TNPSC Thervupettagam

வரலாற்று நிகழ்வின் நூறாண்டு நிறைவு

May 1 , 2023 632 days 462 0
  • அப்போதெல்லாம் பதினான்கு மணி நேரம், பதினாறு மணி நேரம், சில சமயங்களில் பதினெட்டு மணி நேரம் கூட தொழிலாளர்கள் தொடர்ந்து உழைக்க வேண்டியிருந்தது. "எகிப்து நாட்டின் அடிமைகளை விட மோசமாக ரொட்டித் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக துன்பப் பட்டு வருகிறார்கள். ஒரு நாளைக்கு பதினெட்டு முதல் இருபது மணி நேரம் வரை அவர்கள் உழைக்க வேண்டியுள்ளது' என்று "வொர்க்கிங் மென்ஸ் அட்வகேட்' என்ற அமெரிக்க இதழ் 1834-இல் எழுதியது.
  • சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகள் தொழிலாளர்களுக்கு அப்போது இருந்தாலும் "எட்டு மணி நேர வேலை' என்ற வேலை நேரக் குறைப்பு முழக்கமே பிற்காலத்தில் மே தின போராட்டம் உருவாக முழுமுதற் காரணமாக இருந்துள்ளது.
  • "எட்டு மணி நேர வேலை', "தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள்', "தொழிலாளர் வாழ்க்கைத்தர உயர்வு', "வர்க்கப் போராட்டத்தை வலுப்பெறச் செய்தல்' போன்ற உலகளாவிய தொழிலாளர்களின் அடிப்படை பிரச்னைகளை ஆராய்ந்த கார்ல் மார்க்ஸ், பிரடரிக் எங்கெல்ஸýடன்இணைந்து 1848}இல் எழுதி வெளியிட்ட  "கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ' என்ற நூலின் நிறைவுப் பகுதியில் "உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்! நீங்கள் இழக்கப்போவது அடிமைச் சங்கிலியைத் தவிர வேறொன்றுமில்லை; அடையப் போவதோ ஒரு பொன்னுலகு' என்ற முத்தாய்ப்பான வரிகளை முன் வைத்தார். இதுவே பின்னர் உலகு தழுவிய உணர்ச்சிமிகு முழக்கமாக உருவெடுத்தது.
  • அமெரிக்காவில் செயல்பட்டு வந்த வலுவான தொழிலாளர் அமைப்பு "தேசிய தொழிற்சங்கம். 1866}ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில்  "அமெரிக்கா முழுமைக்கும் எட்டு மணி நேர வேலை நாள் என்பதை சட்டமாக்க வேண்டும்.
  • அதன் மூலம் மட்டுமே முதலாளித்துவ அடிமைத்தனத்திலிருந்து இந்நாட்டின் உழைப்பை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனையடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்ட வேண்டும்' என்கிற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்தத் தீர்மானமும் இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொழிலாளர் இயக்கங்களும் அமெரிக்கப் பாட்டாளிகளின் வேலை நேரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த அடித்தளமிட்டன. "எட்டு மணி நேர அமைப்பு' என்ற பெயரில் தன்னெழுச்சியாக பல பகுதிகளில் போராட்டக் குழுக்கள் வீரியத்துடன் தோன்றின.
  • அமெரிக்காவின் சில மாகாண அரசுகள் தொழிற்சங்கம் எடுத்த தீவிர நடவடிக்கைகளால் எட்டு மணி நேர வேலைச் சட்டத்தை இயற்றின. 1868}இல் அமெரிக்க காங்கிரஸ் வேலை நேரக் குறைப்பு தொடர்பான ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.
  • 1884 அக்டோபர் 7-ஆம் தேதி சிகாகோவில் "அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனம்' என்ற தொழிலாளர் பேரமைப்பின் மாநாடு நடைபெற்றது. அதில் "1886 மே ஒன்றாம் தேதி முதல் சட்டபூர்வமான வேலை நாள் என்பது எட்டு மணி நேரமாகத்தான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் அமைப்பு ரீதியாகத் திரண்ட  தொழிற்சங்கம் மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு தீர்மானித்தது.
  • எனவே எல்லா தொழிலாளர் அமைப்புகளும் தங்கள் அதிகார வரம்பிற்குரிய இடத்தில் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் இத்தீர்மானத்திற்கு ஏற்ப தங்கள் சங்க விதிகளை அமைத்துக் கொள்ளுமாறு இம்மாநாடு பரிந்துரைக்கிறது' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • அத்தீர்மானத்தையும் அது நிறைவேற்றப்பட்ட காலத்தையும் ஊன்றி கவனித்தால்,  "மே தினம்' என்ற தொழிலாளர் தினம் உருவாவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பே அதற்கான தொடங்கி நடந்த போராட்டம் குறித்தும், அதற்கென தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகத் திரட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் தொழிற்சங்கம் மாநாடுகூட்டி தீவிரமாக விவாதித்தும், களத்தில் இறங்கிப் போராடியும் இருக்கின்றன என்பது புலனாகிறது.
  • ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படியும் தொடர்ந்து இரண்டாண்டுகளாக செய்யப்பட்ட தயாரிப்புகளின் விளைவாகவும் 1886 மே முதல் நாள் சிகாகோவில் நடைபெற்ற தொழிலாளர் பேரணியும் ஆர்ப்பாட்டமும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பேரெழுச்சியுடன் விளங்கியது.
  • தொழிலாளர் கொந்தளிப்பு அடுத்தடுத்த நாள்களிலும் தொடர்ந்தது. மே 3-ஆம் தேதி ஆறு தொழிலாளர்கள் சிகாகோ நகரத்திலுள்ள ஹே மார்க்கெட்டில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். காவல்துறையின் இக் காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டித்து மே 4ஆம் நாள் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் உணர்ச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • அக்கூட்டத்திலும் காவல்துறை கடும் தாக்குதலை நடத்தியது. கூட்டத்தில் ஒரு குண்டு எறியப்பட்டது. அதில் காவல் ஆய்வாளர் ஒருவர் மாண்டு போனார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் காவல் அதிகாரிகள் ஏழு பேரும் நான்கு தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். சிகாகோ நகரின் தெருக்களில் ரத்தம் சேறுபோல் ஓடியது.
  • சிகாகோ தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இத்தியாகிகள் தூக்கில் ஏறிய ஓராண்டிற்குப் பிறகு 1888}இல் செயின்ட் லூயிஸ் நகரத்தில் நடைபெற்ற அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளன மாநாட்டில் மே முதல் நாளையே எட்டு மணி நேரப் போராட்டத்திற்கான நாளாக பிரகடனம் செய்தனர். 1890 மே முதல் நாளில் வேலை நேரத்தைக் குறைப்பதற்காக தேசம் தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்றது.
  • மே முதல் நாள் "மே தினம்' என கடைப்பிடிக்கப்படவும், அந்நாளில் உலகத் தொழிலாளர்கள் தங்களின் உரிமைக் குரலை உரக்க எழுப்பும் வகையில் அணி திரளவும் இவையெல்லாம் அடிப்படைகளாக விளங்கின. ரஷியாவில் லெனின் தலைமையில் மே தினம் மிகவும் எழுச்சிகரமாகக் நடைபெற்றது.
  • உலகத் தொழிலாளர்களை ஒன்றிணைக்கிற மகத்தான மைய சக்தியாக "மே தினம்' விளங்கியது. தகவல் தொழில்நுட்பங்கள் அருகியிருந்த அக்காலத்திலும் நாட்டு எல்லைகளைக் கடந்து, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளைத் துறந்து மே தினப் பேரலை உலகெங்கும் இலட்சியத் தாக்கங்களை ஏற்படுத்தியது.
  • இந்தியாவின் முதல் மே தினம் 1923ஆம் ஆண்டு மே முதல் நாள் சென்னையில் தொழிற்சங்கத் தலைவர், வழக்குரைஞர், விடுதலைப் போராளி, பொதுவுடமை இயக்க பிதாமகன் என்ற பன்முக ஆளுமைமிக்க ம. சிங்காரவேலரின் தீவிர முன்முயற்சியால் நடைபெற்றது.
  • சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள கடற்கரை மைதானத்தில் நடைபெற்ற முதல் மே தினக் கூட்டத்திற்கு ம. சிங்காரவேலர் தலைமையேற்று மே தின பேருரை நிகழ்த்தினார். அதே நாளில், அதே நேரத்தில் இன்னொரு மே தின கூட்டத்திற்கு சிங்காரவேலரே ஏற்பாடு செய்திருந்தார்.
  • அக்கூட்டம் திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், பன்னூலாசிரியரும் பல்லாண்டுகள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறைக்கொட்டடியில் சித்திரவதைப்பட்ட தீரருமான  எஸ். கிருஷ்ணசாமி சர்மா, விடுதலைப் போராட்டத் தளபதிகளில் ஒருவரான சுப்பிரமணிய சிவா ஆகியோர் உணர்ச்சி ததும்ப உரை நிகழ்த்தினர்.
  • இதே நாளில்தான் சிங்காரவேலர் "இந்துஸ்தான் லேபர் கிஸôன் கட்சி' என்ற தொழிலாளர்களுக்கான அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். முதல் மே நாளைச் சிறப்பிக்கும் வகையில் தொழிலாளர்களின் குரலை எதிரொலிக்கும் விதத்தில்  "லேபர் கிஸôன் கெஸட்' என்ற ஆங்கில மாத இருமுறை இதழையும் , "தொழிலாளன்' என்ற தமிழ் வார இதழையும் மே தின மேடையில் வெளியிட்டார்.
  • "மே தினம்' இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை இப்போது எழுச்சிகரமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதற்கு தமிழ் மண்ணில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே முதன் முதலில் விதை போட்ட வித்தகர் ம. சிங்காரவேலர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதற்கு முன்னர் மே தினம் இம்மண்ணில் கொண்டாடப்படவில்லையென்றாலும், 1908}ஆம் ஆண்டிலேயே தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைத்து மனித மாண்புகளைக் காக்க வேண்டுமென்று தூத்துக்குடியில் அன்றிருந்த "கோரல் மில்' என்ற ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்த ஆங்கிலேயத் தொழிற்சாலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டு தொழிலாளர்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடப் பெரும்பாடுபட்டவர் விடுதலைப் போராட்ட வீரர், வ.உ. சிதம்பரம் பிள்ளை. அவருடன் இரட்டைக் குழல் துப்பாக்கியாய் இணைந்து நின்ற போராளி சுப்பிரமணிய சிவா.
  • இந்தியாவின் முதல் மே தினம் தமிழ் மண்ணில் கொண்டாடப்பட்டது என்பதும் அந்த வரலாற்று நிகழ்வு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நடந்துள்ளது என்பதும் தமிழர்களாகிய நாம் நினைந்து போற்றத் தக்கவையாகும்.

நன்றி: தினமணி (01 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories