TNPSC Thervupettagam

வஞ்சிக்கப்படும் மாநிலங்கள்

March 6 , 2024 139 days 192 0
  • தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் திடீரென்று பஸ்களில் ஏறி பயணிகளுக்குத் திமுகவினர் கொடுத்த அல்வா பொட்டலங்கள் பெரும் செய்தியாக உருவெடுத்தில் ஆச்சரியம் இல்லை. அல்வா பொட்டலத்தில் இப்படி எழுதப்பட்டிருந்து, ‘ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கிய நிதி: பூஜ்ஜியம்.’ அடுத்த நாள் தமிழகத்தின் சில முக்கியமான இடங்களில் நடிகர் வடிவேலு தனது கால்சட்டை பாக்கெட்டை வெளியே எடுத்துவிட்டு, ‘ஒன்றும் இல்லை!’ என முகம் சுழித்துக் காட்டும் படத்தின் கீழே அதே வாசகம் எழுதப்பட்டிருந்தது.
  • அதற்கு அடுத்த நாள் முக்கியமான நகரங்களில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான விளம்பரப் பதாகைகள் மக்களிடம் கேட்டன. ‘உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாடு அளிக்கும் ஒவ்வொரு ருபாய் வரியிலிருந்தும் ஒன்றிய அரசு நமக்குத் திருப்பி தரும் வரிப் பகிர்வு: வெறும் 24 பைசா!’
  • திமுகவுக்கு இத்தகைய உத்திகள் கைவந்த கலை. 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை இதன் வழியே திமுக ஆரம்பித்துவிட்டது என்றுதான் அரசியல் பண்டிதர்கள் முதலில் சிரித்தார்கள்.
  • டெல்லி ஜந்தர்மந்தரில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஒருங்கிணைத்திருந்த கூட்டம் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றது. கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் இருவருமே அதில் பங்கேற்றிருந்தனர். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் தன்னுடைய குரலைப் பிரதிபலித்திருந்தார். பாஜக கூட்டுறவில் உள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இந்த விவகாரத்தில் மௌனம் சாதித்தாலும், அங்கும் இந்தப் பிரச்சினையை வேறு சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழ்நாட்டின் சார்பில் இக்கூட்டத்தில் பேச அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை அனுப்பியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். 
  • தென் இந்தியாவின் பிரச்சினையாக டெல்லியில் அது பரிணமித்திருந்து. மக்களிடம் பலவித வரிகளை மத்திய அரசு வசூலிக்கிறது. என்றாலும் ஒவ்வொரு மாநிலம் வழியாகவும் டெல்லிக்குச் செல்லும் வரி எவ்வளவு என்பதை ஜிஎஸ்டி வாயிலாக மட்டுமே நாம் அறிய முடிகிறது. பல வரிகள் மூலம் கிடைக்கும் வருமானம் இந்திய அரசுக்கு மட்டுமே வெளிச்சம். உதாரணமாக, ஜிஎஸ்டி அளவுக்கு இணையான அளவுக்கு கார்ப்பரேட் வருமான வரி, தனிநபர் வருமான வரி திரட்டப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்திய அரசு இந்த விஷயங்களை எல்லாம் மாநில அரசுகளுடனேயேகூட பகிர்ந்துகொள்வது இல்லை.
  • மொத்தமாகத் திரட்டப்படும் வரியில், இந்த வரியைத் திரட்டும் அமைப்புக்கு ஆகும் நிர்வாகச் செலவு போக ‘நிகர வரி வருவாய்’ என்று இந்திய அரசு தெரிவிக்கிறது. அதில் 41% தொகையை மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிப்பதாகக் கூறுகிறது. இந்த 41% தொகைப் பகிர்வில் நடக்கும் பாரபட்ச அரசியல்தான் தென் இந்திய மாநிலங்களை இப்போது கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது.
  • மோடி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் கடைசி பட்ஜெட்டின் அறிவிப்பின்படி தென் இந்திய மாநிலங்களுக்கு அது பகிர்ந்தளித்திருக்கும் தொகை இது:  கேரளம் - ரூ.23,481 லட்சம் கோடி; தமிழகம் ரூ.49,755 லட்சம் கோடி; கர்நாடகம் ரூ.44,486 லட்சம் கோடி; ஆந்திரம் - ரூ.49,365 லட்சம் கோடி; தெலங்கானா - ரூ.25,640 லட்சம் கோடி. ஆக, மொத்தம் - ரூ.1,92,727 லட்சம் கோடி. ஆனால், உத்தர பிரதேசம் ஒரு மாநிலத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை - ரூ.2,18,817 லட்சம் கோடி.
  • இதே போன்று பிஹாருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை - ரூ.1,22,686 லட்சம் கோடி. மத்திய பிரதேசத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை - ரூ.95,753 லட்சம் கோடி. பிந்தைய மாநிலங்கள் எல்லாமே இன்று பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள் / சென்ற இரு மக்களவைத் தேர்தல்களிலும் மோடி ஆட்சியில் அமர இடங்களை வாரி வழங்கிய, அடுத்தும் பாஜக ஆட்சிக்கு வர முக்கியமான மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மேலெழுந்தவாரியாக இந்த அப்பட்டமான பாகுபாட்டு அரசியலைப் பிரதானப்படுத்தி தென் இந்தியா பேசினாலும், உள்ளபடி இந்திய மாநிலங்கள் எல்லாவற்றையுமே இன்று பெரும் மூச்சுத்திணறலில் பாஜக தள்ளியிருப்பதை டெல்லி கூட்டத்தில் பேசிய தலைவர்கள் சுட்டிக்காட்டினர். அனைத்து  மாநிலங்களின் நிதிச் சுதந்திரத்துக்காகவே அவர்கள் முழங்கினர்.
  • தமிழ்நாட்டின் சார்பில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், இத்தகைய பாகுபாட்டுக்கு எதிராக அண்ணாவின் காலத்திலிருந்து தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்துவருவதை நினைவுகூர்ந்தார். ஆம், சுதந்திர இந்தியாவின் தலையாயப் பிரச்சினைகளில் ஒன்று இது. அதனால்தான் அண்ணா ‘இனி மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியைப் பகிர்வதற்கு பதிலாக மாநில அரசுகள் மத்திய அரசுக்கு நிதியைப் பகிரும் முறை கொண்டுவரப்பட வேண்டும்’ என்றார்.
  • கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மாநில சுயாட்சித் தீர்மானம் இதுகுறித்து பேசியது. தமிழகத்தில் இருந்து முதன்முதலில் மத்திய கூட்டணி அரசில் பங்கேற்றபோது எம்ஜிஆர் இதே விஷயத்தை பேசினார். ஜெயலலிதா தன்னுடைய முதல் நாடாளுமன்ற முதல் உரையிலும் கடைசி சுதந்திர தின உரையிலும் இதே விஷயத்தை வலியுறுத்தினார். இப்போது ஸ்டாலின் ஆட்சிக் காலகட்டத்திலும் தமிழகம் பேசுகிறது.
  • கூட்டாட்சிக்கான ஆதார அம்சங்களில் ஒன்று நியாயமான நிதிப் பகிர்வு; அதன் வழியிலான பொருளாதாரச் சுதந்திரம். மாநிலங்கள் மூன்று வகைகளில் இன்று திணறுகின்றன. முதலாவதாக, அவற்றின் வரி விதிப்பு உரிமையை ஜிஎஸ்டி வழியே மத்திய அரசு எடுத்துக்கொண்டுவிட்டது; வரி வசூலை மட்டுமே அவை நம்பியுள்ள நிலையில், அதைப் பெறும் மத்திய அரசு நியாயமான முறையில் அதைப் பகிர்வதில்லை.
  • இரண்டாவதாக, மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்குப் பகிரும் 41% நீங்கலாக ஏனைய 59% நிதியைத் தன்வசம் வைத்திருக்கும் மத்திய அரசு, இதன் வழியே மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டங்களிலும் நியாயமாக நடந்துகொள்வதில்லை; தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் பல நகரங்கள் நீண்ட காலமாக விமான நிலையத்துக்காகக் காத்திருப்பதும் அயோத்தியில் உடனடியாக விமான நிலையம் கட்டப்படுவதையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
  • சென்னை வெள்ளத்துக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஒரு பைசா ஒதுக்காமல், உத்தராகண்ட், குஜராத்துக்குப் பல கோடிகளை ஒதுக்கியதையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மூன்றாவதாக, மாநிலங்கள் தாங்களாக கடன் வாங்கி சமூக நலத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் மத்திய அரசு கட்டுப்பாடு விதிக்கிறது. மொத்தத்தில் அவை நிலை தடுமாறுகின்றன.
  • தமிழகத்தின் சார்பில் பேசிய பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய உரையில் இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றையுமே தொட்டுப் பேசினார். கூட்டாட்சிக்கான உரத்த குரல்களின் பட்டியலில் ஜெயலலிதாவின் பெயரை அவர் உச்சரித்தது நேர்மையின் வெளிப்பாடு என்றால், குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் கூட்டாட்சியின் உரத்த குரலாக இருந்தார் என்று மோடியின் பெயரையும் அவர் சேர்த்தது நயத்தகு காய் நகர்த்தல். பாஜகவுக்கு பிரச்சினையின் தீவிரம் புரியாமல் இல்லை.
  • நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலமாகவும் நிதித் துறைச் செயலர் சோமநாதன் மூலமாகவும் எதிர்வினையாற்றியதோடு பிரதமர் மோடியும் இதெல்லாம் பிரிவினைவாத குரல்கள் என்று எதிர்வினை ஆற்றினார். 2019 தேர்தலில் மக்களவையில் தனிப் பெரும்பான்மைக்கான 272 எனும் எண்ணிக்கையைக் காட்டிலும் 31 இடங்களைக் கூடுதலாக பாஜக வென்றதற்கு தென் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 29 இடங்களை வென்றதும் முக்கியமான காரணம். அதற்குரிய கவலையுடன் பாஜக இந்தப் பிரச்சினையை அணுகுகிறது.
  • ஆனால், தேர்தல்களையெல்லாம் கடந்து, தேசத்தைத் தீவிரமாக பாதிக்கவல்ல பிரச்சினை இது என்பதை அது புரிந்துகொள்ள முற்பட வேண்டும்!

நன்றி: அருஞ்சொல் (06 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories