TNPSC Thervupettagam

வறட்சிக்கு முடிவுகட்டும் அத்திக்கடவு - அவிநாசித் திட்டம்

April 18 , 2023 638 days 437 0
  • ஒன்றுபட்ட கோவை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான ‘அத்திக்கடவு-அவிநாசித் திட்டம்’ மிக விரைவில் நனவாகி நடைமுறைக்கு வரவிருக்கிறது. இத்திட்டத்துக்கு 1960இல் அப்போதைய முதலமைச்சர் பக்தவத்சலம் அடிக்கல் நாட்டியபோது எழுந்த எதிர்பார்ப்பு அது. அடிக்கல் நாட்டப்பட்டதோடு சரி. அதன் பிறகு இத்திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.
  • 1998இல் ரூ.134 கோடி ஒதுக்கீடு செய்திருந்தால் திட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம்; ஆனால், அது நடக்கவில்லை. பிறகு, 2000இல் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரூ.380 கோடியில் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று 2000-2001 நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
  • எழுத்தில் இருந்ததே தவிர, அது செயல்வடிவம் பெறவில்லை. 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயச் சங்கங்களாலும், மக்களாலும், அரசியல் கட்சிகளாலும் வலியுறுத்தப்பட்டுவந்த நீரேற்றுத் திட்டம், தற்போது சுமார் ரூ.2,000 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டு, செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது.

திட்டத்தின் இலக்குகள்:

  • ஏப்ரல் 12 அன்று ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயச் சங்கத் தலைவர்களுடன் திட்டப் பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக, பகுதி முழுவதும் பயணம் செய்ததுடன், நீரேற்று நிலையங்களுக்கும் நேரில் சென்று பார்வையிட்டோம். அதிகாரிகள் உடனிருந்து திட்டம் குறித்து விரிவாக விளக்கினார்கள்.
  • பவானி ஆற்றிலிருந்து கிடைக்கும் உபரி நீரை ராட்சதக் குழாய்கள் மூலம் நீரேற்றி, ஆண்டில் 70 நாள்களுக்கு நீரை வெளியேற்றுவதன் மூலம் ஏரி, குளம், குட்டைகளில் ஆண்டுக்கு 1.5 டிஎம்சி நீர் நிரம்பச்செய்வது.
  • கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் நிரந்தரமாக வறட்சி குடிகொண்டிருக்கும் ஒன்றியங்களான பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபி, பவானிசாகர், ஊத்துக்குளி, அவிநாசி, திருப்பூர் வடக்கு, அன்னூர், சூலூர், பெரிய நாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம், காரமடை ஆகிய 13 ஒன்றியங்களில் 1,045 ஏரி, குளங்களில் நீரை நிரப்பி, நிலத்தடி நீர்வளத்தைப் பெருக்குவது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய இலக்குகள். இதன் மூலம் 24,968 ஏக்கர் பாசனம் பெறுவதுடன், குடிநீர் மற்றும் ஆழ்குழாய்ப் பாசனத்துக்கான நீர்வளமும் கிடைக்கும்.

கிடைக்கப்போகும் பலன்கள்:

  • இதனால் விவசாயம் பெருகுவதுடன், கால்நடை வளர்ப்பு செழிப்படையும். பல லட்சக் கணக்கான மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். மேற்கண்ட பகுதிகளில் தற்போது 700 அடி முதல் 1,000 அடி ஆழத்தில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு மின் மோட்டார்கள், கம்ப்ரசர் ஆகியவற்றுக்கு மிகக் கூடுதலான மின்சாரம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
  • இனி அந்தப் பிரச்சினை இருக்காது. 1,000 அடி ஆழத்தில் ஆழ்குழாய் அமைக்க, கடன் வலையில் சிக்கித் தவிக்கும் நிலை இனி விவசாயிகளுக்கு ஏற்படாது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் மின்சாரப் பயன்பாடு குறையும். பால் உற்பத்தி அதிகரிக்கும். ஒரு காலத்தில் பருத்தி மட்டுமே விளைந்த இந்தப் பகுதியில் தற்போது தென்னை, வாழை, புகையிலை, வேர்க்கடலை, மக்காச்சோளம், கரும்பு, காய்கறிச் சாகுபடி நடைபெற்றுவருகிறது.
  • பல்லாண்டுகள் கடந்து இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பதாலும், கூடுதல் பகுதிக்குத் திட்டம் விரிவாக்கப்பட்டிருப்பதாலும் ரூ.2,000 கோடி செலவாகிறது, என்றாலும், திட்டத்தினால் ஏற்படும் நன்மைகளை ஒப்பிட்டால் இது ஏற்கக்கூடியதுதான்.
  • ஏற்கெனவே பாசன உரிமை பெற்றுள்ள பகுதிகள் எதுவும் இத்திட்டத்தால் பாதிக்கப்படாது என்பது மற்றொரு சிறப்பு. பெரிய திட்டம் எதுவாக இருந்தாலும் உலக வங்கியிலோ, ஆசிய வளர்ச்சி வங்கியிலோ கடன் வாங்குவதுதான் வழக்கம். இப்படியான சூழலில், மாநில அரசின் சொந்த நிதியிலிருந்தே திட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பதும் மிகவும் முக்கியமானது. எதிர்காலத்தில் இதுபோன்ற பெரிய திட்டங்களை மாநில அரசு துணிச்சலுடன் முன்னெடுக்க இது ஒரு திறப்பாக அமையும்.

நீர் வீணாகாது:

  • மிகவும் வளர்ந்த நவீனத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பது மற்றொரு சிறப்பு. 6 இடங்களில் ஒரே மாதிரியான வடிவமைப்பில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காளிங்கராயன் அணைக்கு அருகிலுள்ள முதல் நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்டால் அனைத்து நீரேற்று நிலையங்களிலிருந்தும் சில நிமிடங்களில் தண்ணீர் வெளியேறும்.
  • கணினி மூலம் இயக்கப்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குளம், குட்டைக்கும் தண்ணீர் நிரப்பும் குழாய்களுடன் சென்சார் கருவி பொருத்தப்பட்டிருப்பதால், இருந்த இடத்திலிருந்தே அதிகாரிகள் கண்காணிக்க முடியும். நிரம்பியவுடன் தானாகத் தண்ணீர் நின்றுவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும்.

மக்களின் எதிர்பார்ப்பு:

  • இந்த மாபெரும் திட்டம், செம்மையாகவும், மக்களுக்கு முழுமையாகப் பயன்படும் வகையிலும் அமைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஏரி,குளம், குட்டைகள் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தப்படாமலும் தூர்வாரப்படாமலும் புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.
  • கரைகளும் சேதமுற்றுப் பலவீனமாக இருக்கின்றன. எனவே செடி, கொடி முள்புதர்களைச் சுத்தப்படுத்துவதுடன், தூர்வாரி கரைகளைப் பலப்படுத்துவது உடனடியாக மேற்கொள்ள வேண்டிய அவசரப் பணியாகும். இந்தக் குளங்களில் மீன்வளர்ப்புக்குத் திட்டமிடுவதன் மூலம் அரசுக்கு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்ட வழி ஏற்படும்.
  • நீர்நிலைகள் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதில் தொடர் கவனம் செலுத்த வேண்டும். தொழிற்சாலைக் கழிவுகள் இதில் கலக்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். இவற்றையெல்லாம் முழுமையாகச் செய்தால் பிரம்மாண்டமான இத்திட்டம் மண்ணைப் பொன்னாக்கும். மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கச்செய்யும். பல்லாண்டு காலத்துக்கு வரலாற்றில் நிலைத்து நிற்கும் அற்புதமான ஒரு திட்டமாக அத்திக்கடவு-அவிநாசித் திட்டம் விளங்கும்.
  • அதே போல், காவிரியிலிருந்து கிடைக்கும் உபரிநீரைக் கொண்டு செயல்படுத்தப்பட வேண்டிய காவிரி-வைகை-குண்டாறு-வைப்பாறு இணைப்புத் திட்டம் குறித்தும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது நிறைவேறினால் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள குளங்கள், கண்மாய்களில் தண்ணீர் நிரப்பி வறட்சி போக்கப்படும்.
  • ஆனால், இத்திட்டப் பணிகள் மந்தமான வேகத்தில் நடைபெற்றுவருகின்றன. கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, இந்தப் பணிகளை வேகப்படுத்தி நிறைவேற்றுவதற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்ப்பார்ப்பு. ‘அத்திக்கடவு-அவிநாசித் திட்ட’த்தைப் போலவே இத்திட்டத்தையும் நிறைவேற்றித் தமிழ்நாட்டில் வறட்சியே இல்லாத நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

நன்றி: தி இந்து (18 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories