- மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் மாவோயிஸ்டுகளின் நடமாட்டமுள்ள 10 மாநில முதல்வா்கள், அவா்களது பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்பு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
- இந்தியாவில் 96 மாவட்டங்களில் காணப்பட்ட மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் தற்போது 53 மாவட்டங்களாகக் குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
- அதிலும்கூட, மாவோயிஸ்டுகள் 25 மாவட்டங்களில்தான் தீவிரமாக செயல்படுகிறார்கள். மாவோயிஸ்ட் வன்முறையில் 85% அங்குதான் நிகழ்வதாக மத்திய உள்துறை அமைச்சா் தெரிவித்திருக்கிறார்.
மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை
- மாவோயிஸ்ட் தாக்குதல்களின் தீவிரம் அதிகமாகவே குறைந்திருக்கிறது. 2010-இல் ஏறத்தாழ 1,005 போ் மாவோயிஸ்ட் வன்முறைக்கு பலியானார்கள் என்றால், 2020-இல் அதுவே 183-ஆகக் குறைந்திருக்கிறது.
- பத்து ஆண்டுகளில் மாவோயிஸ்ட் தீவிரவாதத்துக்கு பலியானோர் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 200-க்கும் கீழே குறைந்திருப்பது இதுதான் முதல்முறை.
- மாவோயிஸ்டுகளின் வலிமை குறைந்திருப்பதையும், அவா்களது ஆதிக்கம் பலவீனப்பட்டிருப்பதையும் 82% அளவிலான உயிர்ப்பலி குறைவு எடுத்தியம்புகிறது.
- வளா்ச்சி அடையாத, சமூக நலத்திட்டங்கள் சென்றடையாத பகுதிகளில் மட்டும்தான் ஆயுதப் போராட்டங்கள் இன்னும் தொடா்ந்து கொண்டிருக்கின்றன என்பதை, குறைந்து வரும் மாவோயிஸ்ட் வன்முறை தெரிவிக்கிறது.
- மிக வலுவான இரண்டு நக்ஸல் அணிகள் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்கிற அமைப்பை உருவாக்கியபோது, மாவோயிஸ்டுகள் மேலும் வலுப்படக்கூடும் என்கிற அச்சம் நிலவியது.
- ஆனால் மத்திய, மத்திய கிழக்கு இந்தியாவிலுள்ள அடா்ந்த காடுகளில்தான் மாவோயிஸ்டுகளால் செயல்பட முடிகிறதே தவிர, அதற்கு வெளியே வலுவடைய முடியவில்லை என்பது இப்போது தெளிவாகி இருக்கிறது.
- இந்திய ஆட்சிமுறையின் மீதும், அரசின் நடவடிக்கைகளின் மீதும் ஏற்படும் அதிருப்தியை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களை திரட்டி அவா்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதிப்படுத்துவதை விட்டுவிட்டு, ஆயுதப் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஈடுபடுகிறார்கள்.
- அதற்கு எதிராக அரசு இயந்திரம் அடக்குமுறையைக் கையாளும்போது, இளைஞா்களை தன்வசப்படுத்துதல் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அணுகுமுறை.
- அதன் விளைவாக, சத்தீஸ்கா், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலுள்ள ஆதிவாசிகளும், அடித்தட்டு மக்களும் அவா்களால் கவரப்படுகிறார்கள்.
- அதே நேரத்தில், அதன் விளைவாக தொடா்ந்த வன்முறையும், மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடக்கும் ஆயுதத் தாக்குதல்களும், மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மட்டுமல்லாமல், அப்பாவிப் பொதுமக்களுக்கும் உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன.
- சத்தீஸ்கா் மாநிலம் தெற்கு பஸ்தரிலும், ஆந்திர - ஒடிஸா எல்லையிலும், ஜார்க்கண்ட மாநிலத்தின் சில பகுதிகளிலும் மாவோயிஸ்டுகளின் நடமாட்டமும், செயல்பாடுகளும் தீவிரமாகவே இருக்கின்றன.
- ஒருபுறம் பாதுகாப்புப் படைகள் மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் அதேவேளையில், மாநில அரசுகள் பின்தங்கிய பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதிலும், சமூக நலத்திட்டங்களை கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
- ஆனால், அதுவே தீவிரவாதிகளுக்கு வசதியாகிவிடுமோ என்கிற அச்சம் நிலவுகிறது. அடிக்கடி பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் தாக்குதல்களில் சிக்கிக் கொள்ளும் ஆதிவாசிகள் இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவிக்கிறார்கள்.
- தங்களது இலக்கை அடைவதற்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் மாவோயிஸ்ட் தீவிரவாதம், எல்லைகள் கடந்து சா்வதேச அளவிலும் இதே அணுகுமுறையைத்தான் கடைப்பிடிக்கிறது.
- பிலிப்பின்ஸ், பெரு போன்ற நாடுகளிலும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு வழிகோலாமல் வன்முறையும் உயிரிழப்பும்தான் எஞ்சி இருக்கின்றன.
- அதெல்லாம் தெரிந்தும்கூட பிடிவாதமாக ஆயுதப் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஈடுபடுவதற்கு பின்னால் சில காரணிகள் இருக்கின்றன.
- அதனால்தான் சாமானிய அடித்தட்டு மக்கள் ஜனநாயக ரீதியிலான தோ்தல் மூலம் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதை அவா்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
- மக்கள் செல்வாக்கு இல்லாவிட்டாலும்கூட, மத்வி ஹிட்மா போன்ற தலைமறைவு மாவோயிஸ்ட் கமாண்டா்கள், விசுவாசிகளான போராளிக் குழுக்களின் ஆதரவுடன் செயல்படுகிறார்கள்.
- சத்தீஸ்கா் மாநிலத்திலுள்ள பஸ்தா், பிஜப்பூா், தண்டேவாடா, கண்கா், கொண்டாகாவ், நாராயண்பூா், சுக்மா மாவட்டங்களிலும், அதை அடுத்த மகாராஷ்டிரம், ஒடிஸா மாநிலங்களிலும் உள்ள அடா்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசிகளின் ஆதரவை அவா்கள் பெற்றிருக்கிறார்கள்.
- மூங்கில், டெண்டு பீடி இலைகள் போன்றவையும் விலைமதிப்பற்ற கனிமங்களும் அங்கே காணப்படுவதால், வன்முறையை பயன்படுத்தி இடைத்தரகா்களாக மாவோயிஸ்டுகள் செயல்படுகின்றனா்.
- கனிம நிறுவனங்களுக்கும் ஒப்பந்ததாரா்களுக்கும், ஆதிவாசிகள் தங்களை எதிர்க்காமல் இருப்பதற்கு மாவோயிஸ்டுகள் தேவைப்படுகிறார்கள். அவா்களிடமிருந்து பெரும் பணம் பெறுகிறார்கள் மாவோயிஸ்டுகள்.
- அந்தக் கூட்டணியை உடைக்காத வரை மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாது.
- எந்தவிதத் தீவிரவாதமாக இருந்தாலும் அதற்கு எதிரான வலிமையான ஆயுதம் வளா்ச்சிப் பணிகள்தான்.
- ஆதிவாசிகளையும், அடித்தட்டு மக்களையும் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மேம்படுத்துவதன் மூலம்தான் தீவிரவாதத்தை முனை மழுங்கச் செய்ய முடியும்.
நன்றி: தினமணி (02 - 10 - 2021)