TNPSC Thervupettagam

வரலாறு முக்கியம் மாணவர்களே!

February 23 , 2025 5 days 13 0

வரலாறு முக்கியம் மாணவர்களே!

  • போட்டித் தேர்வுகளில் வரலாறு பாடத்தைப் படித்து நினைவில் வைத்துக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை பண்டைய வரலாற்றில் கற்காலம், சிந்துசமவெளி நாகரிகம் தொடங்கி அரேபியர் காலம் வரையும், இடைக்கால வரலாற்றில் சுல்தான்கள் ஆட்சி முதல் மொகலாயர் ஆட்சிக் காலம் வரையும், அடுத்து பிரிட்டிஷ் இந்தியா, அதற்கடுத்துச் சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியா எனவும் பாடங்களைப் பிரித்துப் படிப்பது நல்லது.

இந்திய வரலாறு:

  • பொதுவாக ஒரு நாகரிகத்தைப் பற்றிப் படிக்கும் போது நாகரிகம் தோன்றிய இடம், முக்கிய நகரங்கள், வாழ்க்கை முறை, தொழில், கலை, பொழுதுபோக்கு, எழுத்து முறை, வியாபாரம், நாணயம், அயல்நாட்டுத் தொடர்பு போன்றவற்றைப் பற்றி நன்கு அறிவது அவசியம்.
  • அரசாட்சிப் பற்றிப் படிக்கும்போது ஒவ்வொரு வம்சத்திலும் அதைத் தோற்றுவித்தவர், கடைசி மன்னர், முக்கிய மன்னர்கள், ஆட்சியில் சிறப்புப் பெற்றவர்கள், அறிஞர் பெரு மக்கள், நூலாசிரியர்கள் எனத் தனித்தனியே குறித்துவைத்துப் படிப்பது சிறந்தது.
  • குறிப்பாக மௌரிய வம்சத்தில் அசோகர் கல்வெட்டு, அவரது பௌத்த மதப் பணிகள், முக்கியப் போர்கள், மௌரிய ஆட்சி முறை, அயல் நாட்டுத் தொடர்பு, கலை வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி விரிவாக அறிந்திருக்க வேண்டும். குப்தர்கள், கனிஷ்கர், ஹர்ஷர் என யாராக இருப்பினும் மேற்கூறிய முறையில் குறிப்புகளை எடுத்தால் நல்லது. முக்கிய அறிஞர்கள், அவர்கள் எழுதிய நூல்கள் பற்றியும் அறிந்திருக்கவேண்டும். டெல்லி சுல்தான்கள் ஆட்சியில் அடிமை வம்சம், கில்ஜி, துக்ளக், சையது, லோடி வம்சங்கள் முக்கியமானவை.
  • முகலாயர்கள் ஆட்சியில் பாபர் தொடங்கி ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான், ஔரங்கசீப், இரண்டாம் பகதூர் ஷா ஆட்சி வரை நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் பட்டியலிட்டுப் படிப்பது நல்லது. இவர்களது ஆட்சிக் காலத்தில் கட்டிடக்கலை சிறந்து விளங்கியதால் அவற்றைப் பற்றி விளக்கமாக அறிந்திருக்க வேண்டும். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், பல்லவர்கள், சாளுக்கியர்கள், மராட்டியர்கள், விஜயநகரப் பேரரசு, ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்றோரின் ஆட்சியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளையும் இதே முறையில் குறிப்பெடுத்துப் படிப்பது நலம்.

விடுதலைக்கு முன்:

  • கிழக்கிந்திய கம்பெனியின் தோற்றத்திலிருந்து இந்தியா விடுதலை அடையும் வரையிலான பிரிட்டிஷ் இந்தியா காலத்தைப் பற்றிப் படிக்கும்போது முதல் கவர்னர் ஜெனரல், முதல் வைஸ்ராய் தொடங்கி கடைசி கவர்னர் ஜெனரல் வரை அனைத்து அதிகாரிகளின் முக்கியச் செயல்களைப் பட்டியலிட்டுப் படிப்பது நல்லது. ஒழுங்குமுறைச் சட்டம், பிட் இந்தியச் சட்டம், மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம், ரௌலட் சட்டம் போன்று முக்கியமான சட்டங்கள் அமலாக்கப்பட்ட ஆண்டு, அவற்றின் தாக்கம் ஆகியவற்றைப் படிக்க வேண்டும்.
  • துணைப் படைத் திட்டம், வாரிசு இல்லாக் கொள்கை போன்ற ஷரத்துகளைப் பற்றியும், வட்ட மேசை மாநாடுகள், சைமன் குழு, கிரிப்ஸ் குழு, கேபினட் தூதுக்குழு ஆகியவற்றைப் பற்றியும் அறிந்திருப்பது அவசியம். காவல்துறை, ரிசர்வ் வங்கி போன்றவை எப்போது, யாரால் உருவாக்கப்பட்டன என்கிற தகவல்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
  • விடுதலை இயக்கத்துக்கு வித்திட்ட இந்திய சிப்பாய் கலகம், முக்கியப் பங்காற்றிய இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் கட்சிகள் ஆகியவற்றின் தோற்றம், இக்கட்சிகளின் முக்கிய மாநாடுகள் குறித்தும், அதில் பங்கேற்ற தலைவர்கள் குறித்தும் நன்கு படிக்க வேண்டும்.
  • ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், ஆகஸ்ட் புரட்சி போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது ஆட்சி செலுத்திய கவர்னர் ஜெனரல், இயக்கங்கள், புரட்சிகளுக்குத் தலைமையேற்ற தலைவர்கள், நடைபெற்ற இடங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். விடுதலை இயக்கத் தலைவர்கள் சார்ந்த சங்கங்கள், நடத்திய பத்திரிகைகள், பங்கேற்ற போராட்டங்கள், அவர்களது பட்டப்பெயர்கள், முக்கிய வசனங்கள், எழுதிய நூல்கள் குறித்த தகவல்களைச் சேகரித்துப் படிப்பதும் தேர்வில் உங்களுக்கு உதவக்கூடும்.
  • இந்திய விடுதலைக்குப் பின்பு ஆண்டுதோறும் நடந்த முக்கிய நிகழ்வுகளை, வரலாற்றுச் சான்றுகளை தேசிய, மாநில வாரியாக வரிசைப்படுத்தி எழுதி வைத்துக்கொண்டு படிப்பது நலம். எதிர்காலத்தில் மாணவர்கள் எழுதப்போகும் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற இப்படி வரலாற்றுப் பாடத்தில் உள்ள முக்கியப் பகுதிகளைப் படித்துத் தேர்வுக்குத் தயாராகலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories