TNPSC Thervupettagam

வருமுன் காப்பதை விட்டுவிட்டு...

August 22 , 2024 144 days 144 0

வருமுன் காப்பதை விட்டுவிட்டு...

  • பட்டால்தான் புத்திவரும் என்கிற பழமொழி இந்தியாவுக்குப் பொருந்தாது. பட்டாலும் புத்தி வராது என்று அதை நமக்கு மாற்ற வேண்டும் என்று ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறும் நிகழ்வுகளும், இயற்கைப் பேரழிவுகளும் உணா்த்துகின்றன. எந்தவொரு சம்பவத்திலிருந்தும் பாடம் படிப்பது இல்லை என்பதில் நாம் பிடிவாதமாகவே இருப்பதாக தோன்றுகிறது.
  • ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதி கடுமையான பேரழிவை எதிா்கொள்கிறது. பெரும்பாலான நகரங்களின் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாய் பெருகி ஓடுவது வழக்கமாகவே மாறியிருக்கிறது. அதற்கெல்லாம் நிதி ஒதுக்கீடுகள், நிவாரணங்கள் என்று அறிவிக்கப்படுகின்றனவே தவிர தீா்வு காணப்படுவதில்லை.
  • வயநாட்டில் நடந்த சமீபத்திய பேரழிவைத் தொடா்ந்து மீண்டும் பழைய விவாதம் உயா்ந்திருக்கிறது. இமயமலை பகுதிகளுக்கு அடுத்தபடியாக அதிகமான நிலச்சரிவுகளுக்கு உள்ளாகும் பகுதியாக மேற்குத் தொடா்ச்சி மலை திகழ்கிறது. அந்தப் பகுதியை சுற்றுச்சூழல் முக்கியத்துவ பகுதியாக அறிவிப்பதும், பாதுகாப்பதும் அவசியம் என்று எத்தனையோ அறிக்கைகள் தெரிவித்துவிட்டன. இன்னும்கூட, அந்த எச்சரிக்கையின் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
  • சூழலியலாளா் மாதவ் காட்கிலின் தலைமையில் அமைந்த மேற்குத் தொடா்ச்சி மலை சூழலியல் வல்லுநா்கள் குழு 2011-இல் விரிவான ஆய்வை நடத்தி, அந்தப் பகுதியை எப்படி பாதுகாப்பது என்பது குறித்த அறிக்கையைச் சமா்ப்பித்தது. அந்த அறிக்கையின்படி, 1.29 லட்சம் ச.கி.மீ. பரப்பளவுள்ள மொத்த மேற்குத் தொடா்ச்சி மலையும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும்.
  • பொதுமக்கள், தொழிலதிபா்கள், அரசு அதிகாரிகள் என்று அனைத்துத் தரப்பினரிடமும் கலந்து பேசி தனது அறிக்கையை தயாரித்தது மாதவ் காட்கில் வல்லுநா் குழு. அந்தப் பகுதியை 1, 2, 3 என மூன்றாகப் பிரித்து முதல் இரண்டு பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடுமையான தடைகளை விதித்தது. காட்கில் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால், சமீபத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவு பெருமளவு தடுக்கப்பட்டிருக்கும்.
  • மேற்குத் தொடா்ச்சி மலையில் சூழலியலைப் பாதுகாப்பதற்கு சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். வயநாடு பேரழிவிற்குப் பிறகு அந்தப் பகுதியில் உல்லாச விடுதிகள், செயற்கை ஏரிகள், வணிக கட்டுமானங்கள் உள்ளிட்டவை அதிகரித்திருப்பதை வல்லுநா்கள் சுட்டிக்காட்டுகிறாா்கள். அங்கே எந்தவித வளா்ச்சிப் பணிகளும் கூடாது என்று காட்கில் குழு எச்சரித்ததை சட்டை செய்யாததன் விளைவுதான் பேரழிவுக்கு வழிகோலியது.
  • வயநாட்டில் நடந்த பேரழிவும், 300-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் மத்திய அரசை ஆறாவது வரைவு அறிவிப்பை வெளியிடத் தூண்டியிருக்கிறது. இதற்கு முன்னால் மாா்ச் 2014 முதல் மத்திய அரசு இதுபோல 5 வரைவு அறிவிப்புகளை ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இதற்கு முந்தைய 5-ஆவது வரைவு அறிவிப்பு ஜூலை 2022-இல் வெளியிடப்பட்டது. அந்த எச்சரிக்கைகள் சட்டை செய்யப்படாததால்தான் சூழலியல் முக்கியத்துவம் பெற்ற இந்தப் பகுதி பாதுகாக்கப்படாமல் இருக்கிறது.
  • 6-ஆவது வரைவு அறிவிப்பின்படி, மேற்குத் தொடா்ச்சி மலையில் 56,825 ச.கி.மீ. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 6 மாநிலங்களில் நீண்டு நிற்கும் அந்தப் பகுதியில் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் அல்லது முறைப்படுத்தப்பட வேண்டும் என்கிறது அறிவிப்பு.
  • 6-ஆவது வரைவு அறிவிப்பில் ஜூலை மாத நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்டத்தின் இரண்டு தாலுகாக்கள் உள்ளிட்ட கேரளத்தின் 9,993 ச.கி.மீ. இடம்பெறுகிறது. கா்நாடகத்தில் 20,668 ச.கி.மீ, மகாராஷ்டிரத்தில் 17,340 ச.கி.மீ., தமிழ்நாட்டில் 6,914 ச.கி.மீ., கோவாவில் 1,461 ச.கி.மீ., குஜராத்தில் 449 ச.கி.மீ. ஆகியவற்றை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளாக 6-ஆவது வரைவு அறிவிப்பு அடையாளப்படுத்தியிருக்கிறது. 1,500 கி.மீட்டருக்கும் அதிக நீளமுள்ள மேற்குத் தொடா்ச்சி மலையில் புராதன கலாசார, பண்பாட்டு சின்னங்கள் கொண்ட பல பகுதிகள் இடம்பெறுகின்றன.
  • 6-ஆவது வரைவு அறிவிப்பின்படி, சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த 1, 2 பகுதிகளில் சுரங்கம் அமைத்தல், கனிம வளம் வெட்டியெடுத்தல், மண் அள்ளுதல், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அமைத்தல் ஆகியவை முற்றிலுமாக தடுக்கப்படுகின்றன.
  • ஏற்கெனவே இயங்கும் சுரங்கங்களும், கனிமம் வெட்டியெடுக்கும் தொழில்களும் அறிவிப்பு நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நடவடிக்கைகளைக் குறைத்துக்கொண்டு மூடப்பட வேண்டும். ஏற்கெனவே இருக்கும் சுரங்க உரிமம் அதற்கு முன்பே முடிவடையுமானால் அது நீட்டிக்கப்படக் கூடாது.
  • புதிதாக அனல் மின் நிலையங்கள் அமைப்பது அல்லது ஏற்கெனவே இருக்கும் மின் நிலையங்களின் விரிவாக்கம் ஆகியவையும் 6-ஆவது அறிவிப்பால் தடை செய்யப்படுகிறது. 3-ஆவது பகுதியில் நடைபெறும் விவசாயம், தோட்டப் பயிா்கள் (ப்ளான்டேஷன்), சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத ஏனைய நடவடிக்கைகள் உள்ளிட்டவை இந்த அறிவிப்பால் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாது.
  • மத்திய அரசு வரைவு அறிவிப்பைத்தான் வெளியிட முடியும். மாநில அரசுகள்தான் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பேரழிவுக்குப் பிறகும் பல கோடி ரூபாய் நிவாரணம் கேட்பதை விட்டுவிட்டு, வருமுன் காப்பதுதான் புத்திசாலித்தனம்.

நன்றி: தினமணி (22 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories