TNPSC Thervupettagam

வயநாடு நிலச்சரிவுக்கு யார் பொறுப்பு?

August 12 , 2024 156 days 160 0

வயநாடு நிலச்சரிவுக்கு யார் பொறுப்பு?

  • கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30 அன்று நிகழ்ந்த நிலச்சரிவு மிகப்பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஜூலை 29 வரை சராசரிக்கும் குறைவான மழைப்பொழிவைப் பெற்ற அம்மாவட்டம், ஜூலை 30, 31ஆம் தேதிகளில் மட்டும் 572 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெற்றது. இந்திய வானிலை ஆய்வு மையம் இதே காலக்கட்டத்தில் 64-124 மில்லிமீட்டர்கள் மழை பெய்யக்கூடும் என்று மட்டுமே கணித்திருந்தது. ஜூலையில் ஏற்கெனவே பொழிந்த மழையால் மண்ணின் உறுதித்தன்மை குறைந்திருந்த வேளையில், மிகக் குறுகிய கால இடைவெளியில் பெய்த அதிகனமழை நிலச்சரிவுக்குக் காரணமாக அமைந்தது என்பதே துறை சார் வல்லுநர்களின் கருத்து.
  • இந்நிலச்சரிவு, ஏறக்குறைய 8 கிலோமீட்டர் தூரத்துக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் விளைவாக, இதுவரை 400 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேரைக் காணவில்லை எனவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. மேப்பாடி, முண்டகை, சூரல்மலை ஆகிய ஊர்கள் முழுவதும் பாதிப்புக்குள்ளாகி, அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பேரிழப்பிலிருந்து அப்பகுதி மீண்டு வருவதற்கு நீண்ட காலம் ஆகலாம்!

யார் காரணம்?

  • இமயமலைத் தொடரைவிடப் பழமையான மேற்கு மலைத் தொடர் பல வகைகளில் தனித்துவமானது; சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏறக்குறைய அனைத்துத் தென் மாநிலங்களின் வானிலையைத் தீர்மானிக்கும் பகுதியாகவும், உலகளவில் அதிகமான உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட பகுதியாகவும் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இருந்தும் கனிம வளங்களை வரன்முறையின்றி வெட்டி எடுத்தல், காடழிப்பு, அதிக அளவிலான ஒற்றைப் பயிர் விவசாயம், சுற்றுலா - அது சார்ந்த மனிதச் செயல்பாடுகளால் இம்மலைத்தொடர் பெரும் அச்சுறுத்தல்களைச் சந்தித்துவருகிறது.
  • அத்தகைய அச்சுறுத்தல்களைக் குறைக்கும் எண்ணத்தில்தான் மாதவ் காட்கில் தலைமையிலும், கஸ்தூரிரங்கன் தலைமையிலும் நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டு, இம்மலைத் தொடரைப் பாதுகாப்பதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டன. ஆனால், மேற்கு மலைத் தொடர் அமைந்திருக்கும் மாநிலங்கள் அப்பரிந்துரைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தன. அது மட்டுமல்ல, இம்மலைத் தொடர் குறித்த பிற ஆராய்ச்சிகளின் எச்சரிக்கைகளையும் தென் மாநிலங்கள் ஏற்கத் தவறின என்பது குற்றச்சாட்டு.
  • இதன் அடிப்படையில்தான் வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவுக்குக் கேரள அரசும், அம்மாநில மக்களுமே முழுக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. மற்றொருபுறம், தீவிர வானிலை நிகழ்வான அதிகனமழை காரணமாக மக்கள் நடமாட்டமற்ற மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு, பின் கிராமங்களைச் சேதப்படுத்தியதால், இது ஓர் இயற்கைப் பேரழிவு எனவும், இதனைத் தவிர்த்திருக்கவே முடியாது எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், அதிக உயிர்ச்சேதமும், பொருள்சேதமும் ஏற்படக் காரணம் மலைச்சரிவின் இயற்கை அமைப்பில் விதிமுறைகளுக்கு உட்பட்டும், புறம்பாகவும் மக்கள் ஏற்படுத்திய பல்வேறு மாற்றங்கள்தான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

விமர்சனங்கள் ஏற்கத் தக்கவையா?

  • உலகம் முழுவதும் தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை 1981-1999 காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 2000-2019க்கு இடையேயான காலத்தில் 83% அதிகரித்துள்ளது என்பதைத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் ஏறக்குறைய 10 லட்சம் மனித உயிரிழப்புகளும், ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் நிகழும் தீவிர வானிலை நிகழ்வுகள் இத்தகு பேரிடர்களை உருவாக்குவதில் வினையூக்கியாகச் செயல்படுகின்றன என்பதைப் பல ஆராய்ச்சிகள் உறுதிசெய்துள்ளன. இதன் அடிப்படையில், வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவுக்குக் கேரள அரசையும், மாநில மக்களையும் மட்டுமே பொறுப்புக்கு உள்ளாக்குவது அறிவியலுக்குப் புறம்பான சந்தர்ப்பவாத அரசியல் என்னும் குரல்களும் ஒலிக்கின்றன.
  • ஏனென்றால், காலநிலை மாற்றம் ஏற்பட முதன்மைக் காரணம் கட்டுப்பாடற்ற கார்பன் உமிழ்வும், அதனால் நிகழும் புவிவெப்பமாதலும்தான். உண்மை இப்படியிருக்க, ஒரு தீவிர வானிலை நிகழ்வால் ஏற்படும் நிலச்சரிவுக்கு அந்நிலப்பரப்பைச் சார்ந்தவர்களை மட்டும் குற்றம்சாட்டுவது எப்படிச் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்?
  • தனிமனித கார்பன் உமிழ்வு மிகக் குறைவாக உள்ள பாகிஸ்தான், மடகாஸ்கர், சோமாலியா, சூடான் போன்ற நாடுகளும்கூட அதீத மழை, புயல், வறட்சி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்கின்றன. சிறு தீவு நாடுகள் கடல் மட்ட உயர்வால் பாதிப்புக்குள்ளாகி வருவதைக் காண முடிகிறது. அந்த வகையில் காலநிலை மாற்றத் தால் நிகழ்ந்துகொண்டிருக்கும் பேரிடர்களை எதிர் கொண்டு அவற்றிலிருந்து மீள்வது பொருளாதார - உள்கட்டமைப்பு வசதி குறைந்த நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் கடினம். அவர்கள் சமமற்ற வகையில் பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறார்கள் என்பதும் அறிவியல்பூர்வ உண்மை. பொதுவாகவே, மலையிலும் மலை சார்ந்த பகுதிகளிலும் வசிக்கும் பழங்குடிகளும் உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் காவலர்களாகவே இருக்கிறார்கள். எனவே, அவர்களை ஒட்டுமொத்தமாகக் குற்றஞ்சாட்டுவது அறிவுபூர்வமற்றது.
  • மாறாக, எங்கோ ஓர் இடத்தில் இருக்கும் பெரும் தொழிற்சாலைகளாலும், நகரவாசிகளாலும் நிகழும் கட்டற்ற கார்பன் உமிழ்வும் இத்தகு நிகழ்வுகளுக்குக் காரணமாகலாம் என்பதை மறுக்க முடியாது. ஒரு கணக்கீட்டின்படி, ஐரோப்பிய - வட அமெரிக்க நாடுகள் மட்டும் 62% கார்பன் உமிழ்வுக்குக் காரணம் என்று தெரியவருகிறது. எனவேதான், காலநிலை மாற்றப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு உதவும் நோக்கில் சர்வதேச இழப்பு - சேத நிதியை (Loss and Damage Fund) உருவாக்குவதன் முக்கியத்துவம் பற்றிய விவாதம் தற்போது வலுப்பெற்று உள்ளது.
  • 1991இல் இது தொடர்பான விவாதம் தொடங்கியது. 2013இல், வார்சா சர்வதேசச் செயல்முறை (Warsaw International Mechanism) மூலம் இதுபற்றி விவாதிக்க ஒரு தளம் அமைக்கப்பட்டது. 2015இல் பாரிஸ் ஒப்பந்தத்தில் இக்கருத்து சேர்க்கப்பட்டு, 2021இல் கிளாஸ்கோ மாநாட்டில் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்த நிதிக்குப் பங்களிக்க ஒப்புக்கொண்டன. 2022இல் COP27 மாநாட்டில் இந்த நிதி அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டது. தற்போது, இந்த நிதியின் செயல்பாடு, பங்களிப்பாளர்கள், பயனாளிகள் குறித்த விவாதங்கள் தொடர்கின்றன.

செய்ய வேண்டியவை என்ன?

  • வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு ஒரு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை கேரள அரசு முன்வைத்துள்ளது. இந்நிலச்சரிவு ஒரு தேசியப் பேரிடராக அறிவிக்கப்படும்பட்சத்தில் பாதிப்புக்குள்ளான நிலப்பரப்பையும், மக்களையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் மீட்டெடுக்கக் கூடுதல் நிதி கிடைக்க வழிவகை ஏற்படும். இது போன்ற பெரும் நிலச்சரிவுகள் ஏற்படக் காலநிலை மாற்றம் முதன்மைக் காரணமாக இருப்பதால், மேற்கூறிய சர்வதேச இழப்பு - சேத நிதியைப் போலவே, நம் நாட்டிலும் ஏற்கெனவே இருக்கும் தேசியப் பேரிடர் நிவாரண நிதியுடன் கூடுதலாக, ஒரு நிதி அமைப்பை ஏற்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.
  • தீவிர வானிலை நிகழ்வுகளை நம்மால் தடுக்க முடியாது. அவற்றின் தாக்கத்தை வேண்டுமானால் குறைக்கலாம். அந்த வகையில், காலநிலை மாற்றத்துக்கு இயைந்த தடுப்பு - தகவமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தற்போது கட்டாயமாகிறது. அந்நடவடிக்கைகள் வெறும் பொறியியல் - தொழில்நுட்பம் சார்ந்ததாக மட்டுமில்லாமல், சுற்றுச்சூழல் நலனைப் பாதுகாக்கும் சட்ட விதிகளை எவ்விதச் சமரசமும் இன்றி நடைமுறைப்படுத்துவதாகவும் அமைய வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் ஆக்கபூர்வப் பலன்கள் கிடைக்கும்!

நன்றி: இந்து தமிழ் திசை (12 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories