TNPSC Thervupettagam

வங்கிகளின் பல்வேறு கடன் கணக்குகள்

July 15 , 2024 2 hrs 0 min 14 0
  • ஓய்வு பெற்ற வங்கியாளர் வங்கியில் வாங்கும் எல்லா வகையான கடன்களையும் ‘லோன்’ என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கி விடுவது பொதுவான வழக்கம். ஆனால் வங்கிகள் வழங்கும் கடன்களை லோன், ஓவர் டிராப்ட், கேஷ் கிரெடிட், பில்ஸ் பர்ச்சேஸ், பில்ஸ் டிஸ்கவுன்ட் போன்ற பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது.
  • இவை ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு பயன்பாடுகளும் வேறுவேறு நிபந்தனைகளும் உண்டு. இவற்றின் அடிப்படைகளை புரிந்து கொள்வது வங்கியில் கடன் பெறுபவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

கடன் (லோன்):

  • ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாக வழங்கி அதை பின்வரும் காலங்களில் திரும்பப் பெறுவதற்கான கணக்கையே வங்கிகள் லோன் என்ற பொருளில் குறிக்கின்றன. எடுத்துக்காட்டாக நகைக்கடனுக்கு அனுமதி அளித்து அந்த தொகையை ஒரு முறை வழங்கிய பிறகு கடன் வாங்கியவர் அந்த கணக்கில் திரும்ப செலுத்த மட்டுமே முடியும். அதே கணக்கில் மீண்டும் கடன் பெற முடியாது.
  • சிலவகை லோன்களில் அனுமதி அளித்த தொகையை தவணை முறையில் கடனாக வழங்கவும் முடியும். எடுத்துக்காட்டாக, வீடு கட்டுவதற்கு கடன் அனுமதி அளித்தால் கடன் தொகையை வீட்டின் கட்டுமானத்தின் முன்னேற்றத்தை பார்த்துபல தவணைகளாக வங்கி விடுவிக்கும். நான்கு வருட படிப்பிற்கு அனுமதி அளித்த கடன் தொகையை ஒவ்வொரு ஆண்டும் வங்கி விடுவிக்கும்.

ஓவர் டிராப்ட்:

  • ஓவர் டிராப்ட் என்பது ஒரு நடப்பு கணக்கில் வாடிக்கையாளரின் இருப்பை விட அதிகமாக நிதியை பெற்று கொள்வதை குறிக்கும். எந்த அளவு அதிகமாக பெற்று கொள்ளமுடியும் என்பதை குறிப்பதே ஓவர் டிராப்ட் லிமிட் ஆகும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு ரூபாய் ஒரு லட்சம் ஓவர் டிராப்ட் லிமிட் என்றால், அவர் அந்த கணக்கில் (அவருடைய நிதியை தவிர) ரூபாய் ஒரு லட்சம் வரை வாங்க முடியும்.
  • இந்த கணக்கில் அவர் பணம் திரும்ப செலுத்தவும் முடியும். அவ்வாறு செலுத்தியதை, ஓவர் டிராப்ட் லிமிட்டிற்கு உட்பட்டு, திரும்ப பெறவும் முடியும். எனவே தேவையானபோது இந்த கணக்கில் பணம் எடுத்துக்கொள்ளவும், கையில் பணமிருந்தால் திரும்ப கணக்கில் வரவு வைக்கவும் ஓவர் டிராப்ட் கணக்கு பயன்படுகிறது. ஒவ்வொரு நாளும் வங்கியில் வாங்கிய கடனுக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும். இதனால் வாடிக்கையாளருக்கு லோன் கணக்கை விட ஓவர் டிராப்ட் கணக்கு வசதியானது என்று புரிந்து கொள்ள முடியும்.
  • சில வங்கிகளில் வீட்டுக்கடன் கணக்கிற்கு ஓவர் டிராப்ட் முறையில் அனுமதி அளிக்கப்படுகிறது. மாதாந்திர தவணைக்கு தகுந்தவாறு லிமிட்டும் மாதாமாதம் குறைக்கப்படும். ஓவர் டிராப்ட் கணக்கை எந்தவித பிணையமும் இல்லாமலோ அல்லது அசையா சொத்து, கம்பெனி பங்குகள், மியூச்சுவல் பண்ட் யூனிட்கள் போன்றவற்றை பிணையாக பெற்றோ அனுமதிக்கப்படும். அது கடன் கோருபவரின் நிதி நிலைமையையும் வங்கிகளின் கடன் கொள்கையையும் பொறுத்தது.

கேஷ் கிரெடிட்:

  • இதுவும் ஒருவகையில் ஓவர் டிராப்ட் கணக்கு போன்றதே. இதுவும் நடப்பு கணக்கில் இருப்பைவிட அதிகமாக நிதியை பெற்றுக்கொள்ள அனுமதிக்கும் கணக்கே. இது குறிப்பாக வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படுவது. இது எப்போதும் பிணையுடன் கூடியது. மேலும் நிறுவனம் வாங்கி விற்கும் சரக்குகளையே முக்கிய பிணையாக கொள்வது. தேவைப்பட்டால் வங்கி வேறு சில சொத்துக்களையும் உபரி பிணையாக பெற்றுக்கொள்ளும்.
  • பிணையாக பெறும் சரக்குகளுக்கு ஒரு மார்ஜின் தொகையை நிர்ணயித்து அதன் அடிப்படையில் கேஷ் கிரெடிட் லிமிட் பதிவு செய்யப்படும். எடுத்துக்காட்டாக ஒரு துணி வியாபாரி ரூ.5 லட்சம் சரக்கை கொண்டிருந்தால், 40 சதவீதம் மார்ஜின் என்றால் அவருக்கு ரூ.3 லட்சம் லிமிட்டாக அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட காலக் கெடுவில் சரக்கு எவ்வளவு உள்ளது என்ற பட்டியலை வாங்கி பெற்று சரக்கின் மதிப்பை பொறுத்து லிமிட்டை அனுமதிக்கும். இந்த கணக்கிற்கான பிணையான சரக்கை வங்கிக்கு ஒப்படைக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • ஓவர் டிராப்ட்டுக்கும் கேஷ் கிரெடிட்டுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு - ஓவர் டிராப்ட் பிணையுடனோ அல்லது பிணை இல்லாமலோ இருக்கலாம். ஆனால் கேஷ் கிரெடிட் எப்போதும் நிறுவனத்தின் வர்த்தக சரக்கை பிணையாக கொண்டது.

செக் பர்ச்சேஸ் / பில்ஸ் பர்ச்சேஸ்:

  • வர்த்தக நிறுவனங்கள் பெறும் காசோலைகளை கணக்கில் வரவு வைக்க ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ ஆகலாம். அதுபோன்ற சூழ்நிலையில், உடனடியாக நிதி தேவையெனில் வங்கி அந்தக் காசோலையை க்ளியர் செய்வதற்கு முன்பாகவே கணக்கில் வரவு வைத்து அதை பயன்படுத்தவும் அனுமதிக்கும். அதற்கான முறையே செக் பர்ச்சேஸ். வர்த்தக நிறுவனத்தின் மதிப்பீட்டையும் தேவையையும் பொறுத்து இதற்கான ஒரு நிரந்தர லிமிட்டும் அனுமதிக்கப்படும்.
  • வர்த்தக நிறுவனங்கள் வெளி இடங்களுக்கு சரக்குகளை லாரி மூலமாகவோ அல்லது ரயில் மூலமாகவோ அனுப்பி அதன் ரசீதுகளை வங்கியில் கொடுத்து அந்த பில்களின் அடிப்படையில் முன்பணம் பெறும் முறையே பில்ஸ் பர்ச்சேஸ்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories