TNPSC Thervupettagam

வட இந்தியா, தென்னிந்தியா மோதலுக்கு வாய்ப்பு தரக் கூடாது

June 20 , 2023 573 days 402 0
  • நாடாளுமன்ற மக்களவையில் அதிகபட்சம் 888 உறுப்பினர்கள் அமரும் வகையில் இருக்கை வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஏதோ அற்பமான துணுக்குச் செய்தி போலத் தெரியும் இது மிகப் பெரிய அரசியல் கொந்தளிப்பைத் தூண்டும் தன்மையது; மக்களவைத் தொகுதிகளின் மறுவரையறையின்போது மாநிலங்களுக்கான இடங்களில் மாற்றம் செய்ய பாரதிய ஜனதா முடிவு செய்திருக்கிறது என்ற பேச்சு நிலவுகிறது. இது கனவுலக ஊகம் அல்ல, நிஜமாக நடக்கக் கூடியது. இது முட்டாள்தனமான யோசனையும் அல்ல, கொள்கை அடிப்படையிலானது. இருந்தாலும் இன்றைய நிலையில் இது இந்தியாவுக்குத் தேவையே இல்லை.
  • முதலில் இந்த ஊகம் எப்படிப்பட்டது என்று பார்ப்போம். மக்களவையில் இப்போது 543 இடங்கள் உள்ளன. (ஆங்கிலோ இந்தியர்களுக்காக 2 தனியிடங்கள்). அரசமைப்புச் சட்டப்படி ஒதுக்கப் பட்டுள்ள அதிகபட்ச இடங்கள் 552. மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் 81வது கூறு தெரிவிக்கிறது. மாநிலங்களுடைய மக்கள்தொகையில் மாற்றம் ஏற்பட்டால் என்னாவது என்பதே இப்போதைய கேள்வி.
  • பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்ய சட்டம் வழிசெய்துள்ளது. இப்படி 1961, 1971 மக்கள்தொகை கணக்கெடுப்புகளுக்குப் பிறகு தொகுதிகள் எண்ணிக்கை மாற்றப்பட்டன. ஆனால் 1976இல் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் இந்த நடைமுறையை நிறுத்திவிட்டது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு முடியும் வரை இதே நிலை நீடிக்கட்டும் என்றது. அதற்குப் பிறகு 2026 வரையில் இதே நிலை நீடிக்கட்டும் என்று அந்தத் தடை மேலும் நீடிக்கப்பட்டது.
  • கடந்த முறை இப்படி முடிவெடுத்த பிறகு, இனி இதே நிலைதான் நீடிக்கும் என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால், புதிய மக்கள்தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே தொகுதிகள் எண்ணிக்கையைத் திருத்தி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலிக்க பாஜக ஆர்வம் காட்டிவருகிறது. இப்போதுள்ள இடங்களை சில மாநிலங்களுக்குக் குறைத்துவிட்டு, வேறு சில மாநிலங்களுக்கு அதிகப்படுத்தியும் இதைச் செய்யலாம்; அல்லது மக்களவையின் மொத்த இடங்களையே அதிகப்படுத்திவிட்டும் இதைச் செய்யலாம். இரண்டாவது வழியைச் செயல்படுத்தினால் இப்போதுள்ள எண்ணிக்கை எந்த மாநிலத்துக்கும் குறையாது, அதேசமயம் மக்கள்தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்.
  • இந்த இரண்டாவது முறையைத் தேர்ந்தெடுத்து கேரளத்துக்கு இப்போதிருக்கும் அதே 20 தொகுதிகளைத் தக்கவைக்க அரசு விரும்பினால், மக்களவையின் மொத்தத் தொகுதிகள் எண்ணிக்கை 850க்கும் மேல் போகக்கூடும். புதிய நாடாளுமன்றத்தில் இருக்கைகள் எண்ணிக்கை அதிகப்படுத்தி இருப்பதால் பலருடைய புருவங்களும் அதனாலேயே உயர்ந்துள்ளன, பாஜக ஏதோ விஷமம் செய்யப்போகிறது என்ற சந்தேகம் அனைத்து எதிர்க்கட்சிகள் மனங்களிலும் தோன்றியிருக்கிறது.

இந்தி மாநிலங்களிலேயே பெரும்பான்மை

  • பாஜகவின் இந்த உத்தேச யோசனை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தவல்லது. 2026இல் எல்லா மாநிலங்களின் மக்கள்தொகை என்னவாக இருக்கும் என்ற அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை திருத்தி அமைக்கப்பட்டால், அனைத்து தென்னிந்திய மாநிலங்களின் தொகுதிகளும் குறையும். கேரளம் அதிகம் பாதிக்கப்படும்.
  • இப்போதுள்ள 20 இடங்கள் 12 ஆகக் குறைந்துவிடும். தமிழ்நாடு (8 தொகுதிகள்), ஆந்திரம், தெலங்கானா (இரண்டும் சேர்ந்து 8), மேற்கு வங்கம் (4), ஒடிஷா (3), கர்நாடகம் (2), பஞ்சாப், இமாசலம், உத்தராகண்ட் தலா ஒரு தொகுதியை இழக்கும். தொகுதிகள் அதிகமாவதெல்லாம் இந்தி பேசும் வட இந்திய மாநிலங்களில்தான் இடம்பெறும். உத்தர பிரதேசம் (11), பிஹார் (10), ராஜஸ்தான் (6), மத்திய பிரதேசம் (4) தேசியத் தலைநகரமான தில்லி, ஹரியாணா, குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களும் கூடுதலாக தலா ஓரிடத்தைப் பெறும். மகாராஷ்டிரம், அசாம், ஜம்மு – காஷ்மீர் என்ற மத்திய ஆட்சிக்குள்பட்ட இரு நேரடிப் பகுதிகளிலும் தொகுதிகள் எண்ணிக்கை மாறாது.
  • பிரச்சினையின் மையப்புள்ளி இதுதான். மக்கள்தொகை அதிகரிப்பு அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்தால் இந்தி பேசும் மாநிலங்களுக்குக் கூடுதலாக 33 தொகுதிகள் கிடைக்கும், இந்தி அல்லாத மொழி பேசும் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் குறையும். 543 மொத்தத் தொகுதிகளாக இருக்கும் இப்போது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் 226 தொகுதிகள் உள்ளன, மேலும் கூட்டப்பட்டால் அது 259 தொகுதிகளாகிவிடும்.
  • இதுவே கிட்டத்தட்ட பெரும்பான்மை எண்ணிக்கைதான். இந்தி அல்லாத மொழி பேசும் மாநிலங்களின் பெருநகரங்களில் புதிதாகக் குடியேறிவரும் இந்தி பேசும் மக்கள்தொகையைக் கணக்கில் கொண்டால், இந்தி பேசும் மக்களுடைய பிரதிநிதிகளே பெரும்பான்மையினராக இருப்பார்கள்.
  • மக்களவையின் தொகுதிகளை அதிகப்படுத்துவதால் அதன் தோற்றம் மாறலாமே தவிர அதன் அடிப்படைத்தன்மை மாறவே மாறாது. மொத்தத் தொகுதிகள் எண்ணிக்கை 848ஆக உயர்த்தப்பட்டால் கேரளம் வேண்டுமானால் 20 தொகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டுவிட்டோம் என்று திருப்திப்படலாம், ஆனால் உத்தர பிரதேசத்துக்கு மட்டும் 143 தொகுதிகள் கிடைத்துவிடும், பிஹாருக்கு 79, ராஜஸ்தானுக்கு 50 தொகுதிகளாகிவிடும்.
  • இந்தி பேசும் மாநிலங்களுடைய மொத்த இடங்களே பெரும்பான்மையைத் தந்துவிடும். இந்தப் பலன் யாருக்குக் கிடைக்கும் என்று ஊகிக்க வேண்டிய அவசியமே இல்லை. 2011 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால் பாஜகவுக்குக் கூடுதலாக 17 தொகுதிகள் கிடைக்கும் அதுவும் மாநிலக் கட்சிகளுடைய இடங்களாகவே இருக்கும்.

ஜனநாயகக் கொள்கை

  • மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதை பகுத்தறிவற்ற செயல் என்று கூறிவிட முடியாது. ஒரு மனிதன், ஒரு வாக்கு, ஒரே மதிப்பு என்பதே உயரிய ஜனநாயகக் கொள்கையாகும். உத்தர பிரதேசத்தில் 30 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரே ஒரு மக்களவை உறுப்பினர், தமிழ்நாட்டில் 18 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு உறுப்பினர் என்றிருக்கிறது.
  • இதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் இருப்பவரின் அரசியல் மதிப்பு உத்தர பிரதேசத்தில் இருப்பவரைவிட இரட்டிப்பு என்றாகிறது. இது விரும்பத்தக்கதல்ல. அதனால்தான் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் எண்ணிக்கையை மறுவரையறை செய்துகொள்ளலாம் என்ற ஏற்பாட்டைச் செய்தார்கள். சாதாரணமாக ஜனநாயகராக இருப்பவர் இந்த ஏற்பாட்டை ஆதரிக்க வேண்டும்.

செயல்பட்டதற்கு தண்டனை!

  • ஆனால், இந்த மறுசீரமைப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் கூறுவது, மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தண்டனையாக தொகுதிகள் குறைக்கப் படுகின்றன, அதில் அலட்சியமாக இருந்த மாநிலங்களுக்குக் கூடுதல் தொகுதிகள் பரிசாக அளிக்கப்படுகின்றன என்பது.
  • இது பகுத்தறிவு நோக்கில் தவறானதுதான். மக்கள்தொகை உயர்வதற்கும் சிசு மரண விகிதங்கள் குறைவதற்கும் காரணம் எழுத்தறிவும் சுகாதார நல வசதிகளும் அதிகரிப்பதுதான், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளின் பங்களிப்பு இதில் ஓரளவுக்குத்தான்.
  • அப்படிப் பார்த்தால் நலிவுற்ற பிரிவினர்தான் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர், அவர்கள் பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், ஒடுக்கப்பட்டவர்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற சமூகங்களிலும் ஏழைகள். உலக அளவில் பார்த்தால் ஏழை நாடுகளிலும் இந்தியாவிலும் மக்கள்தொகை அதிகமாக இருக்கிறது.

கூட்டாட்சிக் கொள்கை

  • மக்கள்தொகை எண்ணிக்கைதான் தொகுதிகளைத் தீர்மானிக்கிறது என்றாலும் இன்னொரு முக்கியமான ஜனநாயக கொள்கையைக் கருத்தில் ஏற்று, இதை நிராகரித்தாக வேண்டும். அது கூட்டாட்சித் தத்துவம். கூட்டரசு என்பதையே நாம் அடிப்படைக் கட்டமைப்பாக அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றிருக்கிறோம். பல்வேறு மாநிலங்கள் இணைந்த கூட்டரசில் எந்த மாநிலமும் பிற மாநிலத்தைவிட உயர்ந்ததோ முக்கியமானதோ அல்ல. அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும். அப்படிப் பார்த்தால் தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்துவது சரியல்ல. இதைப் புறந்தள்ளிவிட்டு தொகுதிகள் எண்ணிக்கையை மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் உயர்த்தினால் அது புவியியல், மொழி, பொருளாதார, அரசியல் பின்னணிகளைப் புறந்தள்ளும் செயலாகிவிடும்.
  • இந்த முடிவால் ஆதாயம் அடைகிறவர்கள் இந்தியாவின் வடக்கிலும், இழப்பைச் சந்திக்கிறவர்கள் இந்தியாவின் தெற்கிலும் இருப்பார்கள். ஒடியா, வங்காளி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுகிறவர்கள் இழப்புக்கு உள்ளாவார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அதிகம் பங்களிப்பு செய்யும் எங்களுக்கு ஜிஎஸ்டி வரி வருவாயில் குறைவாகவே பங்கு தரப்படுகிறது என்று ஏற்கெனவே சுட்டிக்காட்டி வருகிறார்கள்.
  • தொகுதிகள் அதிகமாகக்கூடிய மாநிலங்கள் காங்கிரஸ் எதிர் பாரதிய ஜனதா என்றிருக்கும் அரசியல் களங்கள். தொகுதிகள் குறையும் மாநிலங்களில் மாநிலக் கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவ்வாறு நான்கு வகை பரிமாணங்களில் தொகுதி வரையறை இந்தி பேசாத மாநிலங்களுக்கு அநீதியை ஏற்படுத்திவிடக்கூடும். இதனால் ஏற்கெனவே கனல் வீசிக்கொண்டிருக்கும் வடக்கு எதிர் தெற்கு, இந்தி எதிர் இந்தியல்லாத மொழி பேசும் மொழிகள் என்ற எதிர்ப்புணர்வுகளுக்கு மேலும் தூபமிட்டதைப் போலாகிவிடும்.
  • இந்தியாவின் ஒற்றுமையை இதுநாள் வரை கட்டிக்காத்துவரும் கூட்டாட்சித் தத்துவத்தை இதற்குப் பிறகு மீறும் செயல் எதையும் அரசு மேற்கொள்ளக் கூடாது. அதிக தொகுதிகள் மூலம் ஆதிக்கம் செலுத்துவது இந்தி பேரினவாதத்தைக் கட்டாயப்படுத்தித் திணித்து, கூட்டரசின் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகிவிடும். எனவே, இந்த விவகாரத்தில் நிதானத்தைக் கடைப்பிடித்து, வடக்கின் ஆதிக்கத்துக்கு வழியில்லாமல் சமரசம் காண்பது நல்லது.
  • அரசியல் என்பது ஒரே ஒரு பிரச்சினையை மட்டும் கவனத்தில் கொண்டு அதற்கு ஒரே ஒரு தீர்வை மட்டும் காண்பதல்ல. ஒரு விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, பாதிப்பில்லாதபடி சமரசத் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும். நம் நாடு தொடர்ந்து கூட்டரசாகவே நீடிக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமைக்குப் பெருத்த அச்சுறுத்தலாக வகுப்புவாதம் தலைதூக்கிவரும் வேளையில் வேறுவகை பிளவு முயற்சிகளுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது. குறுகிய கால அரசியல் ஆதாயத்துக்காக, ஏதோ ஒரு தூண்டலில் இத்தகைய முடிவை பாஜக எடுத்துவிடாது என்று நம்புவோம்.

நன்றி: அருஞ்சொல் (20  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories