வரலாற்று சாதனை! 91-ஆவது ஆண்டில் "தினமணி'
- தமிழ் நாளிதழ் வரலாற்றில் "தினமணி' இன்று புதிய அத்தியாயம் படைக்கிறது. தமிழுக்கும், தேசத்திற்கும் கடந்த 90 ஆண்டுகளாக சேவை செய்துவரும் "தினமணி' இன்று 91-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மகாகவி பாரதியாரின் 13-ஆவது நினைவு தினமான 1934 செப்டம்பர் 11-ஆம் நாள் அரையணா விலையில் எட்டு பக்கங்களுடன் தொடங்கப்பட்ட நாளிதழ் இன்று தமிழர்களின் அடையாளமாகத் திகழ்கிறது.
- "தினமணி' நாளிதழ் மீது அதன் வாசகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான், இந்த நாளிதழ் பல்வேறு சோதனைகளைக் கடந்து சாதனை படைத்ததற்குக் காரணம். விடுதலைப் போராட்டக் காலத்திலும் சரி, சுதந்திர இந்தியாவிலும் சரி தன்னுடைய குறிக்கோளில் இருந்தும், கொள்கைப் பிடிப்பிலிருந்தும் சற்றும் விலகாமல் "தினமணி' நடைபோட முடிந்ததற்கு, அடித்தளம் அமைந்துத் தந்த ஆசிரியர்கள் டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன் இருவரும்தான் காரணம் என்பதையும் நினைவுகூர நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
- உலகில் எத்தனையோ நாளிதழ்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்ன காரணத்துக்காக, இன்ன குறிக்கோளுடன் இந்த நாளிதழ் தொடங்கப்படுகிறது என்று முதல் நாள் ஆசிரியர் உரையில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுத் தொடங்கப்பட்ட ஒரே நாளிதழ் "தினமணி' மட்டுமாகத்தான் இருக்கும். அதுவும், இந்திய விடுதலைப் போராட்டம், அண்ணல் காந்தியடிகளின் வரவால் உத்வேகம் பெற்றிருந்த வேளையில், தமிழ்ப் பற்றையும், தேசப் பற்றையும் மக்களுக்கு ஊட்டுவதற்காக ஒரு நாளிதழ் தொடங்கப்பட்டது என்றால் அது "தினமணி' மட்டுமாகத்தான் இருக்கும்.
- "இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் தன்னைத் தமிழர் என்று பெருமையுடன் கூறிக்கொள்ள வேண்டும். நாட்டுக்கு வெளியே செல்லும்போது தன்னை இந்தியன் என்று பெருமையுடன் அழைத்துக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்றால் தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ்நாட்டைத் தங்களது வசிப்பிடமாகக் கொண்டு வாழும் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மற்றும் தமிழ்பேசும் அனைவரும்தான்'' என்கிற அந்த முதல்நாள் ஆசிரியர் உரையில்தான் என்னவொரு தெளிவு, எத்தகைய அழுத்தம், எப்பேற்பட்ட சிந்தனை!
- நிமிர்ந்த நன்னடையுடனும், நேர்கொண்ட பார்வையுடனும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடனும் "தினமணி' நாளிதழ் கடந்த 90 ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்துக்கு வழிகாட்டி, இப்போது நூற்றாண்டை நோக்கிப் பீடுநடை போடுகிறது என்றால் அதற்குக் காரணம், அதன் ஜீவநாடியாக, உந்துசக்தியாகத் திகழும் பாரதி சிந்தனைதான்.
- "மறுமலர்ச்சியின் அடையாளம் பாரதியார்தான். சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்விகப் பித்தரான சுப்பிரமணிய பாரதியாரின் வருடாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திர தாகத்தையும், சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன் "தினமணி' வெளிவருகிறது'' என்று முதல் நாள் ஆசிரியர் உரை குறிப்பிடுகிறது.
- "தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் விடுதலைப் போராளி என்பதுடன், சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் மூன்று முதல்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் பெரும் பங்கு வகித்தவர். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாருக்குப் பின்னால் குமாரசாமி ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதில் அவரது பங்கு முக்கியமானது.
- 1952 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அன்றைய மெட்ராஸ் ராஜதானியில் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரûஸ ஆட்சியில் அமர்த்த, திருக்குற்றாலத்தில் தனது நண்பர் "ரசிகமணி' டி.கே.சிதம்பரநாத முதலியார் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ராஜாஜியை , முதல்வராகப் பொறுப்பேற்க அழைத்துவர, காமராஜருடன் சென்றவர் டி.எஸ். சொக்கலிங்கம். கவர்னர் ஜெனரலாக இருந்ததால், முதல்வராவதற்குத் தயங்கிய ராஜாஜியை சம்மதிக்க வைத்ததில் அவருக்குப் பெரும்பங்கு உண்டு.
- ராஜாஜி பதவி விலகியதைத் தொடர்ந்து 1954-இல் காமராஜர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் பங்களிப்பு இருந்தது.
- தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட, தனது ஆசிரியர் பதவியைத் துறந்தார் டி.எஸ்.சொக்கலிங்கம். தனக்குப் பிறகு "தினமணி'யை வழிநடத்த ஏ.என்.சிவராமனைத் தேர்ந்தெடுத்து, அவர் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதை இந்தத் தருணத்தில் நினைவுகூரத் தோன்றுகிறது.
- "இன்று முதல் ஸ்ரீ ஏ.என்.சிவராமன் "தினமணி'க்கு ஆசிரியராக இருப்பார். "தினமணி'யை நடத்துவதற்கு அவர் சகல குணங்களும் நிரம்பப் பெற்றவர். "தினமணி' இதுவரை எந்தக் கொள்கையில் நடத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதை அவர் அறிவார். எனவே, அவருடைய தலைமையில் நடைபெறும் "தினமணி' இதுவரை அதன் நண்பர்களிடம் (வாசகர்களிடம்) எவ்வளவு அபிமானத்தைப் பெற்று வந்ததோ அதைப் போலவே இனியும் பெற்று வரும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை'' என்று அறிமுகப்படுத்திய பெருந்தன்மையை நினைத்தால் பெருமிதம் மேலிடுகிறது.
- அச்சு ஊடகத்தின் காலம் முடிந்துவிட்டது என்று கூறுபவர்களின் அறியாமையை வெளிச்சம் போடுகிறது "தினமணி' நாளிதழுக்கு அதன் வாசகர்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு. பொறுப்பான ஊடக சேவையும், பரபரப்புக்கு இடம் தராமல், கவர்ச்சிக்கும் வணிகத்துக்கும் மயங்காமல் அச்சு ஊடகத்தால் வெற்றிகரமாக வலம்வர முடியும் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறது "தினமணி'.
- தேசிய உணர்வையும், தமிழ் மொழிப் பற்றையும் தனது மரபணுவில் தாங்கி, ஒவ்வொரு தமிழனின் உணர்வையும் உள்ளக் குமுறலையும், ஒவ்வொரு இந்தியரின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் நாளிதழாக நூற்றாண்டை நோக்கித் தனது பயணத்தைத் தொடர்கிறது "தினமணி'.
நன்றி: தினமணி (11 – 09 – 2024)