபு வாரியத்​திலும் இஸ்லாமியர் அல்லாத இரண்டு பிரதி​நி​திகள் இருக்க வேண்டும் என்கிற புதிய விதிமுறையும் கொண்டு​வரப்​பட்டிருக்​கிறது. மாவட்ட ஆட்சியருக்கு முக்கிய அதிகாரம் வழங்கப்​பட்டிருக்​கிறது. மத்திய வலைதளம், தரவுத் தளம் மூலமாக வக்ஃபு வாரியச் சொத்துப் பதிவு முறைப்​படுத்​தப்​பட​வும், வக்ஃபு நிலங்களை டிஜிட்டல் முறையில் பதிவிடு​வதற்கும் வழிவகை செய்யப்​பட்டிருக்​கிறது. வக்ஃபு நிலமாக அறிவிக்​கப்​படு​வதற்கு முன்பாக - சம்பந்​தப்​பட்ட​வருக்குத் தகவல் அளிக்கும் விதத்தில் சட்டத்தில் திருத்தம் செய்யப்​பட்டிருக்​கிறது. இவற்றில் போரா, அகாகானிஷ் ஆகிய பிரிவினருக்​காகத் தனிச் சொத்து வாரியம் உருவாக்கு​வதற்கான திருத்​தங்கள் இடம்பெற்றிருக்​கின்றன. இதுபோல் ஏறத்தாழ 40 திருத்​தங்கள் கொண்டு​வரப்​பட்டிருக்​கின்றன.
  • விமர்​சனங்​களின் பின்னணி:
  • நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு மேற்கொண்ட சட்டத்​திருத்தம் வக்ஃபு வாரியங்​களுக்கு 1995இல் கூடுதல் அதிகாரங்களை வழங்கியது. அதன் பின்னர், 2013இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சில திருத்​தங்​களைச் செய்து வக்ஃபு வாரிய சொத்துக்​களுக்குப் புவியியல் தகவல் முறைமையை (ஜிஐஎஸ்) ஒழுங்​குபடுத்​தியது. இந்த வக்ஃபு வாரியங்​களுக்கு 7.80 லட்சத்​துக்கு மேற்பட்ட அசையாச் சொத்துக்கள், 9.40 லட்சம் ஏக்கர் நிலம் என்று சற்றேறக்​குறைய ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பு​டைய​தாகக் கணக்கிடப்​பட்டிருக்​கிறது. வாரியச் சொத்துக்களை மாவட்ட நிர்வாகத்​திடம் பதிவுசெய்​ய​வும், வக்ஃபு தீர்ப்​பாயத்தின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்​றத்தில் 90 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் திருத்தம் வழிவகை செய்கிறது. இவற்றை உற்று​நோக்கிப் பார்க்கை​யில், சட்டப்​பிரிவு 30ஐ மீறும் வகையில், புதிய மசோதா சிறுபான்​மை​யினரைக் குறிவைத்து, நசுக்கத் தொடங்கி​யிருப்பது தெரிய​வரு​கிறது.
  • இஸ்லாமியரிடம் இருந்து வக்ஃபு வாரியச் சொத்துக்களை அபகரிப்​ப​தற்​காக​வும், வாரியத்தின் அதிகாரங்​களைக் குறைப்​ப​தற்​காகவும் இந்தச் சட்டத்​திருத்​தத்தை பாஜக அரசு கொண்டு​வந்​திருப்பதாக இஸ்லாமிய அமைப்பு​களும், எதிர்க்​கட்​சிகளும் குற்றம்​சாட்டு​கின்றன. ஆனால், இந்தக் குற்றச்​சாட்டை மறுக்கும் மத்திய அரசு, வக்ஃபு வாரிய சுதந்​திரத்தில் தலையிட​வில்லை என்றும், பெண்கள் உள்ளிட்டோரின் உரிமைகளை உறுதி​செய்​வதும்; மாஃபியா கும்பலின் பிடியில் இருந்து வக்ஃபு வாரியத்தின் சொத்துக்களை மீட்ப​தும்தான் இதன் நோக்கம் என்றும் வாதிடு​கிறது.

அதிருப்தி அம்சங்கள்:

  • பொதுவாகத் திருத்​தங்கள் என்று வருகிறபோது அதிகபட்சமாக 10 திருத்​தங்​கள்​கூடச் செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால், 40க்கும் மேற்பட்ட திருத்​தங்​களுடன் வக்ஃபு வாரியங்களை நிர்வகிக்கும் சட்டமான வக்ஃபு சட்டத்தில் உள்ள பல ஷரத்துகளை ரத்து செய்திருப்ப​துதான் விமர்​சனத்​துக்கு உள்ளாகி​யிருக்​கிறது.
  • தற்போதுள்ள வக்ஃபு சட்டத்​தின்படி, எந்தவொரு சொத்தையும் சரிபார்க்​காமல் வக்ஃபு வாரியம் உரிமை கோர முடியும். இந்த அதிகாரம் புதிய மசோதாவில் நீக்கப்​பட்டிருக்​கிறது. வக்ஃபு வாரியம் எந்தவொரு சொத்தையும் சரி பார்க்​காமல் உரிமை கோர முடியாது. ஆனால், அதற்கு முன்பு வக்ஃபு வாரியம் ஒரு நிலத்தின் வில்லங்க விவரங்களை, அந்த நிலத்தின் மூலப்​பத்​திரங்கள் இல்லாமலேயே அவற்றின் மீதான உரிமையைக் கோரலாம். முறையான பத்திரங்கள் கிடைக்​காத​பட்​சத்தில் வக்ஃபு வாரியமே அதை எடுத்​துக்​கொள்ள முடியும். ஆனால், இனிமேல் அப்படிச் செய்ய முடியாது என்பது மத்திய அரசினுடைய வாதம். இதுபோன்ற திருத்​தங்​கள்தான் பெரும்​பாலும் இடம்பெற்றிருக்கிற அடிப்​படைக் கூறுகள் என்று மத்திய அரசு தனது வாதத்தை முன்வைக்​கிறது.
  • வக்ஃபு வாரியத்​துக்​கும், அரசுக்கும் அல்லது மக்களுக்கும் இடையே உள்ள சொத்து தொடர்பான பிரச்​சினை​களைத் தீர்த்து​வைக்க மாவட்ட ஆட்சியருக்கு இந்த மசோதா அதிகாரம் அளித்​திருக்​கிறது. அதன் அடிப்​படை​யில், அந்தச் சொத்தின் மீது ஏதேனும் சர்ச்​சைகள் இருந்​தால், அது அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானித்துச் சமர்ப்​பிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்​பட்டிருக்​கிறது. இதற்கு முன்பு, வக்ஃபு வாரியம் வைத்திருந்த அதிகாரம் தற்போது நீக்கப்​பட்டிருக்​கிறது.
  • ஷியாக்கள், சன்னிகள், போராக்கள், அகாகானிகள், இதர பிற்படுத்​தப்பட்ட இஸ்லாம் சமூக வகுப்​பினர்​களுக்குத் தனித்​தனி​யாகப் பிரதி​நி​தித்துவம் வழங்கு​வதற்கு இந்தச் சட்டத்​திருத்தம் வழிவகை செய்கிறது. இந்த மசோதாவில் மிகவும் சர்ச்​சைக்​குரிய அம்சங்​களில் ஒன்று, ‘மத்திய வக்ஃபு கவுன்​சில், மாநில வக்ஃபு வாரியங்கள், வக்ஃபு தீர்ப்​பாயங்​களில் இஸ்லாம் மதத்தைச் சாராதவர்​களும் சேர்க்​கப்​படலாம்’ என்பது. வக்ஃபு வாரியங்களை நிர்வகிக்கும் சட்டத்தில் சம்பந்​தப்​பட்ட​வர்​களுடன் கலந்தாலோ​சிக்​காமல் திருத்​தங்கள் கொண்டு​வரப்​படுவது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்​தி​யிருக்​கிறது. புதிய மசோதா, அரசமைப்புச் சட்டத்தில் குறிப்​பிடப்​பட்டுள்ள அடிப்படை உரிமை​களுக்கு எதிரானது என்கிற விமர்​சனமும் மிக முக்கியமானது.

வக்ஃபு வாரியங்கள் வலுவிழக்​குமா?

  • நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்​றங்​களில் கடந்த இரண்டு ஆண்டு​களில் வக்ஃபு சட்டத்​துக்கு எதிராக சுமார் 120 மனுக்கள் தாக்கல் செய்யப்​பட்டிருப்பதன் விளைவாகத்தான் இந்தத் திருத்​தங்கள் முன்மொழியப்​பட்ட​தாகச் சொல்லப்​பட்டாலும், சமண, சீக்கிய மதத்தினர், பிற சிறுபான்​மை​யினர் உள்ளிட்டோருக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது என்றும் சொல்லப்படு​கிறது. இதுதான் இம்மசோதா மீதான சந்தேகத்தை வலுவடைய வைக்கிறது.
  • ‘மத அடிப்​படையில் எந்தத் தீர்ப்​பாயமும் செயல்பட முடியாது. ஒரு விஷயத்தில் இரண்டு வெவ்வேறு சட்டங்கள் உள்ள நாடாக இந்தியா இருக்க முடியாது. ஒரு தேசம், ஒரு சட்டம் என்பதுதான் சரி’ என்று அரசுத் தரப்பில் கூறப்​பட்டாலும், முதன்​மையான நிலங்களை அரசு கையகப்​படுத்தும் முயற்​சியாகவே இஸ்லாமியர்கள் இதைப் பார்க்​கிறார்கள். வக்ஃபு வாரியங்​களில் இஸ்லாமியர் அல்லாதவர்​களுக்கு இரண்டு பதவிகள் என்று சொன்னால், இந்துக் கோயில்​களுக்கான வாரியத்தில் இஸ்லாமியர்​களுக்கு இதுபோன்ற இடஒதுக்கீடு கிடைக்குமா என்கிற கேள்வி முக்கிய​மானது. வக்ஃபு சட்டத்தில் இருந்த வரம்பு சட்டத்தின் விதிகள் மாற்றப்​பட்டிருக்​கின்றன. இந்த விதிகள் சட்டமாக்​கப்​படும்​பட்​சத்தில் - வக்ஃபு சொத்து​களில் 90 சதவீதம் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளதால் - வக்ஃபு சொத்துக்கள் பெருமளவில் குறைந்​து​விடும். குறிப்பாக பஞ்சாப், ஹரியாணாவில் வக்ஃபு சொத்துக்​களைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்​கிறவர்கள் ஆயிரக்​கணக்கான ஏக்கர் சொத்துக்​களின் உரிமை​யாளர்களாக மாறிவிடு​வார்கள். ஆகவே, வக்ஃபு சொத்துக்கள் பெருத்த கேள்விக்​குறி​யாகி​விடும். இது அந்தந்த மாநிலங்​களில் உள்ள வக்ஃபு வாரியங்​களைப் பலவீனப்​படுத்தும் முயற்சி எனக் கருதப்படுகிறது.
  • 31 உறுப்​பினர்கள் கொண்ட நாடாளு​மன்றக் கூட்டுக்குழு இந்த மசோ​தாவைக் கவனத்​துடன் ஆராய்ந்து, அடுத்து வரும் குளிர்​காலக் கூட்டத்​தொடரின் ​முதல் வாரத்தின் இறுதி நாளில் தன் அறிக்கையைச் சமர்ப்​பிக்கக் கால அவகாசம் வழங்​கப்​பட்டிருக்​கிறது. இப்​போதைக்கு இது​தான் ஆறுதலான ​விஷயம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (16 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories