TNPSC Thervupettagam

வருமான வரிச் சலுகை: மாத சம்பளதாரர்களுக்கு பெரும் விடுதலை

February 3 , 2025 2 hrs 0 min 10 0

வருமான வரிச் சலுகை: மாத சம்பளதாரர்களுக்கு பெரும் விடுதலை

  • மத்திய பட்ஜெட்டில் மாத சம்பளதாரர்களுக்கு ரூ.12 லட்சம் வரை வருமான வரிச் சலுகை அளித்து, நடுத்தர மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது மத்திய அரசு. இந்தியாவில் அதிக வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வருமான வரி செலுத்தி வந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியில்தான் நடுத்தர மற்றும் சாதாரண சம்பளம் வாங்குவோரும் வரி வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறோம் என்ற பெயரில் நடுத்தர சம்பளதாரர்கள் வரி வளையத்துக்குள் கட்டாயமாக நுழைக்கப்பட்டனர். மாத சம்பளத்தை வைத்து குடும்பச் சுமையையே சமாளிக்க முடியாமல் திணறி வந்த இப்பிரிவினர், வருமான வரி என்ற இன்னொரு சுமையையும் சேர்த்து சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
  • தணிக்கையாளர் ஒருவரை அமர்த்தி கணக்கு காட்டும் அளவுக்கு வருமானம் இல்லாத நிலையிலும், அதற்குரிய கட்டணங்களைச் செலுத்தி, ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாக இப்பிரிவினர் வருமான வரி கணக்கு காட்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இன்னலுக்கு ஆளாகி வந்தனர். ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும், நடுத்தர சம்பளதாரர்களை வருமான வரி வளையத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வந்தது. ஒவ்வொரு அரசும் அதைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்தே வந்தன.
  • நீண்டகால கோரிக்கைக்கு ஒருவழியாக பலன் கிடைக்கும் வகையில் பாஜக அரசின் கையால் அந்த நல்ல காரியம் நடந்துள்ளது. இதன்மூலம், ஒரு கோடிக்கும் அதிகமான நடுத்தர சம்பளதாரர்கள் வரி வளையத்தில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர்.
  • நிதி ஆயோக் அறிக்கையின்படி, 2016-ம் ஆண்டில் 24.8 சதவீதமாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை, 2021-ம் ஆண்டில் 14.9 சதவீதமாக குறைந்துள்ளது. அவர்கள் ஏழைகள் என்ற பட்டியலில் இருந்து முன்னேறி நடுத்தர பிரிவாக மாறியுள்ளனர் என்பதே அதன் அர்த்தம். National Council for Applied Economic Research (NCAER) அமைப்பின் ஆய்வின்படி, 2 முதல் 10 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் என்று வகைப்படுத்தியுள்ளனர். தற்போது 44 கோடியாக உள்ள நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை, 2031-ம் ஆண்டில் 54 கோடியாகவும், 2047-ல் 85 கோடியாகவும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
  • பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து அவரவர் அரசியல் சார்புக்கேற்ப பாராட்டுகளையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வரும் நிலையில், நடுத்தர மக்களை பொறுத்தமட்டில் வரிச்சுமையில் இருந்து விடுதலை வழங்கிய பட்ஜெட் என்றே கருதுகின்றனர். இந்த அறிவிப்பு மூலம் மத்திய அரசுக்கு நேரடி வரி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயும், மறைமுக வரி வருவாய் ரூ.2,600 கோடியும் இழப்பு ஏற்படுமென அறிவித்திருந்தாலும், நடுத்தர மக்கள் செலுத்தும் ஜிஎஸ்டி உள்ளிட்ட இதர வரி மூலம் அந்தப்பணம் மீண்டும் அரசு கஜானாவுக்கே சென்று சேரும். எனவே, வரி வருவாய் குறையும் என்ற கவலை மத்திய அரசுக்கு தேவையில்லை. மத்திய அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை அரசியல்ரீதியாகவும் அக்கட்சிக்கு பலனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories