TNPSC Thervupettagam

வரிக்குதிரைகளுக்குக் குரைக்கவும் தெரியும்!

February 14 , 2025 2 days 30 0

வரிக்குதிரைகளுக்குக் குரைக்கவும் தெரியும்!

  • வரிக்குதிரைகள் ஆப்ரிக்கப் புல்வெளிகளில் வாழும் விலங்குகள். கறுப்பு வெள்ளைக் கோடுகளைக் கொண்ட வரிக்குதிரைகளில் மூன்று வகைகள் உண்டு. புல்வெளிகளில் அகலமான வரிகளுடன் காணப்படுபவை சமவெளி வரிக்குதிரைகள். வறண்ட நிலங்களில் மெல்லிய வரிகளுடன் உலவுபவை கிரேவி வரிக்குதிரைகள். மலைப் பகுதிகளில் அதிகம் வெள்ளை வரிகளுடன் இருப்பவை மலை வரிக்குதிரைகள். எங்கு வாழ்ந்தாலும் கூட்டம் கூட்டமாக வாழும் இயல்புடையவை.
  • சில வரிக்குதிரைகளுக்குக் கறுப்பில் வெள்ளைக் கோடுகளும், சிலவற்றுக்கு வெள்ளையில் கறுப்புக் கோடுகளும் இருக்கும். சட்டெனப் பார்ப்பதற்கு வித்தியாசம் தெரியாது. ஆனால், மனிதர்களின் கைரேகைகளைப் போல இந்தக் கோடுகள் தனித்துவமானவை.
  • வரிக்குதிரைகள் ஒன்றோடு மற்றொன்று தொடர்புகொள்ள ஒலி மொழியை உபயோகிக்கின்றன. ஜோஹன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வுகள், வரிக்குதிரைகளின் ஒலி மொழியில் பல புதிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளன. வரிக்குதிரை மென்மையாகக் கனைக்கிறது என்றால், அது அன்பின் வெளிப்பாடு. உதாரணத்திற்கு, தாய் வரிக்குதிரை, “இங்கே வாடா செல்லம்” என்று குட்டியை அழைப்பது போன்றது.
  • அதே ஒரு சிறுத்தையைக் கண்டுவிட்டால், கூட்டத்தில் இருக்கும் ஆண் வரிக்குதிரையோ அம்மா வரிக்குதிரையோ உரத்த குரலில் கனைக்கும். அப்போது மற்ற வரிக்குதிரைகள், ஆபத்து வருகிறது என்பதை உணர்ந்துகொள்ளும். வரிக்குதிரைகள், குதிரைகள் போல் கனைத்தாலும் மிக ஆபத்தான சூழலில் நாய் குரைப்பது போன்று குரைக்கவும் செய்யும். அந்தச் சத்தம் மற்ற வரிக்குதிரைகளின் காதுகளுக்கு எச்சரிக்கையை அறிவிக்கும். கனைப்பும் இல்லாமல், குரைப்பதும் இல்லாமல் சின்ன முனகல் சத்தமாக இருந்தால், அன்பாகப் பேசிக்கொள்கின்றன என்று பொருள்.
  • வரிக்குதிரை கூட்டத்திற்கு முன் திடீரென்று புலியோ வேறு வேட்டை விலங்கோ வந்துவிட்டால், கூட்டத்தில் இருக்கும் தலைவர் வரிக்குதிரை உறுமல் செய்து எச்சரிக்கும்.
  • குட்டி வரிக்குதிரைகள் தன் தாயின் குரலை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளும். கேப்டவுன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்தபடி, பிறந்த 30 நிமிடங்களிலேயே குட்டிகள் தாயின் குரலை அடையாளம் கண்டுகொள்கின்றன.
  • குரல் மொழி போல வால் அசைவும் தகவல் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நிமிர்ந்த வால் தன்னம்பிக்கையையும், தொங்கும் வால் பயத்தையும், பக்கவாட்டில் அசையும் வால் எரிச்சலையும் காட்டுகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இது போல் 32 வெவ்வேறு வால் அசைவுகளின் அர்த்தங்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • கிரேவி வரிக்குதிரைகள் நீண்ட தூரத் தொடர்புக்கு வாசனைகளை அதிகம் பயன்படுத்துகின்றன. வறண்ட பகுதிகளில் வாழும் இவை, மற்ற வரிக்குதிரைகளை 200 மீட்டர் தொலைவிலிருந்தே வாசனை மூலம் அடையாளம் கண்டுகொள்கின்றன. கால்களால் தரையைத் தட்டி அதிர்வலைகளை உருவாக்கி, தகவல்களைப் பரிமாறுகின்றன.
  • வரிக்குதிரைகளின் வாலைப் போலவே காது அசைவுகள் அவற்றின் முக்கியமான தகவல்தொடர்பு முறைகளில் ஒன்று. அதன் காதுகள் முன்நோக்கிய அசைவில் இருந்தால் மிகக் கவனமுடனும் ஆர்வமுடனும் இருக்கிறது என்று அர்த்தம். அதே காதுகள் பின்நோக்கிய அசைவில் இருந்தால், அது எரிச்சலாகவோ அல்லது பயத்துடனோ இருக்கிறது என்று பொருள். அது மட்டுமன்றி தங்கள் தாடைகளை ஒன்றோடு மற்றொன்று உரசிக்கொண்டும் அன்பை வெளிப்படுத்தும், அன்பு அதிகமாகும்போது முகத்தை உரசிக்கொண்டு, மூக்கை முகர்ந்து, தோள்மீது ஒன்றின் மேல் மற்றொன்று தலைசாய்த்துக்கொள்ளும்.
  • வரிக்குதிரைகளால் 3 ஆண்டுகள் வரை முகங்களை நினைவில் வைத்திருக்க முடியும். கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுகளில், வரிக்குதிரைகள் பல கிலோமீட்டர் தொலைவு வரை பயணித்து, தங்கள் குழுவுடன் சேர்ந்துகொள்ளும் என்று கண்டறிந்துள்ளனர்.
  • காலநிலை மாற்றம், வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு ஆகியவற்றால் வரிக்குதிரைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இவற்றைப் பாதுகாக்கத் தற்போது நடக்கும் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ், பெர்லின் போன்ற பல்கலைக்கழகங்களின் ஆய்வுகள் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (13 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories