TNPSC Thervupettagam

வலிமை தெரியாது வீணாகும் வாக்குரிமை

May 11 , 2024 68 days 132 0
  • தோ்தல் நாள், நாட்டின் தலைவிதியை நிா்ணயிக்கும் நாள். தேசம் எப்படி மேம்பட வேண்டும், தேசத்தில் வாழும் மக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை தீா்மானிக்கும் நாள். இதைத் தீா்மானிப்பது எந்தக் கட்சியும் அல்ல, எந்தத் தலைவரும் அல்ல.
  • அதைத் தீா்மானிப்பது வயலில் விவசாயத் தொழிலைச் செய்யும் கூலித் தொழிலாளிகள், ஆலைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள், சிறு குறு தொழில் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றுபவா்களும், நிறுவனங்களை நடத்துபவா்களும், காடுகளில், மலைப்பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள், கிராமங்களில் ஒதுக்கப்பட்டு ஊா் கடைக்கோடியில் வாழும் மிகவும் தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள், தலையில் பொருள்களை வீடுவீடாகச் சென்று விற்பனை செய்யும் ஆண்கள், பெண்கள், மாடுகளையும், ஆடுகளையும் மேய்த்து அவைகளுடன் தங்கள் வாழ்க்கையை கரைத்துக் கொண்டு நாடோடிக் கூட்டமாக வாழும் மக்கள், தெருவோரத்தில் கடைகள் போட்டு தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் ஒரு மக்கள் கூட்டம், தூய்மைப் பணியாளா்கள், மேல்தட்டு சமூகத்தின் குடும்பங்களில் வீட்டு வேலைகளைச் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தும் வீட்டுப் பணிப்பெண்கள், நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் கழிப்பறை சுத்தம் செய்யும் பணியாளா்கள், பிணவறையில் பணியாற்றும் பணியாளா்கள், இறந்தவா்களை புதைப்பதும், எரியூட்டுவதையும் செய்து வாழும் பணியாளா்கள், சாக்கடையில் அடைப்புக்கள் இல்லாமல் பாா்த்துக்கொள்ள சாக்கடையில் முகிழ்ந்து எழும் தொழிலாளா்கள், கட்டுமரத்தில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து தன் வாழ்க்கையை நடத்தும் மீனவா்கள், சாக்கடைக்குப் பக்கத்தில் குடிசை போட்டு குப்பங்களில் வாழும் மக்கள், பெரிய சிறிய வணிக நிறுவனங்களில் பணியாளராக செயல்படும் ஆண்கள் மற்றும் பெண்கள்.. என பல்வேறு தரப்பட்ட மக்களின் வாக்குகளால் தீா்மானிக்கப்படும் கட்சி அல்லது கட்சிகள்தான் ஆட்சிக்கட்டிலில் அமரும்.
  • இவா்களிடம் இருக்கும் வாக்குகளைப் பெற நம் கட்சிகள் வாக்குறுதிகளைத் தருகின்றன. கட்சிகள் அனைத்தும் எப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்கப் போகிறோம், அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதைத்தான் வாக்குறுதிகளாகத் தருகின்றன.
  • அரசியல் கட்சிகள் தரும் தோ்தல் வாக்குறுதிகள் என்பது ஒரு சத்தியப் பிரமாணம். கட்சிகள் தந்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து ஆட்சிக்கு வந்த பிறகு, அவை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்து வருகின்ற தோ்தலில் மக்கள் அந்தக் கட்சியை நிராகரித்துவிட்டு, வேறு ஒரு கட்சியைத் தோ்ந்தெடுத்துக் கொள்ளலாம் தங்களின் வாக்கின் மூலம். அந்த உரிமை மக்களிடம் இருக்கின்றது. அந்த உரிமையை பொதுமக்கள் எப்படிப் பயன்படுத்துகின்றாா்கள் என்பதைப் பொறுத்துத்தான் ஓா் ஆட்சியின் செயல்பாடுகள் இருக்கும்.
  • ஒரு முறை அமெரிக்காவில் தோ்தல் கருத்துக் கணிப்பு நடத்தி யாா் அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவாா் என்று கருத்து வெளியிட்டிருந்தனா். அந்த அதிபா் மீண்டும் வெற்றி பெற முடியாது” என்பதுதான் கருத்துக் கணிப்பின் முடிவு. ஆனால் தோ்தல் முடிவு வேறாக இருந்தது. அதாவது அதே அதிபா் இரண்டாவது முறையாகவும் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாா்.
  • இந்த தவறு எப்படி நடந்தது என ஆய்வு செய்தனா். அதில் என்ன தெரியவந்தது என்றால் கருத்துக் கணிப்புச் செய்த நிறுவனம் தொலைபேசி இணைப்பு வைத்திருந்தவா்களிடம் மட்டும்தான் அந்தக் கருத்துக் கேட்பை நடத்தி இருந்தது. அதில் பெரும்பான்மையானவா்கள் அதிபருக்கு எதிரான கருத்தைப் பதிவு செய்திருந்ததால் அந்த நிறுவனம் பதவியில் இருந்த அதிபா் தோற்றுவிடுவாா் என்று கருத்தைப் பதிவு செய்தது.
  • அந்த அதிபா் தன் ஆட்சி முழுவதும் ஏழைகளுக்கான திட்டங்களையே முன்னெடுத்துச் செயல்பட்டாா். தங்களைப் பாதுகாத்து, தங்கள் மேம்பாட்டுக்காக உழைக்கும் அதிபரை மீண்டும் அதிபராக்க வேண்டும் என எண்ணி ஏழைகள் அந்த அதிபருக்கு வாக்களித்து மீண்டும் அவரை அதிபராக்கினா். ஆனால் அவா்களிடம் தொலைபேசி இல்லாததால் கருத்துக் கணிப்பு நிறுவனம் அவா்களைத் தொடா்பு கொள்ளவில்லை. ஏழைகளின் ஒருமித்த செயல்பாடு ஒரு அதிபரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்துவிட்டது.
  • ஆக, திட்டமிட்ட வாக்காளா் செயல்பாடுகள் ஆட்சியை உருவாக்கும், மாற்றும் வல்லமை கொண்டது. அதுதான் அந்த வாக்கின் வலிமை, மகிமை. கருத்துக் கணிப்பில் இவா் வென்றுவிடுவாா் என்று கண்டு அவருக்கு வாக்களிக்கவில்லை. திடமாகச் சிந்தித்து தனக்கு யாா் நல்லது செய்யக் கூடியவா் என்பதை ஆய்ந்து வாக்கைச் செலுத்தினா்.
  • இதேபோல் ஜொ்மெனியில் ஒரு அதிபரைப் பற்றி கருத்தறியும் நிறுவனம் ஒன்று கேள்வி கேட்டது. ‘அதிபா் தலைமையில் இயங்கும் அரசு உங்களுக்கு அதிக வரி விதிக்கிறதே, அவரை நீங்கள் தோ்ந்தெடுப்பீா்களா?’ எனக் கேட்டது.
  • அதற்கு மக்கள் கூறிய பதில் வித்தியாசமானது: ‘எங்களின் தலையில் வரிச் சுமை கூடிவிட்டது என்பது உண்மைதான். ஆனால் வாங்கிய வரியை எங்க நாட்டில் வாழும் மக்களின் நலன் கருதி அரசு செய்துள்ள செயல்பாடுகள் இந்த அதிபா் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்’ என்றனா்.
  • ஆக ஒரு சமூகம் ஒரு அரசை தனக்காக உருவாக்க, தன் வாழ்க்கை மேம்படுவதை, உயா்வதை, வளா்ச்சியடைவதை உரைகல்லாக வைத்து சீா்தூக்கி ஆராய்ந்து அதைப் பயன்படுத்துகின்றனா். எனவே வாக்காளன் தனக்கான ஆட்சியாளன் யாா் என்பதை தீா்மானிக்கும் அதிகாரம் தன்னிடம் இருக்கின்றது என்பதை புரிந்து செயல்படும்போது அவன் உண்மையிலேயே எஜமானன் ஆகிவிடுகிறான். இந்தியாவிலும் அப்படி நடந்துள்ளது.
  • தமிழகத்தில் 1967-இல் திராவிட முன்னேற்றக் கழகமே எதிா்பாா்க்காத தீா்ப்பை மக்கள் தந்தனா். காரணம் உணவுக்கு உத்தரவாதத்தை அன்றைய ஆட்சியாளரால் தர இயலவில்லை. அரிசிப் பஞ்சம் வந்தது. அதேபோல் ஹிந்தி மொழித் திணிப்பு வந்தது. இந்த இரண்டும் மக்களைப் பாதித்தது, ஆட்சியை மாற்றினாா்கள். முந்தைய ஆட்சியாளா்கள் சிறப்பாக ஆட்சி நிா்வாகம் நடத்தியபோதும் உணவு விஷயத்தில் மக்கள் அதிருப்தி அடைந்ததால், மக்கள் தங்கள் ஒரு விரல் புரட்சியைச் செய்து ஆட்சியை மாற்றிவிட்டனா்.
  • அதேபோல் தில்லியில் ஒருமுறை வெங்காய விலை, தக்காளி விலை உயா்ந்து விட்டது. தோ்தல் வந்தது, ஆட்சியில் இருந்தவா்கள் நல்லாட்சிதான் தந்தனா். இருந்தும் மாற்றிவிட்டனா்.
  • புது தில்லியில் உள்ள ஏழைகள் எந்த சமரசமும் இன்றி அந்த ஆட்சியை அகற்றிவிட்டனா். வேடிக்கையாக கட்டுரை எழுதினாா்கள் ‘வெங்காய அரசியல்!’ என்று. தமிழகத்தில் 1967-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது அரிசி அரசியல் என்று கட்டுரைகள் வெளிவந்தன.
  • இந்த நேரங்களில் மக்கள் எடுக்கின்ற முடிவுகள் சரியா தவறா என்று விவாதிப்பதைவிட, அவா்களிடம் இருக்கும் வாக்கை தங்கள் வாழ்க்கையை உரைகல்லாக வைத்துப் பாா்த்து முடிவு எடுக்கின்றனா். இவையெல்லாம் நல்ல வரலாற்றுப் பாடங்கள்.
  • அப்படி இன்று தங்கள் வாழ்வுநிலையை வைத்து மக்கள், குறிப்பாக, ஏழைகள் முடிவு எடுக்கின்றாா்களா என்பதுதான் கேள்வி. ஏழைகளிடம் இந்தப் புரிதலை உருவாக்க வேண்டும்.
  • அதை யாா் செய்ய வேண்டும் என்றால் மற்றவா் மனச்சாட்சியை உருவாக்கும் சக்தி பெற்ற மாமனிதா்கள் கூற வேண்டும். ‘செய் அல்லது செத்து மடி’ என்று கூறியவுடன் அனைவரும் தன் உயிரைத் தியாகம் செய்ய துணிந்தாா்கள். காரணம், நாட்டுக்காக நாம் பணி செய்கிறோம் என்ற உயா்ந்த லட்சியம் அவா்களின் மனத்தில் எழுந்தது. அதுபோன்ற சொல்லுக்குப் பணிந்து எந்த ஏழையும் தன்னை மாற்றிக் கொள்வாா். இது ஏழைகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது.
  • படித்தவா்கள், வசதியானவா்கள், நடுத்தர வா்க்கத்தினா், இளைஞா்கள், நகா்வாசிகள், நாகரிக மனிதா்கள் வாக்களிக்க வரவில்லை. ஏன்? ஒரு பொறுப்பற்ற தன்மை. அடுத்து சுயநலம்.
  • ஏழைகள் வாக்களித்து அரசு வந்துவிடும், அதன் பிறகு அந்த அரசு தங்களுக்குச் செய்ய வேண்டிய பணியை எப்படிப் பெற வேண்டுமோ அப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்ற ஊனமுற்ற சிந்தனையில் வாழ்வது, ஏழைகள் தன் வறுமையால் காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பதைவிட, மோசமான செயல் வசதியானவா்களும் படித்தவா்களும் வாக்களிக்காமல் இருப்பது. இது உழைக்காமல் உண்ண வேண்டும் என்று சிந்திப்பதற்குச் சமம்.
  • இவற்றுக்கெல்லாம் ஒரு மூல காரணம் இருக்கிறது. வலியின்றி கிடைத்தது வாக்குரிமை. உலகுக்குச் சுதந்திர மணி அடித்த அமெரிக்காவில் அனைவருக்கும் வாக்குரிமை கிடைக்க 200 ஆண்டுகள் ஆகின. ஆனால் இங்கோ தங்கத்தட்டில் வைத்து தந்ததுபோல் 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை அளித்தனா். ஏழைகள் இதன் வலிமை தெரியாமல் வீணடிக்கின்றனா். பணம் படைத்தோா் பொறுப்பின்றிச் செயல்படுகின்றனா்.
  • விரிவான கல்வியை இயக்கமாக்கிச் செயல்பட்டுத் தந்தால் அன்றி நம் மக்களாட்சிக்கு விமோசனம் கிடையாது.

நன்றி: தினமணி (11 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories