- ஐக்கிய நாடுகள் அவை, ஆகஸ்ட் 9ஐ தொல்பழங்குடிகளின் (indigenous people) உரிமைகள் நாளாக 2007இல் அறிவித்தது. அது முதல் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பழங்குடி மக்களின் அனைத்துப் பிரிவினரும் உரிமைகளை வலியுறுத்தும் பேரணிகள், கருத்தரங்குகள், கூட்டங்கள், கலாச்சாரக் கொண்டாட்டங்கள் என இந்த நாளைப் பல்வேறு வடிவங்களில் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அரசும் இந்நாளை ஒரு சடங்காகக் கடைப்பிடித்து வருகிறது.
- பழங்குடிகள், வனத்தைச் சார்ந்து வாழும் இதர சமூகத்தினருக்குக் காடுகளின் மீதான உரிமைகளை அங்கீகரிக்கும் சட்டம், 2006 டிசம்பர் 15 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டது; இதற்கான விதிகள் 2008 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்தன. சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், அது முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை.
மறுக்கப்படும் உரிமைகள்
- வன உரிமைச் சட்டப்படி, நில உரிமை, குடியிருப்பு உரிமை கோரி 2023 மார்ச் 31 வரை நாடு முழுவதும் வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 43,64,312; சமூக உரிமை கோரி வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,80,574. இதில், தனிப்பட்ட குடும்பங்களுக்கு உரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது 21,99,012; சமூக உரிமை வழங்கப்பட்டது 1,08,700. தமிழ்நாட்டில் தனி உரிமை கோரி வந்த விண்ணப்பங்கள் 34,877; சமூக உரிமை கோரி வந்த விண்ணப்பங்கள் 2,584.
- இதில், தனிப்பட்ட குடும்பங்களுக்கு உரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது 10,536; சமூக உரிமைகள் அங்கீகாரம் வழங்கப்பட்டது 531. தமிழ்நாட்டில் உரிமைகள் வழங்கப்பட்ட மனுக்களை விடத் தள்ளுபடி செய்யப்பட்டவைதான் அதிகம் (13,841). சமூக உரிமைகள் கோரியதில் தள்ளுபடி செய்யப்பட்டவை 1,008. இப்படிச் செய்வது சட்டத்தின் நோக்கத்துக்கு நேரெதிரானது.
- வனத் துறை அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என்பது மாநிலம் முழுவதும் உள்ள புகாராக இருக்கிறது. ஆனால், நிலங்களை அளவீடு செய்வதற்குப் போதுமான அளவு நில அளவையாளர்கள் இல்லை என்பதால் காலதாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப் படுகிறது. அரசு நினைத்தால் இவற்றை உடனடியாகச் சரிசெய்ய முடியும்.
சென்றடைய முடியாத தொலைவுகள்
- இச்சட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம், சமூக உரிமைகள் குறித்தானது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்திமலைப் பகுதியில் வாழும் ஒருவர் சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப் பட்டார். சாலை வசதி இல்லாத காரணத்தால், தூளிகட்டி தூக்கிவந்து மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் இறந்துவிட்டார்.
- அதேபோல், வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் வசித்த ஒருவர், சாலை வசதி இல்லாத காரணத்தால் சிகிச்சைக்குத் தூக்கிச் செல்லப்பட்டபோது வழியிலேயே இறந்து விட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்த நிலையில், அவரது சடலத்தை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மலையடிவாரத்தில் இறக்கிவிட்டுவிட்டார். பிறகு, மூங்கிலில் தொட்டில் கட்டி, 10 கி.மீ. தூரத்துக்கு அவருடைய உறவினர்கள் சடலத்தைச் சுமந்து சென்றனர்.
- சுற்றுலாத் தலமாக வளர்ச்சியடைந்த மலைப் பகுதிகளுக்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் ஆட்சியாளர்கள் அதிக அக்கறை செலுத்துகின்றனர். சுற்றுலா மேம்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகும், பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் சென்றடையவில்லை என்பது கசப்பான உண்மை.
- வன உரிமைச் சட்டம் 2006இன் பிரிவு 2, அடிப்படைக் கட்டமைப்புகளுக்காக (ஒரு ஹெக்டேருக்குக் குறைவாக) காட்டு நிலங்களை ஒதுக்க வேண்டும் என்கிறது. கிராம சபையின் பரிந்துரையின் பெயரிலேயே அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். மரங்கள் வெட்டப்பட வேண்டியிருந்தால் ஒரு ஹெக்டேருக்கு, 75-க்கு மிகாத மரங்களாக இருக்க வேண்டும்.
மனம் இல்லா அரசு
- இச்சட்டம் வருவதற்கு முன்பு, மேற்படி பணிகளுக்கு வனத் துறையினரிடம் விண்ணப்பித்து டெல்லியிலிருந்துதான் அனுமதி வர வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், வன உரிமைச் சட்டம் 2006, கிராம சபைத் தீர்மானம் நிறைவேற்றி, கோட்ட அளவிலான வன உரிமைக் குழுவும் மாவட்ட அளவிலான வன உரிமைக் குழுவும் ஒப்புதல் வழங்கினாலே போதும்.
- அப்படியிருந்தும் இந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பழங்குடி மக்களைச் சென்றடையாததற்குக் காரணம், ஆட்சியாளர்களின் அலட்சியமும் அக்கறை யற்ற போக்கும் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்? முன்பு மத்திய அரசு அனுமதி தர மறுக்கிறது என்று பழியைத் தூக்கிப்போட ஒரு இடமிருந்தது. இப்போது மாநில அரசுக்கு மனம் இல்லை என்பதைத் தவிர வேறு எதையும் காரணமாகக் கூற முடியாது.
- அதேபோல், பழங்குடிகளுக்கான வன உரிமைகள் என்று பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள், கிழங்குகள், தீவனம் போன்றவற்றைச் சேகரிக்கும் பகுதிகள், உண்ணக்கூடிய காட்டுப் பழங்கள், சிறு வனப் பொருட்கள், மீன்பிடிப் பகுதிகள், நீர்பாசன அமைப்புகள், மனிதருக்கும் கால்நடைகளுக்குமான நீர்நிலைகள், மூலிகை மருத்துவர் மருத்துவப் பயனுடைய செடிகள் சேகரிக்கும் இடங்கள் ஆகியவை குறித்து விதிகள் 13, 2(ஆ)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
- முன்பகுதியில் குறிப்பிட்டுள்ள பழங்குடிகள் வாழும் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அல்லது வன உரிமைகள் என்று பட்டியலிடப் பட்டுள்ளதாக இருந்தாலும் இவற்றை நிராகரிப்பதற்கான மிகக் குறைந்தஅளவு நியாயம் கூடக் கிடையாது.
- பிறகு, எதன் அடிப்படையில் சமூகத்துக்கான உரிமை கோரிய மனுக்களில் பெரும் பகுதி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன? தங்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்பதுகூட மனு அளித்த குடும்பத்துக்கோ அந்தக் கிராமத்துக்கோ தெரியாது என்பதே நிதர்சனம்.
- அனைவரின் கோரிக்கைகளையும் சட்டத்தின் நோக்கங்களை மனதில் கொண்டு சரிபார்க்க வேண்டும் என்று சட்டத்துக்கான விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த அடிப்படையில் மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றனவா என்பது சந்தேகம்தான்.
வெற்றுப் புகழ்ச்சியைத் தாண்டி
- பழங்குடிகள் நாளில் அம்மக்களுடன் ஆடிப் பாடுவது, அவர்களைப் பற்றிப் புகழ்ந்து பேசுவது, ஆட்சியாளர்கள் ஏற்கெனவே செய்தவற்றை எடுத்துச் சொல்வது ஆகியவற்றைத் தாண்டி, சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை வழங்குவதும் அவர்களின் முன்னேற்றத்துக்கான நிரந்தரமான திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவதும் முக்கியம்.
- பழங்குடிகளுக்கு இந்திய அரசமைப்பு வழங்கியுள்ள பிரத்யேகமான உரிமைகள், ஒடுக்கு முறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள், பழங்குடியினர் ஆணையங்கள், அமைச்சகங்கள் எல்லாம் இருந்தும் அவை எதுவும் அம்மக்களுக்குப் பாதுகாப்பான உணர்வைத் தந்துவிடவில்லை.
- மாறாக, பழங்குடிகள் அச்சத்துடனும் ஆதரவற்ற உணர்வுடனும்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஒரு பழங் குடியினத்தவர், அதிலும் பெண் இருப்பது பெருமைக்குரியதுதான்.
- ஆனால், அதை மட்டும் சொல்லிக்கொண்டே, பழங்குடி மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்தும் வாழ்வாதாரமான மலைகளிலிருந்தும் அப்புறப்படுத்தும் வகையில் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்திருப்பதும், வன உரிமைச் சட்டம் 2006ஐ அமல்படுத்தாமல் இருப்பதன் மூலம் எட்டுக் கோடிப் பழங்குடியினருக்கும் பாதகம் செய்வதும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989-ஐ பெயரளவில் மட்டுமே நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதும் எந்த விதத்தில் நியாயம்? இந்த நிலை, ஆட்சியாளர்களுக்குப் பெருமை சேர்க்கக் கூடியதல்ல. பழங்குடிகள் கோரிக்கைவிடுப்பது, எங்களுக்கான உரிமைகளை, சமூகத்துக்கான உரிமைகளை மதித்து நடந்துகொள்ளுங்கள் என்பதே.
- ஆகஸ்ட் 9: பன்னாட்டுத் தொல்பழங்குடிகள் நாள்
நன்றி: இந்து தமிழ் திசை (09– 08 – 2023)