TNPSC Thervupettagam

வனங்களைத் தேடி...

March 21 , 2019 2125 days 2051 0
  • வனங்களும், வனங்களில் உள்ள மரங்களும் மனிதன் மட்டுமல்லாது அவற்றைச் சார்ந்துள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதரவு அளித்து அவற்றின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன.
உலக வன விழிப்புணர்வு நாள்
  • வனங்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 21-ஆம் தேதியன்று உலக வன விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வனங்களும் அவை தொடர்பான கல்வியும் என்னும் கருத்தியலில் உலக வன விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
  • ஓர் ஆரோக்கியமான நாட்டுக்கு அதன் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனங்களைக் கொண்ட பசுமைப் பரப்பாக  இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கின்றனர் அறிவியல் அறிஞர்கள்.
  • கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2017-ஆம் ஆண்டுக்கான வனங்களின் பரப்பு  பற்றிய வன ஆராய்ச்சி மைய அறிக்கையின்படி, இந்தியாவில் வனங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த பசுமைப் பரப்பு 39 சதவீதம் உள்ளது.
  • இதில் 54  சதவீதம் விலங்குகள், பறவைகள் வாழும் வனப்பரப்பாக உள்ளதென்றும், மீதமுள்ள 2.85 சதவீத பரப்பளவு வனங்களுக்கு வெளியே உள்ள மரத்தோட்டங்களாகவும் மற்றும் ஏனைய தாவரங்கள் நிறைந்த பசுமைப் பரப்பாக உள்ளதென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இந்த அறிக்கையில், இந்தியாவில் 2015, 2017-ஆம் ஆண்டுகளுக்கு  இடைப்பட்ட  காலகட்டத்தில் வனம் மற்றும் மரங்கள் நிறைந்த பசுமைப் பரப்பு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் ஏறக்குறைய  1சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
விருக்ஷ ஆயுர்வேதம்
  • நாம் பிறக்கும்போது ஆட்டுவிக்கும் தொட்டிலில் இருந்து பிறந்த பின் சுவாசிக்கும் காற்று, இறக்கும்போது எரிக்கப் பயன்படும் விறகு, புதைக்கப் பயன்படும் சவப்பெட்டி வரை அனைத்தையும் வாரி வழங்கும் வள்ளல்கள் வனங்களும், வனங்களில் உள்ள மரங்களும்தான். பத்து புத்திரர்களைப் பெற்று அவர்கள் செய்யும் தாய், தந்தை கடன்களைவிட ஐந்து மரங்களை நட்டு அவை வழங்கும் பயன்கள் மேலானவை என்கிறது மர சாஸ்திர நூலான விருக்ஷ ஆயுர்வேதம்.
  • பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச்  சமம்;  பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச்  சமம்; பத்து ஏரிகள்  ஒரு புத்திரனுக்குச் சமம்; பத்து புத்திரர்கள் ஒரு மரத்துக்குச் சமம் என்று ஆய்ந்து அறிந்து மரத்தின் பெருமையை நம் முன்னோர் கூறியுள்ளனர். வனங்கள் ஒரே நாளில் உருவானதில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு உயிரினங்களின் கடுமையான உழைப்பினால் உருவான ஒரு சிறப்பு நிறைந்த அமைப்பு. ஒரு வனம் அழியும்போது வெறும் மரங்கள் மட்டும் அழியாமல் அங்கிருக்கும் தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் என அனைத்துமே ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுகின்றன. வனங்கள் அழிவதால் சுற்றுச்சூழல் அழிந்து பருவநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. முன்னொரு காலத்தில் ஒவ்வொருவரும் அவர்களுடைய வீடுகளைச்  சுற்றி பசுமைத் தாவரங்களை நட்டு வளர்த்து வந்தனர்.
  • ஆனால், இன்றோ பலரும் அழகுக்காகவும் கவர்ச்சிக்காகவும் தம்முடைய வீட்டைச் சுற்றி பல்வேறு வண்ணங்களில் அலங்கரிக்கிறார்களே அன்றி பசுமைத் தாவரங்களையும் மரங்களையும் வளர்க்காமல் வீட்டைச் சுற்றி பெருஞ்சுவர்களையும் மின்வேலிகளையும்அமைத்து வருகிறார்கள். வனங்களாய் மரங்கள் நிறைந்து இருந்த பல்வேறு நிலப்பரப்புகள் இன்று கூறுபோடப்பட்டு, மாற்றப்பட்டு எழுப்பப்பட்டிருக்கும் விண்ணை  முட்டும்  கட்டடங்கள்  ஒவ்வொன்றிலும் பல மரங்களின் அழுகுரல்களும், பல்வேறு பறவைகள், விலங்குகளின் இறுதி ஊர்வலங்களும் அமைதியாகக் குழி தோண்டி  புதைக்கப்பட்டு விட்டன.
மரம் வளர்ப்பு
  • முக்கனிகள்  தரும் மரங்களையும், மூன்று தலைமுறை நம்முடன் சேர்ந்து பயணம் செய்து வரும் வனங்களையும் இழந்து, வணிக நோக்கத்தில் மட்டுமே இன்று மரங்களை வளர்க்கிறோம். ஒரு தலைமுறையில் வளர்க்கப்பட்டு பல தலைமுறைகளைக் கடந்தும் பலன் தந்து கொண்டிருக்கும் இந்த வனங்களை அழித்து, மரங்களைக் கொய்து நம்மை நாமே எதிரிகள் ஆக்கிக்கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கிறோம்; நம் நாட்டை பாலைவனமாக்கி வருகிறோம்.
  • இந்த நிலை மாறவும், வீடும் நாடும் வளம் பெறவும் அனைவரின் உடலும், உள்ளமும் தூய்மை பெற வேண்டும். அருமையான வழி இதோ:  வனம் வளர வாழ்வு உயரும்;  காடு  வளர நாடும் வளரும்; மரம் வளர்க்க வளர்க்க மானுடமும் வளரும்; எனவே, நம் நாட்டுச் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு மரங்களைத் தேர்வு செய்து காடு, வீடு, வீதி, ஊர், சேரி, தரிசு நிலம், புறம்போக்கு நிலம், நெடுஞ்சாலை ஓரம், குளக்கரை, ஏரிக்கரை, வயல் வரப்புகள், வாய்க்கால் என காணக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு மரம்;  ஒவ்வொரு புத்தாண்டின்  தொடக்கத்திலும்  ஒரு மரம்; ஒவ்வொருவரின் பிறந்தநாளன்றும் ஒரு மரம்; வீட்டின் பெரியோர் மறைந்த நாளன்று அவர் நினைவாக ஒரு மரம் நடுங்கள்.  ஊர்த் திருவிழாக்கள், அரசுப்பொது நிகழ்ச்சிகளிகளில் பங்கேற்கும் அனைவரும் ஒரு மரம் என நம்முடைய வாழ்வின்  ஒவ்வொரு நிகழ்விலும் மரம் நட்டு பூமியை மலர வைத்தால் வனங்கள் வாழ இந்த வையகமும் வாழும்.
உதாரணம்
  • ஆப்பிரிக்கக் கண்டம் பாலைவனமாகாமல் பசுமை பாதுகாப்பு இயக்கம் அமைத்துப் பாதுகாத்த வங்காரி மாத்தாய்,  வனங்களைப் பாதுகாக்க சிப்கோ இயக்கம் நடத்தி வெற்றி கண்ட சுந்தர்லால் பகுகுணா, தனி மனிதனாய் அஸ்ஸாமில் முலாய் என்னும் வனப் பகுதியை உருவாக்கிய ஜாதவ் பேயங், நாட்டு  மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழலைப் பேணிக் காத்து நாட்டைத் திரும்பிப்  பார்க்க வைத்த அஸ்ஸாம் மாநிலத்தில் வனப் பாதுகாவலராகப் பணிபுரியும்  சிவகுமார்...இன்னும் பலர் நம்மில் அயராது  உழைத்துக்  கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இன்றிலிருந்து இவர்களை எல்லாம் முன்மாதிரிகளாக எடுத்துக்கொண்டு  நம்முடைய வாழ்நாளில் குறைந்தது ஒரு மரமாவது நட்டு, பராமரித்து இந்தியாவை மீண்டும் பசுமையின் தாயகமாக மாற்ற உழைப்போம்.

நன்றி: தினமணி

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories