வரி வருவாய் பகிர்வு: மாநிலங்களுக்கு 50 சதவிகிதம் தேவை
- மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்படும் பங்கின் அளவை, தற்போதுள்ள 41% இருந்து 40% ஆகக் குறைக்க 16ஆவது நிதி ஆணையத்திடம் வலியுறுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல் ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களும் வலியுறுத்தும் 50% வரி பகிர்வு வழங்குவதை மத்திய அரசும் நிதி ஆணையமும் உறுதிப்படுத்த வேண்டும்.
- இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசுகளும் வரிகள் விதித்து வருவாயைப் பெருக்குகின்றன. இதில், மத்திய அரசு வசூலிக்கும் வரி வருவாயை எப்படி நிதிப் பகிர்வு செய்ய வேண்டும் என்பதற்கு அரசமைப்புச் சட்டத்தின் 280ஆவது கூறின்படி ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது.
- நிதி ஆணையம் தரும் பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசும் மாநில அரசுகளும் நிதியைப் பகிர்ந்துகொள்கின்றன. தற்போது 16ஆவது (2026 - 31) நிதி ஆணையக் குழு, அதன் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் நிதிப் பகிர்வு தொடர்பாக மாநிலங்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று ஆராய்ந்துவருகிறது.
- 14ஆவது நிதி ஆணையக் குழு 32%லிருந்து 42% ஆக நிதிப் பகிர்வை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்கியது. 15ஆவது நிதி ஆணையப் பகிர்வு காலத்தில் 41% வழங்க நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுடன் 16ஆவது நிதி ஆணையக் குழுவினர் சென்னையில் கடந்த நவம்பரில் ஆலோசனை நடத்தியபோது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 50% நிதியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார். குஜராத், கர்நாடகம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளன.
- இந்தச் சூழலில், மார்ச் மாத இறுதியில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிப் பகிர்வை 41% இருந்து 40% ஆகக் குறைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, 16ஆவது நிதி ஆணையக் குழுவிடம் மத்திய அரசு தெரிவிக்கும் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 1% நிதிக் குறைப்பு மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.35 ஆயிரம் கோடி வரை குறையும் அபாயம் உள்ளது.
- ஏற்கெனவே 15ஆவது நிதி ஆணையக் காலத்தில் (2021-26) 41% நிதி பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்றாலும் 33.16% மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாகத் தமிழக முதலமைச்சர் நிதி ஆணையக் குழுவிடம் சுட்டிக்காட்டியிருந்தார். நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட நிதி குறைத்து வழங்கப்படுவதாக மாநிலங்கள் கூறும் நிலையில், 16ஆவது நிதி ஆணையக் காலத்தில் நிதிப் பகிர்வை 40%ஆகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகும் தகவல்கள் கவலை அளிக்கின்றன.
- இது ஒரு புறம் இருக்க, மத்திய அரசின் வரி வருவாயில் அதிகம் பங்களிக்கும் மாநிலங்களுக்குக் குறைவாக நிதி ஒதுக்கப்படுகிறது என்கிற விமர்சனங்களும் நீடிக்கின்றன. இந்தச் சூழலில் வரி வருவாய் பகிர்வை மேலும் குறைத்தால் மாநிலங்கள் நிதி நெருக்கடியைச் சந்திக்கும் நிலை உருவாகலாம். மத்திய அரசுக்கான வரி வருவாய் மாநிலங்களிலிருந்துதான் கிடைக்கிறது. மாநிலங்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி.
- அந்த வகையில் 16ஆவது நிதி ஆணையக் காலத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கோருவதைப் போல நிதிப் பகிர்வை 50% ஆக அதிகரிக்க மத்திய அரசும் நிதி ஆணையமும் முன்வர வேண்டும். மேலும் இதுபோன்று வரும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலமே நிதிப் பகிர்வில் மத்திய அரசு கொண்டிருக்கும் நேர்மறையான எண்ணமும் வெளிப்படும்.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 03 – 2025)