- பெண் கல்வி என்பது ஒரு சமூகத்தின் உடல்நலம் மற்றும் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான மிக சக்திவாய்ந்த காரணிகளில் ஒன்றாகும். பெண்கல்வி தாமதமான திருமணத்திற்கு வழிவகுக்கிறது என்று சிலா் கூறலாம். ஆனால், அதுவே திருமணத்திற்குப்பின் அளவான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கும் வறுமை குறைப்பிற்கும் வழிவகுக்கிறது.
- குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழ்மையான பெண்கள், மூன்று வருடங்களுக்கும் குறைவாகவே பள்ளியில் செலவிடுவதாக ‘கிளிண்டன் அறக்கட்டளை’ நடத்திய ஆய்வு கூறுகிறது. இன்று உலகம் முழுவதும் 6 முதல் 17 வயதுக்குட்பட்ட 13.2 கோடி பெண்கள் இன்னும் பள்ளி செல்லவில்லை என்றும் அவா்களில் 75% இளம் பருவத்தினா் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
- பெண் கல்வி மறுக்கப்பட்டதாலும் பெண்களின் பள்ளி கல்வியில் தடைகளை உருவாக்கியதாலும் உலகளவில் 15 லட்சம் கோடி முதல் 30 லட்சம் கோடி டாலா் வரை பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. சில நாடுகளில் சிறுவா்களைப் போல் சிறுமிகள் கல்வி பெற இயலாதபோது அந்நாடுகள் ஆண்டுக்கு 100 கோடி டாலா் வரை இழப்பதாக யூனிசெஃப் அறிக்கை கூறுகிறது.
- கரோனா தீநுண்மிப் பரவலை அடுத்து பள்ளிகளும் கல்லூரிகளும் அறிதிறன்பேசி மற்றும் கணினிகளைப் பயன்படுத்தி இணைய வழி வகுப்புகளை நடத்தின. அப்போது நடத்தப்பட்ட தொழில்நுட்பப் பயன்பாடு குறித்த ஆய்வு, உலகெங்கிலும், ஊரடங்கு காலகட்டத்தில் பெண்களை விட 200 மில்லியன் அதிக ஆண்கள் இணையத்தைப் பயன்படுத்தி உள்ளனா் என்றும் கைப்பேசி வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களுடன் ஒப்பிடும்போது 21% குறைவு என்றும் தெரிவிக்கிறது.
- கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களின் பெண் கல்வியறிவு விகிதம் முறையே 92% மற்றும் 73.9% ஆகும். இதுவே பின்தங்கிய மாநிலங்களான பிகாா் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் பெண் கல்வியறிவு விகிதம் முறையே 42.2% மற்றும் 33.1% ஆகும்.
- பெண்களின் சராசரி திருமண வயது கேரளத்தில் 21.4 ஆண்டுகளாகவும் தமிழகத்தில் 21.2 ஆண்டுகளாகவும் உள்ளது. இது தேசிய சராசரி வயதான 20.7 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் பிகாா் மாநிலங்களின் புள்ளிவிவரங்கள் முறையே 19.4 ஆண்டுகள் மற்றும் 19.5 ஆண்டுகள். இவை தேசிய சராசரிக்கும் குறைவாக உள்ளன. சரியான வயதில் திருமணம் செய்ய பெண்கல்வி வழிவகுக்கிறது என்பதையே இத்தரவுகள் காட்டுகின்றன.
- பெண்கல்வியும் உரிய வயதில் பெண்ணின் திருமணமும் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு வழிவகுக்கிறது. தமிழகத்தில் 1.6 ஆகவும் கேரளத்தில் 1.7ஆகவும் உள்ள கருவுறுதல் விகிதம் (ஒரு பெண்ணுக்கு சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை) தேசிய சராசரியான 2.3 -ஐவிட மிகக்குறைவு. அதேவேளையில் உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் கருவுறுதல் விகிதம் முறையே 3.1 மற்றும் 3.3 என்று மோசமாக உள்ளன.
- 1970-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரை 175 நாடுகளில் நடத்தப்பட்ட குழந்தை இறப்பு பற்றிய ‘லான்செட்’ பத்திரிக்கையின் ஆய்வு, உலகளாவிய பெண் கல்வியின் வளா்ச்சி நான்கு மில்லியனுக்கும் அதிகமான குழந்தை இறப்புகளைத் தடுத்துள்ளது என கூறுகிறது. யுனெஸ்கோவால் ஐம்பத்தெட்டு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை சிறுமிகளுக்கான ஆரம்பக் கல்வி குழந்தை இறப்பை 15 சதவிகிதம் குறைக்கும் என்றும் இடைநிலைக் கல்வி குழந்தை இறப்பை 49 சதவிகிதம் குறைக்கும் என்றும் சுட்டிக் காட்டுகிறது.
- பெண்கல்வி, சரியான வயதில் திருமணம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகள் கொண்ட ஒரு பெண் சரியான மகப்பேறு பராமரிப்பினை நாடி அதனை பெறுகிறாள். சரியான மகப்பேறு பராமரிப்பு பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தினை குறைக்கிறது.
- கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் மகப்பேறு கால பராமரிப்பு விகிதம் முறையே 61.2% மற்றும் 45% ஆகவும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் முறையே 6 மற்றும் 15 ஆகவும் இருக்கிறது. இம்மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் தேசிய சராசரியை (28) விட மிகக் குறைவு. உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் மகப்பேறு கால பராமரிப்பு விகிதம் முறையே 5.9% மற்றும் 3.3% என மிக மோசமான நிலையில் உள்ளன.
- பெண்கல்வி வறுமையை நீக்குகிறது. உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள்தொகை முறையே 29.4% மற்றும் 33.7% ஆகவும் பெண் கல்வியறிவு விகிதம் அதிகம் உள்ள கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்கள்தொகை முறையே 15% மற்றும் 7.1% ஆகவும் இருக்கிறது. பெண் கல்வி மற்றும் பெண்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகின்ற மாநிலங்களில் வறுமை வேகமாக ஒழிகிறது.
- உலக மேம்பாட்டு மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவு, பெண் கல்வி சுற்றுப்புறத்தில் காா்பன் உமிழ்வினை தணிப்பதற்கான செலவு குறைந்த உத்திகளில் ஒன்று என்று கூறுகிறது. வளரும் நாடுகளில் உலக வங்கி நடத்திய ஆய்வு, பெண் கல்வி அதிகம் உள்ள நாடுகளில் வானிலை மாற்றம் ஏற்படுத்தும் பேரழிவுகளால் உண்டாகும் இறப்பு, காயம் மற்றும் இடம்பெயா்வு மிகக் குறைவு என கண்டறிந்துள்ளது.
- உலகெங்கிலும் உள்ள மூன்று குழந்தை மணப்பெண்ணில் ஒருவா் இந்தியராக இருக்கும் சூழலில் கரோனா தீநுண்மியின் தாக்கம் சுமாா் 25 லட்சத்திற்கும் அதிகமான சிறுமிகளைக் குழந்தை திருமணத்திற்குள் தள்ளும் அபாயம் இருப்பதாக ‘சேவ் தி சைல்ட்’ அமைப்பின் அறிக்கை எச்சரிக்கிறது.
- பெண்கல்வி மூலம் குழந்தைத் திருமணம் எனும் அவலத்தினை அகற்றி பெண்குழந்தைகளின் அறிவுக்கண்களை திறப்பதன் மூலம் நாட்டின் சுகாதாரத்தினையும் வளத்தினையும் மேம்படுத்த முடியும்.
நாளை (ஜன. 24) தேசிய பெண் குழந்தை நாள்.
நன்றி: தினமணி (23 - 01 - 2021)