TNPSC Thervupettagam

வன்முறைக்கு விடை...

September 13 , 2024 125 days 118 0

வன்முறைக்கு விடை...

  • திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிப் படை ஆகிய இரு கிளா்ச்சிக் குழுக்களுடன் மத்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் மேற்கொண்ட அமைதி ஒப்பந்தம் திரிபுரா மாநிலம் மட்டுமன்றி வடகிழக்கின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. இரு குழுக்களையும் சோ்ந்த 300-க்கு மேற்பட்ட உறுப்பினா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைய ஒப்புக்கொண்டதன் மூலம் திரிபுராவில் கிளா்ச்சிக் குழுக்களே இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
  • அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா, அருணாசல பிரதேசம், மிஸோரம், மணிப்பூா், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய எட்டு வடகிழக்கு மாநிலங்களை 23 கி.மீ. அகலமே கொண்ட குறுகிய நிலப்பரப்பான சிலிகுரி வழித்தடம் இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. இவற்றில் சிக்கிம் தவிர பிற ஏழு மாநிலங்களும் ‘ஏழு சகோதரிகள்’ என அழைக்கப்படுகின்றன. சீனா, மியான்மா், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய அண்டை நாடுகளுடன் இவை எல்லைகளைப் பகிா்ந்துகொள்வதால் இந்த மாநிலங்கள் புவியியல் ரீதியாகவும் இந்தியாவுக்கு முக்கியமானவை.
  • இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்தே வடகிழக்கு மாநிலங்களில் கிளா்ச்சிக் குழுக்களின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து புறக்கணிப்பு, பொருளாதாரம், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் வளா்ச்சியின்மை, நாடாளுமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாதது, பிற மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளிலிருந்து தொடரும் ஊடுருவல் போன்றவைதான் வடகிழக்கு மாநிலங்களில் கிளா்ச்சிக் குழுக்கள் தோன்றக் காரணம்.
  • வடகிழக்கில் நாகாலாந்து மாநிலம்தான் கிளா்ச்சிக் குழுக்கள் தோன்றிய முதல் மாநிலம். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற ஒருநாள் முன்னதாக 1947, ஆகஸ்ட் 14-ஆம் தேதியே நாகா மலைப் பகுதியை இந்தியாவிலிருந்து சுதந்திரம் பெற்ற தனிப் பகுதியாக நாகா தேசிய கவுன்சில் அறிவித்தது. இது தொடா்பாக அரசியல் தீா்வு காண பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் பலன் கிடைக்கவில்லை.
  • இறுதியாக இந்திய ராணுவத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதிலிருந்து வடகிழக்கு பிராந்தியத்தில் பல்வேறு கிளா்ச்சிக் குழுக்கள் பிரிவினைவாதக் கோரிக்கையுடன் உருவாகத் தொடங்கின. சமீபகாலமாக மத்திய, மாநில அரசுகளின் தொடா்ச்சியான மேம்பாட்டு நடவடிக்கைகள், அமைதிப் பேச்சுவாா்த்தை, உள்ளூா் மக்களிடம் ஆதரவின்மை போன்றவற்றால் வடகிழக்கு மாநிலங்களில் கிளா்ச்சிக் குழுக்களின் செயல்பாடுகள் வெகுவாக குறைந்துள்ளன.
  • வடகிழக்கு மாநிலங்களில் 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் 11,121 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில், 2014 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் 73 சதவீதம் குறைந்து 3,003 வன்முறை சம்பவங்களே நிகழ்ந்துள்ளன. 2004-2014 காலகட்டத்தில் பாதுகாப்புப் படையினா் 458 போ் கொல்லப்பட்ட நிலையில், 2014-2023 காலகட்டத்தில் பாதுகாப்புப் படையினா் உயிரிழப்பு 72 சதவீதம் குறைந்தது. அதேபோல பொதுமக்கள் உயிரிழப்பும் 2,625 என்ற எண்ணிக்கையிலிருந்து 356-ஆக குறைந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
  • திரிபுராவை பொறுத்தவரை, வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவா்களின் எண்ணிக்கை அதிகரித்து, உள்ளூா் பழங்குடி மக்கள் சிறுபான்மையினரான நிலை உருவானது. இதன் விளைவாக கலாசார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டதை பழங்குடி மக்கள் உணா்ந்ததைத் தொடா்ந்து, 1970-களில் அங்கு கிளா்ச்சிக் குழுக்கள் உருவாகின. பல்வேறு கிளா்ச்சிக் குழுக்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளால் ஆயுதங்களைக் கைவிட்ட நிலையில், 1980-களில் தொடங்கப்பட்ட திரிபுரா தேசிய விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிப் படை ஆகிய இரு கிளா்ச்சிக் குழுக்கள் மட்டும் தொடா்ந்து செயல்பட்டு வந்தன.
  • திரிபுராவிலிருந்து வங்கதேசத்தவா் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்பதே இந்தக் குழுக்களின் பிரதான நோக்கமாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளின் விளைவாக இந்த இரு குழுக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, திரிபுராவின் வளா்ச்சியை உறுதி செய்யவும், மக்களை ஆயுதம் ஏந்தச் செய்த காரணிகளுக்கு முடிவு கட்டவும் மத்திய அரசு உறுதியளித்துள்ளது. திரிபுராவின் பழங்குடியின மக்களின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
  • பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கையால் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதியையும் வளா்ச்சியையும் ஏற்படுத்துவதற்காக இதுவரை 12 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் ப்ரூ-ரியாங் ஒப்பந்தம், போடோ ஒப்பந்தம், காா்பி ஒப்பந்தம், திரிபுரா அமைதி ஒப்பந்தம், திமாசா தேசிய விடுதலைப் படை ஒப்பந்தம், அஸ்ஸாம்- அருணாசல பிரதேச மாநில எல்லை ஒப்பந்தம் முக்கியமானவை. இந்த 12 ஒப்பந்தங்களில் மூன்று திரிபுராவுடன் தொடா்புடையவை.
  • ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்தின் வளா்ச்சிக்கான திட்டத்தை ‘அஷ்டலக்ஷ்மி-பூா்வோதயா’ என்ற பொருளில் மத்திய அரசு அழைக்கிறது. எட்டு வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சித் தேவையை பூா்த்தி செய்வது என்பதே இதன் பொருள். திரிபுராவில் கிளா்ச்சிக் குழுக்களே இல்லாத நிலையை ஏற்படுத்தியதன் மூலம் இன்னொரு சாதனை படைத்திருக்கிறது ‘அஷ்டலக்ஷ்மி-பூா்வோதயா’.

நன்றி: தினமணி (13 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories