TNPSC Thervupettagam

வங்கி கட்டணங்களுக்கும் வேண்டும் கடிவாளம்

April 9 , 2023 654 days 876 0
  • வங்கிகள் தாங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இதனால் வங்கிகள் மீதான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் விஷ்ணு தத் சர்மா அண்மையில், “வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணங்கள் குறித்து அரசு ஆய்வு ஏதும் நடத்தி உள்ளதா” என கேள்வி எழுப்பினார்.
  • அதற்கு மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.“வங்கிகள் வசூலிக்கும் சேவைக் கட்டணங்கள் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வங்கியும் அது வழங்கும் சேவைகளுக்கு அதன் நிர்வாகக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட கட்டணங்களை வசூலிக்கலாம்" என்று மத்திய நிதி அமைச்சகம் பதில் அளித்துள்ளது.
  • பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அதிகாரம் வழங்கியதுதான், இன்றளவும் அவற்றின் விலை உச்சத்தை தொட்டு நிற்பதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு சாமர்த்தியமாக நழுவி விடுகிறது.
  • அதேபோன்ற நிலைமைதான்,வங்கி நிர்வாகமே சேவைகட்டண நிர்ணயத்தில் தங்களது இஷ்டம்போல் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பிலும் காணப்படுகிறது.ஏனெனில், இதற்கு ரிசர்வ் வங்கி எந்தவிதத்திலும் பொறுப்பேற்கவோ, கட்டுப்பாடு விதிக்கவோ முடியாது என்பது நிதியமைச்சகத்தின் பதிலில் இருந்து தெளிவாகிறது.
  • மக்களின் நலனையும்,தேசத்தின் வளர்ச்சியையும் முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட வங்கிகள் அடுக்கடுக்கான கட்டணங்களை அறிமுகம் செய்வது சாமானிய மக்களுக்கு பெரும் நெருக்கடியாக மாறி வருகிறது.
  • வங்கிகளில் கணினி தொழில்நுட்பம் அறிமுகமாவதற்கு முன்பாக வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் செலுத்தும் பணம் வட்டியுடன் சேர்த்து வளர்ந்து நிற்கும். ஆனால், தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் வங்கிகளின் பல்வேறு சேவைக் கட்டணப் பிடிப்புகளால் வாடிக்கையாளர்களின் சேமிப்பு குறைந்துவிடுகிறது.
  • அதிலும்,ஒரு சில வாடிக்கையாளர் கணக்குகளின் இருப்பு எதிர்மறை நிலைக்கு(மைனஸ் பேலன்ஸ்) சென்று விடுகிறது. பிற்பாடு வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் பணம் செலுத்தும் போது, வங்கிகள் அதிலிருந்து தங்களுக்கு வர வேண்டிய கட்டணத்தை எடுத்து விடுகின்றன.

மக்களை குழப்பும் கட்டணங்கள்:

  • # பாஸ்புக் பெறுவது முதல் நெட் பேங்க்கிங் மூலம் பணம் அனுப்புவது வரை வங்கிகள் அதன் சேவைகளுக்கு ஏராளமான கட்டணங்களை விதித்து மக்களை குழப்பி வருகிறது.
  • வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்மில் பொதுவாக மாதத்துக்கு 5 முறைக்குமேலாகவும், இதர வங்கிகளின் ஏடிஎம்களில்3 முறைக்குமேலாகவும் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
  • வாடிக்கையாளரின் கணக்கில் பணம் இல்லாமல் தவறுதலாக கூடுதலான தொகையை ஏடிஎம்மில் பதிவிட்டாலும் அதற்கும் அபராதம் விதிக்க வங்கிகள் மறப்பதில்லை.
  • பெரும்பாலான வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இன்றியேஎஸ்எம்எஸ் சேவைக்கான கட்டணங்கள் பிடித்தம் செய்யப்பட்டு விடுகின்றன. இதில், நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
  • அதேபோன்று வங்கியில் குறிப்பிட்ட இருப்பு இல்லைஎன்பதை காரணம் காட்டி அதற்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாட்டுக்கும் கட்டணம் விதிக்கப்படுகிறது.
  • அந்த வரிசையில் தற்போது கிரெடிட் கார்டை கொண்டுவாடகை செலுத்தினால் 1சதவீத வசதிக் கட்டணத்தை(கன்வீனியன்ஸ் ஃபீஸ்)பிடிக்க வங்கிகள் தொடங்கிவிட்டன. இதற்கும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியாக 18சதவீதம் பிடிக்கப்படுவதுதான் வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ரூ.1,000க்கு ரூ.800 அபராதம்

  • சமீபத்தில் நடந்த சம்பவம் இது. ஒரு நபர் இன்னொருவருக்கு வழங்க வேண்டிய தொகையை காசோலையாக கொடுத்துள்ளார். அந்தக் காசோலையைப் பெற்ற நபர் வங்கியில் சென்று அதைக் கொடுத்துள்ளார்.
  • காசோலையில் கையெழுத்து மாறுபட்டு உள்ளது எனக் கூறி, அந்த காசோலையை பெற்ற நபருக்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து அந்தவங்கி ரூ.400 வரை அபராதம் விதித்தது. அதேபோல், காசோலைவழங்கிய நபருக்கும் இதே அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்த அளவில் ரூ.1,000 மதிப்புக்கான காசோலைபவுன்ஸ் ஆனதற்கு அபராதமாக வங்கிகள் ரூ.800 வசூலித்தன.

யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம்

  • குக்கிராமம் முதல் பெரு நகரங்கள் வரை எங்கும் வியாபித்திருக்கும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கவுள்ளதாக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) தெரிவித்தது. வங்கி கட்டணப் பிடியில் சிக்கித் தவித்து வந்த சாமானிய மக்களுக்கு யுபிஐ பரிவர்த்தனை மட்டுமே ஆறுதலாக இருந்த நிலையில் என்பிசிஐ-யின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்த விவகாரம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவில்பேசுபொருளாகி எதிர்ப்பு கிளம்பியதையடுத்து மொபைல் வாலட் மூலமாக மேற்கொள்ளப்படும் வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக என்பிசிஐவிளக்கம் அளித்தது.
  • இருப்பினும், யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படுவதற்கான முன்னோட்டமே இந்த நடவடிக்கை என்று நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் சாமானிய மக்களிடம் அதிக சேவைக் கட்டணம் வசூலிப்பதில் இந்திய வங்கிகள்தான் முன்னிலையில் உள்ளன.
  • வங்கிகளின் பல்வேறு கட்டண வசூலிப்புகள் குறித்து வாடிக்கையாளர்களிடம் அதிலும் குறிப்பாக பெண்கள், முதியவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. ஏற்கெனவேஅவர்கள் வாழ்வாதார பிரச்சினையில் சிக்கி இருப்பதால் இதில் கவனம் செலுத்த போதிய நேரமும் இல்லை. வங்கி கட்டமைப்புகளில் தொழில்நுட்ப வசதிகள்பெருகியுள்ளன. ஆன்லைன் துணையால் முன்பைவிட வங்கிகளில் பணப்பரிவர்த்தனைகளின் செயல்பாடுகள் மிகவும்எளிதாகியுள்ளன.
  • வங்கிகள் முழுவதும் கணினிமயமாக்கப்பட்டதற்கு பின்பாக சேவை கட்டணங்கள் குறைய வேண்டும்.ஆனால் வங்கிகளோ சேவை கட்டணங்களை அதிகரித்து வருகின்றன. வங்கிகளின் இழப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும்வாராக் கடனை ஈடு செய்யவே வங்கிகள் புதுவிதமான கட்டணங்களை அறிமுகம் செய்து வருவதாக அகில இந்திய வங்கி பணியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
  • வாடிக்கையாளர்கள் ஓராண்டில் மேற்கொள் ளும் சராசரிபரிவர்த்தனைகளுக்கு ஏற்ப கட்டண விகிதங்களை மாற்றியமைக்க வேண்டும். முடிந்தால் வங்கிகள் தங்களிடம் உள்ள வாடிக்கையாளர்களை பல்வேறு அடுக்குகளாக பிரித்து வங்கிச்சேவையை சாராசரியாக பயன்படுத்துவோருக்கு ஒரு கட்டணமும், மிகத் தீவிரமாக பயன்படுத்தும் பணக்காரர்களுக்கு ஒரு கட்டணமாகவும் நிர்ணயம் செய்யலாம்.

தேவை வெளிப்படைத் தன்மை

  • கட்டணம் விதிப்பதில் வங்கிகள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவேண்டும். வாடிக்கையாளர் ஒருவர் வாகனப்பராமரிப்புக்காக அண்மையில் டெபிட் கார்டு மூலம் பணம்செலுத்தி உள்ளார். இதற்காக, ‘எஸ்எம்எஸ் சார்ஜஸ் ஆன் ஆக்ஸுவல் பேசிஸ்’ என்ற பெயரில் ரூ.2 கட்டணத்தையும் கூடுதலாக சேர்த்து வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
  • இது, மிக சிறிய தொகையாக இருந்தாலும் பல கோடி வாடிக்கையாளரிடமிருந்து பிடித்தம் செய்யப்படும்போது அது முக்கியத்துவம் பெறுகிறது.
  • டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள், ஏடிஎம்களில் பணம் எடுப்பது, என்இஎப்டி, ஆர்டிஜிஎஸ் உள்ளிட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டாய எஸ்எம்ஸ் அனுப்ப வேண்டும். அந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்பதே ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு.
  • ஆனால், அதற்கு எதிராக பல வங்கிகள் எஸ்எம்எஸ் கட்டணத்தை நிரந்தரமாக வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்து வருகின்றன. இது விதிமீறல் என்பதை இந்திய வங்கி குறியீடுகள் மற்றும் தரநிலைகள் வாரியம் (பிசிஎஸ்பிஐ) ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது.
  • டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் வங்கிக்கும், வாடிக்கையாளருக்குமான நேரடி தொடர்பு ஏற்கெனவே முற்றிலும் குறைந்துவிட்டது. இந்நிலையில், இதுகுறித்து வங்கிக்கு சென்று முறையிட நேரமோ, விழிப்புணர்வோ இல்லை என்பதே நிதர்சனம்.கட்டண வசூலிப்பு தொடர்பாக புகாரளிக்கும் வசதியை சம்பந்தப்பட்ட வங்கி செயலியிலேயே ஏற்படுத்த வேண்டும்.
  • மேலும், பணப்பரிவர்த்தனை சேவைகளுக்கு அரசு விதிக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி மிக அதிகம் என்பது வாடிக்கையாளர்களின் நிலைப்பாடு. அதனை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
  • கடிவாளம் இல்லா குதிரையைப் போல் செயல்படும் வங்கி சேவை கட்டணங்களுக்கு அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்தே கடிவாளத்தை கட்ட முடியும்.
  • வாடிக்கையாளர் என்பவர் மிக முக்கியமானவர். அவர் நம்மைச் சார்ந்து இல்லை. நாம்தான் அவரை சார்ந்து உள்ளோம்’ என்ற மகாத்மா காந்தியின் வரிகளை உணர்ந்து வங்கிகள் செயல்பட வேண்டிய நேரமிது.

நன்றி: தி இந்து (09 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories