TNPSC Thervupettagam

வரலாற்று வெற்றி!

July 1 , 2024 7 hrs 0 min 39 0
  • இந்த தருணத்துக்காகத்தான் கடந்த 13 ஆண்டுகளாக இந்தியா காத்திருந்தது. 1983-க்குப் பிறகு 24 ஆண்டுகளும், 2007-க்குப் பிறகு 4 ஆண்டுகளும், இப்போது 13 ஆண்டுகளும் உலகக் கோப்பையை கைப்பற்ற காத்திருக்க வேண்டி வந்தது என்றாலும்கூட, ஒவ்வொரு வெற்றியும் இந்தியாவுக்கு வித்தியாசமான ஏற்றம் தரும் வெற்றியாகவே அமைந்தன.
  • கடந்த ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை இரண்டிலும் இறுதி ஆட்டம் வரை சிறப்பாக ஆடியும் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதனால், பார்படாஸ் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா டி20 உலகக் கோப்பையை வென்றபோது விளையாடிய வீரர்களும், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர்.
  • இப்போது ஐந்தாவது முறையாக ஐசிசி கோப்பையை இந்தியா வென்றிருக்கிறது. 1983-இல் கபில் தேவ் தலைமையிலும், 2011-இல் தோனி தலைமையிலும் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளிலும் 2007-இல் தோனி தலைமையிலும், இப்போது ரோஹித் தலைமையில் டி20 உலகக் கோப்பை போட்டியிலும், 2013-இல் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது.
  • இப்போது நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் பங்கேற்றன. நமீபியா, நேபாளம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, உகாண்டா, ஓமன், பப்புவா நியூ கினியா போன்றவை புதிதாக இடம்பெற்றன. அதனால் "குரூப் கட்ட ஆட்டங்கள்' பலவும் ஒருதரப்பாக அமைந்தன. போட்டியை நடத்திய அமெரிக்க அணி, பலமான பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்ததுடன் சூப்பர் 8 பிரிவுக்கும் முன்னேறி ஆச்சரியம் அளித்தது. ஏனைய ஆட்டங்கள் ஆரம்பக் கட்டத்தில் விறுவிறுப்பாக அமையவில்லை என்பது சற்று சோர்வை ஏற்படுத்தியது
  • அதன் பின்னர் நடைபெற்ற சூப்பர் 8 பிரிவு ஆட்டங்கள், டி20 ஆட்டத்துக்கே உரிய பரபரப்பை ஏற்படுத்தின. உள்நாட்டில் பொருளாதார மந்த நிலை, அரசியல் ஸ்திரமற்ற நிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணி, கடந்த ஆண்டைப் போலவே இந்தப் போட்டியிலும் பல அணிகளுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்தது.
  • பலம்வாய்ந்த நியூஸிலாந்து அணியை 75 ரன்களுக்கு சுருட்டி, 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வென்றபோது, உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை நிமிர்ந்து பார்க்க வைத்தது. அதன் பின்னர், சூப்பர் 8 பிரிவு ஆட்டங்களில் ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியாவை 21 ரன்களில் வென்று வரலாறு படைத்தது. வங்கதேசத்துடனான பரபரப்பான ஆட்டத்தில் 8 ரன்களில் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியாவை வெளியேற்றியது ஆப்கானிஸ்தான்.
  • அரை இறுதியில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றாலும், பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர்களான இப்ராஹிம் ஜட்ரன், ரஹமனுல்லா குர்பாஸ், பந்துவீச்சில் ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக், கேப்டன் ரஷீத் கான், குல்பதின் நைப் ஆகியோரின் பங்களிப்பால் ரசிகர்களின் நெஞ்சில் அந்த அணி இடம்பிடித்தது. ஆப்கன் அணியை உருவாக்கியதிலும், பயிற்சி அளித்ததிலும் இந்தியாவுக்குப் பெரும்பங்கு உண்டு.
  • 1998-இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதற்குப் பிறகு முக்கியமான ஆட்டங்களில் எல்லாம் தென்னாப்பிரிக்காவுக்கு கோப்பை கைநழுவுகிறது. திறமைவாய்ந்த அணியாக இருந்தபோதும் 'நாக் அவுட்' ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியையே தழுவி வந்திருக்கிறது.
  • 1992, 1999 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளை கிரிக்கெட் ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது. 1992 அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் 13 பந்துகளில் 22 ரன்கள், 7 பந்துகளில் 22 ரன்கள், ஒரு பந்தில் 22 ரன் என நிர்ணயிக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா தோல்வியுற்றது. 1999 அரையிறுதியில் 214 ரன்கள் என்ற இலக்கை விரட்டியபோது ஆட்டம் சமநிலை பெற, சூப்பர் 6 பிரிவில் 'நெட் ரன் ரேட்' அடிப்படையில் ஆஸ்திரேலியா முன்னேறியபோது, தென்னாப்பிரிக்கா வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் 30 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடி ஆட்டக்காரர்கள் ஹென்ரிக் க்ளாஸன், டேவிட் மில்லர் ஆகியோர் களத்தில் இருந்தபோதும், கடைசி 5 ஓவர்களில் சரியாக விளையாடாததால் தென்னாப்பிரிக்கா கோப்பையைக் கோட்டைவிட்டது.
  • மறுபுறம், இந்திய அணியின் வெற்றியில் ஒவ்வொரு ஆட்டக்காரரின் பங்களிப்பும் இருந்தது என்பதுதான் உண்மை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோஹித்தின் புயல்வேக ஆட்டம்; லீக் ஆட்டங்களில் சரியாக விளையாடாத கோலி, இறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடியது; சூர்ய குமார் யாதவின் அதிரடி; பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அசத்திய அக்ஸர் படேல்; விக்கெட் தேவைப்படும்போதெல்லாம் எடுத்துக் கொடுத்த ஜஸ்ப்ரீத் பும்ரா; அவருக்கு உறுதுணையாகப் போட்டியில் அதிக விக்கெட்டுகள் (17) வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் சிறப்பானது.
  • ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இறுதி ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசி தான் சிறந்த ஆட்டக்காரர் என்பதை நிரூபித்தார். இந்தப் போட்டியுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்த கோலி, அடுத்த தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய தருணமிது என்றார்.
  • இளம்தலைமுறை இந்திய அணியின் வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி: தினமணி (01 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories