TNPSC Thervupettagam

வக்ஃபு திருத்த மசோதா: நகர்வுகள் ஆக்கப்பூர்வமாக இருக்கட்டும்!

March 5 , 2025 2 days 15 0

வக்ஃபு திருத்த மசோதா: நகர்வுகள் ஆக்கப்பூர்வமாக இருக்கட்டும்!

  • வக்ஃபு திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், அது தொடர்பான விவாதங்கள் எழுந்திருக்கின்றன. இந்த மசோதா தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த மாற்றங்களை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், இம்மசோதா நிறைவேற்றப்படுவதைத் தடுக்க எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லாவற்றையும் தாண்டி, நீண்டகாலமாக விவாதப் பொருளாக இருக்கும் வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்பட வேண்டியது அவசியம்.
  • இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பே 1913இல் முஸ்லிம் வக்ஃபு செல்லுபடியாக்கும் சட்டம்; 1923இல் முஸ்லிம் வக்ஃபு சட்டம் போன்றவை கொண்டுவரப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிறகு, 1954இல் மத்திய வக்ஃபு சட்டம் கொண்டுவரப்பட்டது. 1995இல் கொண்டுவரப்பட்ட புதிய வக்ஃபு சட்டம், 2013இல் அந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட சில திருத்தங்கள் என வக்ஃபு வாரியத்தின் வரலாறு நீண்டது.
  • இன்றைய தேதியில் இந்தியாவில் 32 வக்ஃபு வாரியங்கள் இயங்கிவருகின்றன. வக்ஃபு வாரியங்கள் தற்போது நாடு முழுவதும் 9.4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 8.7 லட்சம் அசையாச் சொத்துக்களை நிர்வகித்துவருகின்றன. இவற்றின் மொத்த மதிப்பு ஏறத்தாழ ரூ.1.2 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய ராணுவம், இந்திய ரயில்வேக்குப் பிறகு இந்தியாவின் மூன்றாவது பெரிய நில உரிமையாளர் வக்ஃபு வாரியம்தான். இந்தச் சூழலில், வக்ஃபு சொத்துக்களை நிர்வகிப்பதில் முறைகேடுகள் நடப்பதாக அவ்வப்போது புகார்களும் எழுகின்றன.
  • 2006இல், இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்து வெளியான சச்சார் அறிக்கையிலும் இந்த முறைகேடுகள் குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், 2024 ஆகஸ்ட் 8இல் வக்ஃபு திருத்தச் சட்ட மசோதாவை சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். வக்ஃப் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவது, அந்தச் சொத்துக்கள் தொடர்பாக எழும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காண்பது உள்ளிட்ட அம்சங்களை முன்வைத்து இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.
  • வக்ஃபு வாரியத்தில் இரண்டு முஸ்லிம் பெண்கள், இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்ப்பது, ஒரு சொத்து வக்ஃபு அல்லது அரசு நிலமா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை வக்ஃபு தீர்ப்பாயத்திலிருந்து மாவட்ட ஆட்சியருக்குக் கையளிப்பது என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்த அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளும் முஸ்லிம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
  • குறிப்பாக, வக்ஃபு சொத்துக்களைக் கையகப்படுத்தவும், வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டை நீக்கவும் இந்த மசோதா வழிவகுக்கும் என முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். இதையடுத்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு, இந்த மசோதா அனுப்பப்பட்டது. பாஜக எம்பி ஜகதாம்பிகா பால் தலைமையிலான இக்குழு பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் முன்வைத்த 14 திருத்தங்களை அனுமதித்ததுடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த 44 திருத்தங்களை வாக்கெடுப்பின் மூலம் நிராகரித்தது சர்ச்சையானது.
  • மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டுவிட்ட சூழலில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம், மார்ச் 10இல் தொடங்கவிருக்கும் நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் வக்ஃபு திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிடுகிறது. இந்தத் திருத்த மசோதாவின் அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு 98 லட்சம் மனுக்கள் அனுப்பப்பட்டதாகவும், அவை கண்டுகொள்ளப்படவில்லை என்றும் முஸ்லிம் அமைப்புகள் விமர்சித்திருக்கின்றன.
  • எதிர்க்கட்சிகளின் தொடர்ந்த எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கும் இந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியம் அதிகம் என்றே தெரிகிறது. மத அடிப்படையில் புதிய சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடாமல் இதன் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்க வேண்டும். அதற்கு அரசும், எதிர்க்கட்சிகளும், மத அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்!

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories