TNPSC Thervupettagam

வங்கியின் ஆரோக்கியத்தை அளவிடுவது எப்படி?

August 12 , 2024 156 days 141 0

வங்கியின் ஆரோக்கியத்தை அளவிடுவது எப்படி?

  • கிரெடிட் - டெபாசிட் விகிதம் என்பது ஒரு வங்கி வழங்கிய கடன்களுக்கும் மற்றும் அதன் டெபாசிட்டுகளுக்கும் இடையே உள்ள விகிதத்தை அளவிடுவதாகும். எளிமையாகச்சொன்னால், ஒரு வங்கியின் வைப்புத்தொகையில் எவ்வளவு கடனாக வழங்கப்படுகிறது என்பதை இது அளவிடுகிறது. ஒரு வங்கியின் டெபாசிட் ரூ.8,000 கோடியாகவும் அது வழங்கிய கடன்கள் ரூ.5,000 கோடியாகவும் இருந்தால், அதன் கிரெடிட் - டெபாசிட் விகிதம் 62.5 சதவீதம் (ரூ.5,000 / ரூ.8,000) ஆகும்.
  • எந்த ஒரு வங்கியும் தான் பெற்ற டெபாசிட் முழுவதையும் கடனாக அளிக்கமுடியாது. வங்கிகள் தான் பெற்ற டெபாசிட்களில் குறைந்தது 18 சதவீதத்தை அரசு பத்திரங்களில் முதலீடு செய்யவேண்டும். மேலும் 4.5 சதவீதத்தை எப்பொழுதும் உபயோகிக்கும் வழியில் பணமாகவோ அல்லது ரிசர்வ் வங்கியின் கணக்கில் இருப்பாகவோ பராமரிக்க வேண்டும். இதற்கு பிறகு எஞ்சிய நிதியையே வங்கிகள் கடனாக வழங்க முடியும்.சில பிரத்தியேக கடன்களுக்கு ரி-பைனான்ஸ் முறையில் நபார்டு போன்ற நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் நிதி ஆதாரத்தையும் வங்கிகள் உபயோகிக்க முடியும்.
  • ஆனால் சில வங்கிகள் டெபாசிட்டை தவிர சில நிதி ஆதாரங்களை வெளிக்கடன்கள் மூலம் திரட்டி அதன் அடிப்படையில் அதிக கடன்களை அளிப்பதால் அவற்றின் கிரெடிட் - டெபாசிட் விகிதம் அதிக அளவில் உள்ளது. இது நீண்ட கால அடிப்படையில் ஆரோக்கியமானதல்ல. அதிக கிரெடிட் - டெபாசிட் விகிதம் வங்கிகளுக்கான பணப்புழக்கம் மற்றும் கடன் அபாயங்களைக் குறிக்கிறது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் 28-ம் தேதி வரை வங்கிகளின் வைப்புத்தொகை ஒரு வருடத்தில் 11.1 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் இதே கால அளவில் வங்கிகளின் கடன்கள் 17.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஏதோ கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நடந்த விஷயம் அல்ல.
  • 2021 டிசம்பர் முதல் 2024 மார்ச் வரை(பத்து காலாண்டுகள்) ஒவ்வொரு காலாண்டிலும் டெபாசிட் மற்றும் கடன்களின் வளர்ச்சியை கணக்கிடும் போது அதில் ஒன்பது காலாண்டுகள் வங்கிகளின் கடன் வளர்ச்சி டெபாசிட் வளர்ச்சியை விட அதிகமாக உள்ளது. இது ஆரோக்கியமான அறிகுறி அல்ல.
  • சமீபத்தில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், டெபாசிட் வளர்ச்சி பின்தங்கி இருப்பதால் வங்கிகள் பணப்புழக்க சிக்கல்களுக்கு ஆளாகக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
  • விரலுக்கேற்ற வீக்கம் என்பது சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, வங்கிகளுக்கும் பொருந்தும். சில ஆண்டுகளுக்கு முன் டெபாசிட்டுக்கு பொருத்தமில்லாது அதிகஅளவுக்கு கடன் கொடுத்து நெருக்கடிக்கு உள்ளான யெஸ் வங்கியையும் லட்சுமி விலாஸ் வங்கியையும் ரிசர்வ் வங்கி காலம் கடந்து சில ஏற்பாடுகளை செய்து காப்பாற்றியதும் நமக்கு படிப்பினை ஆகும்.
  • 2017, 2018, 2019, 2020 ஆகிய ஆண்டுகளின் மார்ச் மாதத்தில், அனைத்து வங்கிகளின் கிரெடிட் - டெபாசிட் விகிதம் முறையே 73%, 75%, 78%, 76% இருந்தது. ஆனால் யெஸ் பேங்கின் கிரெடிட் - டெபாசிட் விகிதம் 92% 101%, 106%, 162% என இருந்தது. லட்சுமி விலாஸ் வங்கியிலும் கடன் வளர்ச்சியை ஒப்பிட டெபாசிட் வளர்ச்சி மிகவும் குறைந்திருந்தது.
  • எனவே ஒரு வங்கி ஆரோக்கியமாக செயல்படுகிறதா என்பதற்கு அதனுடைய லாப நஷ்ட கணக்கு மட்டுமே போதுமானதல்ல. அதன் கிரெடிட் - டெபாசிட் விகிதமும் முக்கியம்.
  • கடன் வழங்குவதன் மூலமே வங்கிகள் தங்களுக்கான வருவாயை ஈட்டிக் கொள்கின்றன. அந்த வகையில், ஒவ்வொரு வங்கியும் அதிக அளவில் கடன் வழங்குவதை இலக்காக் கொண்டு செயல்படுகிறது. இந்தச் சூழலில், வங்கிகள் தங்கள் கடன் வழங்கலை குறைக்க முடியாது. மாறாக, கடன் வழங்குதலில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories