TNPSC Thervupettagam

வணிக வழி வேளாண் சுற்றுலா 2: வளர்ந்த நாடுகளில் வேளாண் சுற்றுலா

April 1 , 2024 265 days 243 0
  • வளர்ந்த நாடுகள் யாவும் தன்னகத்தே பல்வேறு புதியதொரு தொழில் முறைகளையும், தொழில் நுட்பங்களையும் கையில் வைத்துள்ளன. அந்த வகையில் வேளாண் சுற்றுலாவை முதன் முதலில் அறிமுகப்படுத்தி அழகு பார்த்த பெருமை இத்தாலி நாட்டுக்கு உண்டு என்பதை முன்பே பார்த்து இருந்தோம். அதே வழியில் இங்கு ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளையும் குறிப்பிட வேண்டும். ஸ்பெயின் நாடானது அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப வேளாண் சுற்றுலா தொடர்பான கொள்கைகளை வகுத்துள்ளது.
  • ஏனென்றால் வேளாண்மை என்பது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபடும் தன்மை கொண்டது. அதனை ஒரே நேர்க்கோட்டில் அளவிடுதல் கூடாது. ஆம் நிலவும் தட்ப வெப்பநிலை, மண் வளம் வரை மற்றும் வளரும் பயிர் வகைகள் என ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபாடு இருக்கும். அதனையே இங்கு ஸ்பெயின் நாட்டின் வேளாண் சுற்றுலா தொடர்பான கொள்கை பறைசாற்றுகிறது.
  • அடுத்து வேளாண் சுற்றுலாவாசிகளுக்கு, வேளாண் சுற்றுலா பண்ணை வைத்திருப்போர் ஏற்படுத்தித் தர வேண்டிய பாதுகாப்பை அமெரிக்காவின் வேளாண் சுற்றுலா தொடர்பான சட்டம் வலியுறுத்துகிறது. இப்படி ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் வேளாண் வளங்களுக்கு ஏற்ப வேளாண் சுற்றுலா தொடர்பான கொள்கை மற்றும் சட்டங்களை இயற்றி உள்ளன.

சர்வதேச புள்ளிவிவர கணக்கு

  • உலகளவில் 2019-ம் ஆண்டு வேளாண் சுற்றுலாவின் மதிப்பு 42.46 பில்லியன் டாலராக இருந்தது, அதுவே 2027-ம் ஆண்டு 62.98 பில்லியன் டாலராக உயரும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. அத்துடன் 2019 முதல் 2027-ம் ஆண்டுக்கு இடையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 13.4 சதவீதம் அளவுக்கு வேளாண் சுற்றுலாவின் வளர்ச்சி இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
  • மேலும் 2002 முதல் 2017 -ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவில் விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானம் என்பது வேளாண் சுற்றுலா வழியே மூன்று மடங்கு பெருகியுள்ளது.

அமெரிக்காவில் வேளாண் சுற்றுலா

  • அமெரிக்க விவசாயிகளிடத்தில் வேளாண் சுற்றுலா பலத்த நம்பிக்கையை பெற்றுள்ள அதே வேளையில் சுற்றுலாவாசிகளிடத்தில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக சுற்றுலா வாசிகளுக்கு வேளாண் விளைபொருட்களை நேரடியாக விற்பதால் நல்ல லாபம் கிடைப்பதாக வேளாண் சுற்றுலா வைத்திருக்கும் விவசாயிகள் கூறுகின்றனர்.
  • 2017-ம் ஆண்டின் புள்ளி விவர கணக்குப்படி 28,575 பண்ணைகளில் வேளாண் சுற்றுலா நடைபெறுவதாகவும், அதன் மூலம் சுமார் 949 மில்லியன் டாலர் அளவிலான வேளாண் விளைபொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
  • மேலும் வேளாண் சுற்றுலா பண்ணைகளை எடுத்துக் கொண்டால் பல்வேறு வகைகளில் சுற்றுலாவாசிகளை கவரும்படி வடிவமைத்துள்ளனர். உதாரணத்திற்கு பழம் மற்றும் காய்கறித் தோட்டங்களில் சுற்றுலாவாசிகளே அவர்களுக்கு வேண்டியதை நேரடியாக சென்று அறுவடை செய்து கொள்ளலாம். திராட்சை தோட்டங்களில்காய்த்திருக்கும் பழங்களை அறுவடை செய்து ஒயின் தயாரிப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • குழந்தைகளை அழைத்து வந்து பயிர்களை, பழங்களை அடையாளம் காட்டலாம். ஒரு வகையில் இது அவர்களிடையே வேளாண்மை சார்ந்த கல்வியறிவை ஊக்குவிக்கும். அத்தோடு அவர்களுக்கு உண்டான பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து இருக்கின்றன. குதிரை சவாரி, பண்ணை குட்டைகளில் மீன் பிடிப்பு போன்றவைகளும் பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன.
  • இவை எல்லாவற்றையும் தாண்டி வேளாண் பண்ணைகளில் திறந்த வெளியில் நடக்கும் திருமணங்களுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆம், ஆண்டுக்கு 60 பில்லியன் டாலர் அளவிலான மதிப்பைக் கொண்டிருக்கும் திருமணம் தொடர்பான தொழிலில் வேளாண் சுற்றுலா பண்ணைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (01 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories