TNPSC Thervupettagam

வரலாற்றில் இடம்பெறட்டும் காலை உணவுத் திட்டம்!

February 21 , 2020 1791 days 1373 0
  • சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சமீபத்தில் தொடங்கி வைத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டே திருவான்மியூர் மாநகராட்சிப் பள்ளியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுவிட்டாலும், இப்போதுதான் சென்னை மாநகராட்சி முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ளதன் மூலம் தமிழகம் முழுவதும் செயலாக்கப்படுவதற்கான ஒரு விஸ்தீரணத்தை அடையத் தொடங்கியிருக்கிறது.

மதிய உணவுத் திட்டம்

  • ஏழை எளிய மாணவர்களைப் பள்ளியை நோக்கி இழுத்ததில் மதிய உணவுத் திட்டத்துக்கு முக்கியப் பங்குண்டு. நாட்டிலேயே முதன் முதலாகப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது தமிழகத்தில்தான். 1923-ல் சென்னை மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அன்றைய மதறாஸ் மாகாணத்தை ஆண்ட நீதிக் கட்சியின் அரசு தொடங்கி வைத்தது.
  • மதிய உணவுத் திட்டத்தை மேலும் பரந்த அளவில் மக்கள் பங்களிப்புடன் முழுமையடையச் செய்தவர் காமராஜர். தொடர்ச்சியாக அதைச் சத்துணவுத் திட்டமாக விரிவடையச் செய்தவர் எம்ஜிஆர். அதைத் தொடர்ந்து கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதைத் திறம்பட தொடரச் செய்ததுடன், பல்வேறு வகைகளில் மேம்படுத்தவும் செய்தனர்.

சத்துணவுத் திட்டம்

  • தமிழகத்தைப் பார்த்துதான் பிற மாநிலங்கள் சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கின. இப்போது அந்த வரலாற்றின் தொடர்ச்சியில் முதல்வர் பழனிசாமியின் பெயரும் இடம்பெறவிருக்கிறது. ஆனால், தமிழக அரசே இதை முன்னின்று செயல்படுத்துகையில்தான் இது முழுமை பெறும்.
  • தற்போது சென்னையில் தொடங்கப்பட்டிருக்கும் காலை உணவுத் திட்டத்தில் அரசின் பங்களிப்பு இருந்தாலும், பெருமளவில் அது ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் முன்னெடுப்பாக அமைந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட ‘அட்சய பாத்திரம் அறக்கட்டளை’ அதனுடைய உணவில் பூண்டு, வெங்காயம் சேர்ப்பதில்லை;
  • இதற்கு அதன் ‘சைவக் கொள்கை’யே காரணம் என்று சர்ச்சைக்குள்ளானதும், இந்த உணவின் மீதான அதிருப்தியைக் கடந்த ஆண்டு கர்நாடக அரசே வெளியிட்ட வரலாறும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மேலும், அந்தந்த இடங்களிலேயே சமைக்கப்படும் தமிழக சத்துணவு முறை வெற்றிகரமான ஒன்றாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மாறாக, மையப்படுத்தப்பட்ட சமையலறையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு உணவை எடுத்துச் சென்று விநியோகிக்கும் முறையானது, பல மாநிலங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் இருக்கிறது. ஒருவேளை திட்டத்தை நேரடியாகச் செயல்படுத்துவதற்குப் பணம்தான் காரணம் என்றால், சமூகப் பங்களிப்போடு இதைச் செய்யலாம்.

காலை உணவுத் திட்டம்

  • திருச்சியில் கி.ஆ.பெ.வி. பள்ளியில் தொடங்கப்பட்டு, பின்னாளில் ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் பல்வேறு பள்ளிகளுக்கும் பரவிய காலை உணவுத் திட்ட முன்மாதிரியை அரசு பின்பற்றலாம்.
  • சமீப காலமாகப் பள்ளிக் கல்வித் துறையில் முற்போக்கான மாற்றங்களைத் தமிழக அரசு செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக, காலை உணவுத் திட்டத்தையும் தமிழக அரசே மேற்கொள்ளுமானால், தமிழகப் பொதுப் பள்ளி வரலாற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பின்னாளில் வரலாறு முதல்வர் பழனிசாமியின் பெயரை உச்சரிக்கும்!

நன்றி: இந்து தமிழ் திசை (21-02-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories