வரி விதிப்பும் வர்த்தகப் போரும்: இந்தியா என்ன செய்ய வேண்டும்?
- பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியப் பொருள்களுக்கு அமெரிக்க அரசு அதிக வரி விதித்திருக்கும் நிலையில், சர்வதேச அளவிலான வர்த்தகப் போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் நலனை மட்டும் மையமாகக் கொண்டு டிரம்ப் எடுத்துவரும் இந்நடவடிக்கைகள் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்னும் அச்சமும் எழுந்திருக்கிறது. இதில் இந்தியாவும் பாதிக்கப்படக்கூடும் என்பதால், மத்திய அரசின் நகர்வுகள் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன.
- டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல், வர்த்தகம், குடியுரிமை உள்ளிட்ட விவகாரங்களில் அதிரடி நடவடிக்கைகள் எடுத்துவருகிறார். அந்த வகையில் இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்கப் பொருள்களுக்கு அதிக வரி விதிப்பதாக விமர்சித்துவந்த டிரம்ப், பரஸ்பர வரி விதிப்பு என்னும் பெயரில் ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக வெவ்வேறு விகிதத்தில் வரி விதிப்பை அறிவிப்பது, சம்பந்தப்பட்ட நாட்டின் எதிர்வினையைப் பொறுத்து அதை மாற்றுவது எனக் குழப்பம் விளைவித்துவருகிறார்.
- ஏப்ரல் 2ஆம் தேதி முதல், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வரும் என்று டிரம்ப் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், கனடாவின் ஆன்டியரியோ மாகாண அரசு, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்சாதனப் பொருள்களுக்கு 25% வரி விதிக்க முடிவெடுத்தது நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.
- பதிலடியாக கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் பொருள்களுக்கான வரி 50% ஆக உயர்த்தப்படும் என அதிரடியாக அறிவித்தார் டிரம்ப். எனினும், தனது முடிவை ஆன்டியரியோ அரசு திரும்பப் பெற்ற நிலையில், 25% வரி என்று டிரம்ப் இறங்கிவந்தார். எனினும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.
- மேலும், ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் பதிலடியாக அறிவித்திருக்கும் வரி விதிப்புகள் இந்த வர்த்தகப் போரின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது மொத்தமாக 26 பில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்க அரசு வரி விதித்திருக்கும் நிலையில், பதிலடியாக 28 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கப் பொருள்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் வரி விதித்திருக்கிறது.
- கணினிகள், விளையாட்டுக் கருவிகள், வார்ப்பு இரும்புப் பொருள்களுக்கும் 25% வரி விதிப்பதாக கனடா அறிவித்திருக்கிறது. பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பதிலடியாக வரிவிதிப்பு அறிவிப்புகளை வெளியிடவில்லை என்றாலும், அமெரிக்காவின் நடவடிக்கைகள் நியாயமானவை அல்ல என்பதைப் பதிவுசெய்திருக்கின்றன.
- தனது நடவடிக்கைகள் அமெரிக்காவின் உலோக உற்பத்தித் துறையை வளர்த்தெடுக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் உதவும் என்று வாதிடும் டிரம்ப், அமெரிக்காவில் அந்நிய முதலீடு அதிகரிக்கும் என்றும் கூறிவருகிறார். ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், பணவீக்கம் அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் இந்தியா முன்னெடுக்கும் நடவடிக்கைகள் கூடுதல் கவனம் பெறுகின்றன.
- பரஸ்பர வரி விதிப்பால் அமெரிக்காவின் எஃகு உற்பத்தியாளர்களுக்குப் பெரிய அளவில் பலன் கிடைக்கும் என்றும், இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் எஃகு உற்பத்தியாளர்கள் பெரும் சவால்களைச் சந்திப்பார்கள் என்றும் பேச்சுகள் எழுந்திருக்கின்றன. பல்வேறு பொருள்களுக்கும் கூடுதல் வரி அமலுக்கு வருவதால் இந்தியத் தொழில் துறையில் கலக்கம் ஏற்பட்டிருக்கிறது.
- சர்வதேச அளவிலான இந்தப் பிரச்சினையை இந்தியா மிகவும் கவனமாக அணுகுவது அவசியம். அதிபர் டிரம்ப்பிடம் தனிப்பட்ட ரீதியில் நட்புறவு கொண்டிருக்கும் பிரதமர் மோடி, தனது ராஜதந்திர நகர்வுகள் மூலம் இந்தியாவுக்குப் பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!
நன்றி: இந்து தமிழ் திசை (14 – 03 – 2025)