TNPSC Thervupettagam

வரவேற்கத்தக்க நகர்வு...

October 28 , 2024 76 days 113 0

வரவேற்கத்தக்க நகர்வு...

  • இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக நிலவி வந்த மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
  • கடந்த திங்கள்கிழமை (அக். 21) மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக், டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இருநாடுகளும் கடந்த வெள்ளிக்கிழமை (அக். 25) தொடங்கியுள்ளன.
  • இந்தப் பகுதிகளில் இரு நாட்டு ராணுவ வீரர்களாலும் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. ராணுவத் தளவாடங்களையும் பின்புறப் பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியையும் இருநாடுகளும் மேற்கொண்டுள்ளன. இந்தப் பணிகள் அக். 29-ஆம் தேதி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர், மோதலைத் தவிர்ப்பதற்காக அந்தப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து கூட்டாக ரோந்துப் பணியில் ஈடுபடுவர்.
  • கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய சீன வீரர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் இந்தியத் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனத் தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.இதன் எதிரொலியாக, எல்லையில் பிரச்னைக்குரிய இடங்களில் இரு நாடுகளும் படைகள், கனரக தளவாடங்களைக் குவித்ததால் பதற்றமான சூழல் உருவானது. இருதரப்பு உறவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
  • இருநாட்டு வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படாவிட்டாலும், தரவுகள் திருட்டு, தனிநபர் தன்மறைப்பு உரிமை (பிரைவசி) போன்றவற்றுக்காக 300-க்கும் மேற்பட்ட அந்நாட்டு கைப்பேசி செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. இந்தியாவில் சில சீன நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டது.
  • இதைத் தொடர்ந்து, எல்லையில் அமைதியை மீட்டெடுக்கும் நோக்கத்தில், ராணுவம், தூதரக அதிகாரிகள் நிலையில் நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளின் விளைவாக, பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு பகுதிகள், கோக்ரா சாவடி பகுதியில் இருந்து கடந்த 2021-ஆம் ஆண்டில் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
  • கோக்ரா-வெப்ப நீருற்று பகுதியில் கடந்த 2022-இல் படைகள் விலக்கப்பட்டன.
  • எல்லையில் முழுமையான படை விலக்கல், ரோந்துப் பணி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் இப்போது கையொப்பமாகி உள்ளது. இதன் மூலம், கடந்த 2020-ஆம் ஆண்டுக்கு முந்தைய சூழல் தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது. ரஷியாவின் கசான் நகரில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ரோந்துப் பணி-படை விலக்கல் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • கல்வான் மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடியும், அதிபர் ஷி ஜின்பிங்கும் அதிகாரபூர்வ முறையில் சந்தித்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர், 2014 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் சீனாவின் வூஹான், தமிழகத்தின் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் பிரத்யேகமான சந்திப்பு உள்பட 18 முறை இருவரும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் ராணுவத் தளவாடங்களை விரைவாக கொண்டு செல்ல சாலை, ராணுவக் கூடாரங்களை அமைத்தல் போன்றவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை மிகப் பெரிய அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
  • இந்தியாவும் சீனாவும் சமபலம் பொருந்திய நாடுகளல்ல. இரு நாடுகளும் 140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும் பரப்பளவில் சீனா நம்மைவிட 3 மடங்கு பெரிய நாடாகும். நம்முடைய பொருளாதாரம் 3.8 டிரில்லியன் டாலர் என்றால் சீனப் பொருளாதாரம் 18.5 டிரில்லியன் டாலராகும். பாதுகாப்புத் துறைக்கு நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்தியா 7,500 கோடி டாலர் ஒதுக்கியுள்ள நிலையில் சீனா 23,600 கோடி டாலர் ஒதுக்கி உள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. இப்போது நம்மிடம் 18 நீர்மூழ்கி கப்பல்களே உள்ளன. ஆனால், சீனாவிடம் 60 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.
  • நமது நாட்டிலோ ராணுவ அறிக்கைகளைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் நிலை உள்ளது. சீனா முன்னெப்போதையும்விட அதிகமான இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது என்று காங்கிரஸ் கடந்த சில ஆண்டுகளாகவே குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், சீனாவிலோ தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்ற உச்சவரம்பை நீக்கி, வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்க வகை செய்யும் விதத்தில் அந்நாட்டின் சட்டத்தையே ஷி ஜின்பிங் மாற்றி உள்ளதால் எவரும் கேள்வி எழுப்ப முடியாது.
  • மேலும் சர்வதேச சட்டங்களை மதிக்காத சீனா எப்போது வேண்டுமானாலும் நம்முடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை மீறி தன்னிச்சையாக செயல்பட வாய்ப்புள்ளது. எல்லையில் அமைதியை நிலைநாட்டுவது வளர்ச்சிக்கு அவசியம். அதே நேரம், எல்லைப் பகுதியில் சில இடங்களை இழக்காமல் இருக்கும் வகையிலும் எச்சரிக்கையுடன் மத்திய அரசு செயல்பட வேண்டும்.
  • தற்போதைய ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது என்றாலும் சீன விவகாரத்தில் இந்தியா எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்பதைக் கடந்த கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதமர் நரேந்திர மோடி இதை அறியாதவரல்ல.

நன்றி: தினமணி (28 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories