TNPSC Thervupettagam

வடகிழக்கு என்றால் இளப்பமா?

September 10 , 2019 1903 days 1508 0
  • சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமாணி தனது பணியிட மாற்றத்தை எதிர்த்து ராஜினாமா செய்த பின்னரும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளது வருந்தத்தக்கது. தலைமை நீதிபதியை சென்னையிலிருந்து ஷில்லாங்குக்கு (மேகாலயா) மாற்றியதை வழக்கறிஞர்கள் கண்டித்ததற்கான காரணங்களைப் பார்க்கும்போது, அதற்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லாததோடு, அவர்களது போராட்டம் நீதித் துறையை எதிர்த்தே நடத்துவதுபோல் உள்ளது.
  • போராடும் வழக்கறிஞர்களுடைய தலைமை இன்று எடுத்து வைத்துள்ளது மூன்று காரணங்கள். ஒன்று, இந்தியாவிலுள்ள 25 உயர் நீதிமன்றங்களில் இரண்டு மன்றங்களில் மட்டுமே பெண் நீதிபதிகள் இருக்கிறார்கள். இரண்டாவது, 75 நீதிபதிகள் இருக்கக்கூடிய மதராஸ் உயர் நீதிமன்றத்திலிருந்து (சென்னை என்று சொல்லக் கூடாதாம்) மூன்று நீதிபதிகளே உள்ள மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்செய்தது பதவியிறக்கமாகும். குஜராத் மாநிலத்திலிருந்து மாற்றப்பட்ட இனக்கலவர வழக்கொன்றில் (பில்கிஸ் பானு) பம்பாய் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போது, இஸ்லாமியருக்கு எதிராக இனக்கொடுமைகளை நடத்திய குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டித்தார். எனவே, இது அவரைப் பழிவாங்கும் செயலாகும் என்பது மூன்றாவது காரணமாகும்.

பழிவாங்கல் அல்ல

  • பில்கிஸ் பானு வழக்கில் அவர் தீர்ப்பளித்த பிறகுதான் அவரை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான கருத்துரு அனுப்பப்பட்டது. அப்போது பம்பாய் நீதிமன்றத்தில் பணியாற்றிய மூன்று நீதிபதிகளும் அங்கு தொழில் நடத்திய இரண்டு வழக்கறிஞர்களும், ஆக மொத்தம் ஐந்து நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கிறார்கள். மேலும், பம்பாய் உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த - தஹில் ரமாணி உட்பட மூன்று நீதிபதிகள் - வெளி மாநில உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிவருகிறார்கள். இந்தியாவில் 25 உயர் நீதிமன்றங்கள் இருப்பினும் அதில் பல நீதிமன்ற நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தில் இடமோ அல்லது இதர உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதி பொறுப்போ வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவில் இன்றைக்கு 25 உயர் நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவற்றில் நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, அவற்றிலும் தனிப்பட்ட உயர் நீதிமன்றங்கள் செயல்பட்டுவருகின்றன. அங்குள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு அம்மாநிலங்களுக்கு மூன்று நீதிபதிகளுக்கு மட்டுமே பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டம் 214-வது கூறின்படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு உயர் நீதிமன்றம் உண்டு என்று கட்டளையிடப்பட்டுள்ளது. வேண்டுமானால், இரண்டு மாநிலங்களுக்குப் பொதுவான ஒரு நீதிமன்றமும் செயல்படலாம். ஹரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் – யூனியன் பிரதேசம் இவை மூன்றுக்கும் ஒரே உயர் நீதிமன்றம்தான் செயல்பட்டுவருகிறது. இந்த நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 88.
  • அந்த நீதிமன்றத்திலிருந்த ஏ.கே.மித்தல் என்ற மூத்த நீதிபதி மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஒரு பெரிய உயர் நீதிமன்றத்திலிருந்து சிறிய மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில்தான் தற்போது மேகாலயாவில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றும் ஏ.கே.மித்தல் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயத்தில், சென்னையில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றும் தஹில் ரமாணி மேகாலயா நீதிமன்றத்துக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த முடிவை உச்ச நீதிமன்றத்தின் முதல் ஐந்து நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் முடிவுசெய்துள்ளது. இம்முடிவை மறுபரிசீலிக்க வேண்டுமென்ற கோரிக்கையை கொலிஜியம் தள்ளுபடி செய்ததை அடுத்து, தஹில் ரமாணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஒரே பணி நிலைமை

  • பெரிய உயர் நீதிமன்றம் அல்லது சிறிய உயர் நீதிமன்றம் என்று எந்தப் பிரிவும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் இல்லை. உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகளும், நாடாளுமன்றம் இயற்றிய உயர் நீதிமன்ற நீதிபதிகளின் 1954-ம் வருடத்திய பணி நிலைமைகள் சட்டத்தின்படிதான் நிர்ணயிக்கப்படுகிறது. 1980-களுக்கு முன்னால் அந்தந்த மாநில உயர் நீதிமன்றத்திலுள்ள மூத்த நீதிபதியே தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்படி சென்னையில் தலைமை நீதிபதியாக 1979-ல் நியமிக்கப்பட்ட எம்.எம்.இஸ்மாயில் 1981-ல் கேரள உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது வழக்கறிஞர்கள் யாரும் போராடவில்லை.
  • தலைமை நீதிபதியையும், இதர உயர் நீதிமன்ற நீதிபதிகளையும் பணியிட மாற்றம் செய்யக்கூடிய அதிகாரம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் அரசமைப்புச் சட்டம் கூறு 222-ன் படி வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனத்தை முதல் ஐந்து நீதிபதிகள் கொலிஜியமும், இதர நீதிபதிகளின் பணியிட மாற்றத்தை முதல் மூன்று நீதிபதிகள் கொலிஜியமும் முடிவுசெய்யும். இந்த முடிவை எடுப்பதற்கு அவர்கள் மத்திய அரசிடமிருந்து எவ்விதக் கருத்துருவையும் பெறத் தேவையில்லை. நீதிபதிகளின் பணியிட மாற்றம் முழுக்க முழுக்க நீதித் துறையின் வசமே உள்ளது.
  • 1980-களில் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கட்டாயமாக வேறு மாநில உயர் நீதிமன்றத்திலிருந்துதான் வர வேண்டுமென்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இன்று வரை உள்ளூர் நீதிபதிகளை அவர்கள் மாநிலத்திலேயே தலைமை நீதிபதியாக நியமிக்கும் வாய்ப்பு கிடையாது. அதேசமயத்தில், வெளிமாநிலத்திலிருந்து நியமிக்கப்படும் தலைமை நீதிபதி உள்ளூர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியைவிடப் பணிமூப்பு கொண்டவராக இருக்க வேண்டும். இதனால், பல நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டன. பல பெரிய உயர் நீதிமன்றங்களில் இளைய வயதிலேயே நியமனம் பெற்றவர்கள் பணிமூப்புப் பட்டியலில் முதல் இடங்களைப் பெறும்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் அவர்களைவிடப் பல படிகள் இளையவர்களாக இருப்பார்கள். இதனால், அவர்களைப் பெரிய உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு வாய்ப்பே கிட்டாது. அப்படி ஒரு சிலர் சுமாரான பணிமூப்பைப் பெற்றிருக்கும்போது அவரை மற்றொரு உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கும்போது அங்குள்ள மூத்த நீதிபதி அவரைவிட பணிமூப்பு கொண்டவராக இருப்பின், அவரைப் பணியிட மாற்றம் செய்யக்கூடிய நிலைமையும் ஏற்பட்டது.
  • ஆனால், புதிய கொள்கை முடிவின்படி சென்னையில் 2001-ல் ஆந்திர பிரதேசத்திலிருந்து பணியிட மாற்றம் செய்து தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுபாஷன் ரெட்டி மூன்று வருடங்கள் கழித்து 99 நாட்களே பதவிக் காலம் இருக்கும் நிலையில் கேரளாவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதற்காக வழக்கறிஞர்கள் யாரும் கண்ணீர் வடிக்கவில்லை. போராடவும் இல்லை. ஏனென்றால், சென்னையிலுள்ள வழக்கறிஞர்களுக்கு அவர் மதுரைக் கிளை அமைப்பதற்காக அதிக சிரமம் எடுத்துக்கொண்டார் என்பதில் கோபம். ஆனால், இன்று தஹில் ரமாணி பணியிட மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமல் ராஜினாமா செய்த பிறகும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதற்கு எவ்வித நியாயமும் இல்லை.

இதற்கெல்லாம் போராடினீர்களா?

  • இந்தியாவிலுள்ள 25 உயர் நீதிமன்றங்களுக்கும் தலைமை நீதிபதிகள் வெளிமாநிலத்திலிருந்துதான் நியமிக்கப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில், வெவ்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலுள்ள நீதிபதிகளின் முதுநிலைப் பட்டியல் வெவ்வேறாக இருப்பதால் அவர்களை ஆட்கொள்ளப்போகும் உயர் நீதிமன்றங்களைக் கண்டுபிடிப்பதே கடினம். சென்னை உயர் நீதிமன்றம் விக்டோரியா மகாராணியின் சாசனத்தின்படி 1862-ல் நியமிக்கப்பட்டது. அதில் தற்போது 75 நீதிபதிகள் இருக்கிறார்கள். எனவே, பாரம்பரியம் மிக்க இந்த நீதிமன்றத்திலிருந்து சிறிய நீதிமன்றங்களுக்குச் செல்வது இழுக்கு அல்லது தண்டனை என்று கூறுபவர்களுக்கு என்னுடைய சிறிய கேள்வி. இதுவரை சென்னையில் பணியாற்றிய நீதிபதிகள் எவரையாவது அதே பாரம்பரியம் உள்ள பம்பாய் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களுக்குத் தலைமை நீதிபதியாக நியமனம் பெற்றிருக்கிறார்களா?
  • இதுவரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய மாநிலங்கள் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, சிக்கிம், மணிப்பூர், இமாசல பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பிஹார் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மட்டுமே. இதையெல்லாம் எந்த வழக்கறிஞர்கள் சங்கமும் கேட்டது கிடையாது. அதேபோல் 17 நீதிபதிகளடங்கிய ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த சுதாகர் அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. மாறாக, மூன்று நீதிபதிகளடங்கிய மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்கும் சென்னை வழக்கறிஞர்கள் போராடவில்லை.
  • அதேபோல், சமீபத்தில் நீதிபதி ராமசுப்பிரமணியன் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய இமாசல பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர், முன்னர் பணியாற்றிய தெலங்கானா (அ) ஆந்திர உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்பது குறித்தும் வழக்கறிஞர்கள் போர்முரசு கொட்டவில்லை.

தவறான முன்னுதாரணம்

  • நீதிபதிகளுடைய பணியிட மாற்றத்தை முடிவுசெய்வது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் முதல் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் மட்டுமே. அவர்கள் மீது எந்தத் தனிப்பட்ட குற்றச்சாட்டும் கூறப்படவில்லை. மேலும், இந்த முடிவை எடுக்கும்போது அரசின் தலையீடு இருந்தது என்றும் யாரும் கூறவில்லை. உண்மையில், எந்தத் தகவல்களின் அடிப்படையில் அக்குழு முடிவெடுத்தது என்பது இன்று வரை ரகசியமே. இச்சூழ்நிலையில், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தைப் பழிவாங்குதல் என்று கூறி வழக்கறிஞர்கள் போராட முன்வந்துள்ளது தவறான முன்னுதாரணம்.
  • காஷ்மீர் போன்ற பிரச்சினையில் அரசமைப்புச் சட்டம் வளைக்கப்பட்டுள்ளது என்றும், காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது என்றும், அரசியல் தலைவர்கள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் வழக்கறிஞர்கள் போராடவில்லை. மாறாக, பணியிட மாற்றத்தைப் பெண்ணியப் பிரச்சினையாகப் பார்க்க வற்புறுத்துவது சரித்திரப் பிழை. தற்போது இரண்டு பெண் நீதிபதிகள்தான் இருக்கிறார்கள். தஹில் ரமாணி மேகாலயாவுக்குச் சென்றாலும் அந்த எண்ணிக்கை குறையப்போவதில்லை. ஆனால், அவர் ராஜினாமா செய்ய முற்பட்டுள்ளது அவரது தனிப்பட்ட விருப்பமாகும். இப்படி அர்த்தமற்ற பிரச்சினைகளில் வழக்கறிஞர்கள் தங்களது நேரத்தை விரயமாக்காமல், ஏழு லட்சம் வழக்குகளை எப்படி விரைந்து முடிப்பது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். புதிதாக வரக்கூடிய தலைமை நீதிபதி தேக்கத்தைப் போக்குவாரா என்றுதான் யோசிக்க வேண்டும். செய்வார்களா?

நன்றி: இந்து தமிழ் திசை (10-09-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories