TNPSC Thervupettagam

வறுமை ஒழிப்பு சாத்தியமா?

May 21 , 2019 2063 days 1435 0
  • இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது வறுமை. வறுமை என்னும் கொடும் பிணியைத் தவிர்த்தாலொழிய வல்லரசு எனும் இலக்கை நாம் அடைய முடியாது. வறுமையை வேரறுக்க,  "வறுமையை ஒழிப்போம்' ("கரிபீ ஹடாவோ') என்பதை 50 ஆண்டுகளுக்கு முன்பே முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார்.
  • இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் வறுமையை முழுமையாக ஒழிக்க முடியாவிட்டாலும், 1960-களில் அதற்கான விதை ஆணித்தரமாக தூவப்பட்டதை மறுக்க இயலாது. இதேபோன்று, 1980-களில் மீண்டும் அவரது தலைமையின் கீழ், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டன.
வறுமை ஒழிப்பு
  • இந்திரா காந்தி ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதால், வறுமையை ஒழிப்பதில் வருவாய் உருவாக்கத்தின் மையக் கருத்தை அவர் விளங்கிக் கொண்டார். இந்தியாவில் வறுமையை மட்டுப்படுத்துவதில் வருவாய் உருவாக்கத்தின் பங்கை 1980-களில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியிலிருந்தும், 1960-களின் இறுதியில் பசுமைப் புரட்சியின் தாக்கத்தால் வேளாண் உற்பத்திவேகமெடுத்ததில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.
  • இவ்வாறு 50 ஆண்டுகளுக்கு முன்பேவறுமையை ஒழிப்பதில் நாம் பிரத்யேக கவனம் செலுத்தினாலும், இன்னமும் ஏழ்மைக்கு முடிவு கட்ட முடியாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. காரணம், பிரச்னைகளை நோக்கிய பொதுக் கொள்கையின் அணுகுமுறை வலி நிவாரணியைப் போல்தான் இருக்கிறதே தவிர, நீண்ட நெடிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை. மேலும், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் ஏழ்மையின் அடிமட்டத்தில் வலுவான விளைவை ஏற்படுத்தத் தவறிவிட்டன.
  • இதுபோன்ற திறன் இழப்பால், தனிநபர் செய்யும் பணி அல்லது சுயதொழில் மூலம் போதுமான வருவாயை ஈட்ட முடியவில்லை. வருவாய் அடிப்படையிலான வறுமையைக் கையறு நிலையின் வெளிப்பாடு என்றே கூறலாம். அத்துடன், வருவாய்ப் பற்றாக்குறையின் மீது பிரத்யேக கவனம் செலுத்தும் நிலையில் பிரச்னையின் அறிகுறிக்கு வேண்டுமானால் தீர்வு காணலாமே தவிர, அதன் மையப் புள்ளிக்கு அல்ல.
  • 17-ஆவது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதிப்படுத்தும் நிதி ஆதாரத் திட்டங்களை ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸூம் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்தன. இந்தத் திட்டங்களைக் கூர்ந்து நோக்கும்போது, மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் நிதி ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்த முயல்வது முற்றிலும் சமனற்றதாகத் தோன்றுகிறது.
  • ஏனெனில், இதுபோன்ற நிதிசார் திட்டங்களை வகுக்கும்போது ஏழை விவசாயிகளை மட்டுமன்றி, விவசாயம் சார்ந்த கூலித் தொழில்களில் ஈடுபட்டுள்ள நலிந்த பிரிவினரையும், நடைபாதை வியாபாரிகளையும் அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
மானியங்கள்
  • இன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட சில விவசாயிகளை மட்டுமே வேளாண் மானியங்கள் சென்றடைவதை மறுக்கமுடியாது.
  • அந்த வகையில், ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்க வகை செய்யும் திட்டத்தை பாஜக அறிவித்துள்ளது. இதற்குப் போட்டியாக ஏழை மக்களுக்கு மாதம் ரூ.6,000 வீதம் ஆண்டுக்கு ரூ.72,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ்அறிவித்துள்ளது.
  • இந்த "நியாய்' திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60 லட்சம் கோடி நிதி தேவைப்படும். மேலும், 2019-20 நிதிநிலை அறிக்கையில் சுமார் 13 சதவீத நிதியை இந்தத் திட்டம் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆகையால், மத்திய அரசின் ஆதரவுத் திட்டங்கள் அனைத்தையும் விலக்கிக் கொண்டு, மானியங்களைச் சற்று குறைத்தால் மட்டுமே வருவாய்ப்பற்றாக்குறையில் எந்தவிதத் தாக்கமும் இன்றி, "நியாய்' திட்டத்துக்கான நிதியைத் திரட்ட முடியும்.
  • தவிர, வருவாய் ஆதரவு திட்டங்களைக் காட்டிலும் சுகாதாரம், கல்வி மற்றும் பொது சேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். இந்தியாவைப் பொருத்தவரை மக்களின் தனி நபர் வருமானமும், ஏழ்மை நிலையும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. வடக்கு, மத்திய மற்றும் கிழக்குப் பிராந்தியங்களைவிட தெற்கு, மேற்கு பிராந்தியங்கள் குறைவான வறுமை நிலையையே கொண்டுள்ளன. தனி நபர் வருமானம் உள்பட பொது மக்களின் கல்வி நிலை மற்றும் சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதை மேற்கோள் காட்டுகிறது.
  • வறுமை எனும் திறன் இழப்பை ஒழிப்பதில் உற்பத்தியாளர், நுகர்வோரின் சேவையும் இன்றியமையாதது. ஏனெனில் பொதுமக்கள் ஆக்கப்பூர்வமான, கண்ணியமான வாழ்வை மேற்கொள்வதில் இவர்களது சேவை அங்கீகாரம் பெற்றிருப்பதுடன், சர்வதேச அளவில் ஏழ்மையைக் கருத்தில் கொள்ளும்போது பல பரிமாண யோசனைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.
  • மேலும் சுகாதாரம், கல்வி தவிர்த்து குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம், வீட்டுவசதி ஆகியவையும் சேவைகளில் பிரதான இடம் வகிக்கின்றன. எனவே, இந்தச் சேவைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால், இந்தியாவில் ஏழ்மையின் அளவு இன்றைக்குப் பதிவாகியிருப்பதைக் காட்டிலும் அதிகமாகவே இருந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஏழ்மை நிலை
  • பல ஆண்டுகளாக நாட்டை பீடித்திருக்கும் ஏழ்மையை முடிவுக்குக் கொண்டுவருவதில் காணப்படும் நடைமுறைச் சவால்களையும், பிரதான அரசியல் கட்சிகளால் முன்மொழியப்பட்ட வருமான ஆதரவுத் திட்டங்களின் திறனையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
  • ஏனெனில், தேசத்தின் வளர்ச்சிக்கு அரை நூற்றாண்டுக் காலமாக சவால் விடும் வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு குறுக்கு வழியில்லை என்றாலும், அதற்கான பாதை வெகு தொலைவில் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. வறுமை ஒழிப்பு நோக்கத்துக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, முறைகேடுக்கு இடமின்றி சரியாகப் பயன்படுத்தப்பட்டால் அனைத்தும் சாத்தியமே.

நன்றி: தினமணி(21-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories