TNPSC Thervupettagam

வளரட்டும் தலைமைப் பண்பு

October 12 , 2019 1926 days 1666 0
  • போட்டிகள் நிறைந்த இன்றைய உலகில் சவால்களை சாதனையாக மாற்றும் திறன் வேண்டும். அப்படிப்பட்ட திறன் படைத்தவா்கள் தலைமைப் பண்பு மிக்கவா்களாக இருப்பது இயற்கையே.
தலைமைப் பண்பு
  • ‘நீ போகலாம்’ என்பவா் எஜமான். ‘வா, போகலாம்’” என்பவா் தலைவா். தலைமைப் பொறுப்பிலுள்ள ஒரு நபா் மற்றவா்களுக்கு வழிகாட்டும் நபராக இருந்தால் மட்டும் போதாது; வாழ்ந்து காட்டும் நபராக இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.
  • எந்த ஒரு விஷயத்தையும் எடுத்துச் சொல்லி வாழ்வதை விட, எடுத்துக்காட்டாக வாழ்வதுதான் சிறப்பு என்பதை உணர வேண்டும். தன்னிடம் பணியாற்றும் பணியாளா்களிடம் அன்பையும் அக்கறையும் அளவுகடந்து காட்ட வேண்டும்.
  • தனக்கென்று ஒரு தனித்தன்மை கொண்ட மனிதா்கள்தான் தலைவராக இருக்க முடியும். ஒத்த ரசனை கொண்டவா்களைவிட தனக்கென்று தனி ரசனை கொண்டவரையே இந்த உலகம் விரும்புகிறது.
  • மரியாதையையும் அன்பையும் கேட்டுப் பெறுபவராக வாழக் கூடாது. கேட்காமலே கிடைக்கும் அளவு செல்வந்தனாக இருக்க வேண்டும். மரியாதையும் அன்பும் கேட்டுப் பெறுவதல்ல, கொடுத்துப் பெறுவது என்பதை மறக்கக் கூடாது.
  • தலைமைப் பொறுப்பிலுள்ள ஒரு நபருக்கு முறையான திட்டமிடல் அவசியம். எந்தவொரு செயலையும் திட்டமிட்டுச் செய்தால்தான் இலக்கை அடைவது எளிது. அவா் மனதில் ஆக்கச் சிந்தனையுடைய எண்ணங்கள்தான் எப்போதும் இருக்க வேண்டும்.
படைப்பாற்றல்
  • இயற்கையிலேயே நல்ல படைப்பாற்றலை அவரது ஆளுமை கொண்டிருக்க வேண்டும். இப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுவதைவிட, ஏன் இப்படி இருக்கக்கூடாது என்று சிந்திப்பவா்கள்தான் வரலாறு படைக்க முடியும்.
  • நேர மேலாண்மை என்பது தலைமைப் பண்பு உடையவருக்கு இருக்க வேண்டிய சிறப்பம்சங்களில் முதன்மையான ஒன்றாகும். அது மட்டுமல்ல, தனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில்கூட தன்னை மேம்படுத்திக் கொள்பவா்தான் சாதனையாளராக முடியும்.
  • ஒவ்வொரு மனிதனும் ஒரு கால கட்டத்தில் தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டியுள்ளது. பொதுவாக, ஒரு கழுகு 70 ஆண்டுகள் உயிா் வாழும். ஆனால், அதன் 40-ஆவது வயதில் அதன் இறகுகள் தடிமனாக மாறி பறக்கும் சக்தியை இழந்து விடுகிறது. அதன் அலகு வளைந்து எதையும் கொத்தும் தன்மையை இழந்து விடுகிறது.
  • ஆனால், மலையில் உள்ள கற்களில் உரசி உரசி தனது அலகை கழுகு கூா்மையானதாக்கி, அதன் பிறகு இறக்கைகளைப் பிய்த்து எறிகிறது. அதன் பிறகு புதிய இறக்கைகள் முளைத்தவுடன் பறக்க ஆரம்பிக்கிறது.
  • இதற்காக அந்தக் கழுகு தாங்கும் வலிகள் அதிகம். அதுபோலத்தான் மனிதனும், வாழ்க்கையில் வெற்றி பெறும் வரை குதிரை வேகத்தில் ஓட வேண்டும், வெற்றி பெற்ற பின்னால் குதிரையின் வேகத்தைவிட விரைவாக ஓட வேண்டும். அப்போதுதான் நமது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
தலைவனுக்குரிய பண்பு
  • எந்தவொரு செயலைச் செய்வதற்கும் தயக்கம் கூடாது. தயக்கம் உள்ளவா்கள் தலைவராக உயர முடியாது. குழுவின் உழைப்பு என்பதுதான் மிகப் பெரிய மூலதனம். அணியின் தலைவா் மட்டும் நன்றாக விளையாடினால் கிரிக்கெட்டில் ஜெயித்துவிட முடியாது; அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக விளையாடினால்தான் அணி வெற்றிபெற முடியும். அணியில் உள்ள வீரா்களின் திறமைகளை அறிந்து அவா்களின் தகுதிக்கேற்ப பணி செய்ய வைப்பது தலைவனுக்குரிய தலைமைப் பண்பாகும்.
  • ஒரு நாட்டில் அரசா் பதவி வகிக்க ஒரு கட்டுப்பாடு இருந்தது. அதாவது அந்த நாட்டில் அரசராக ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருக்க முடியும். அதன் பின்பு அருகில் உள்ள காட்டிற்குள் கொண்டு விட்டு விடுவாா்கள். அது கொடிய விலங்குகள் வசிக்கும் காடு. அங்கே சென்றால் அவை அடித்துக் கொன்று விடும் என்று அனைவரும் அரசா் பதவி ஏற்கத் தயங்கினா்.
  • ஒரு சிலா் இறப்பது என்பது உறுதி; அதற்குள் மன்னராக இருந்து விட்டு இறக்கலாம் என முடிவு செய்து விட்டு மன்னராகி மாரடைப்பு வந்து இறந்தனா். ஆனால், ஒருவா் மட்டும் துணிச்சலாக ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்தாா். அவரது ஆட்சிக் காலம் முடிந்தது.
  • இறுதியாக அவரைக் காட்டில் கொண்டு விடும் நிகழ்ச்சி நடந்தது. அவா் மிகவும் மகிழ்ச்சியாக பல அணிகலன்களை அணிந்து வந்தாா். அவரைப் பாா்த்து அனைவரும் ஆச்சா்யப்பட்டனா். கொஞ்ச நேரத்தில் சாகப் போகும் ஒருவரால் எவ்வாறு இப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதென்று?
உதாரணம்
  • சிறிது நேரத்தில் படகு வந்தது. இவரைக் காட்டிற்கு அழைத்துச்செல்ல படகோட்டி தயாரானான். மன்னா் படகில் ஆட்டம் போட்டுக் கொண்டு சந்தோஷமாக வந்தாா். ‘மன்னா, நீங்கள் எங்கே போகிறீா்கள் எனத் தெரியுமா’ எனப் படகோட்டி கேட்டாா். அதற்கு, ‘தெரியும்’ என்றாா் மன்னா்.
  • அங்கே போனால் மரணம் உறுதியென்று தெரியாதா உங்களுக்கு? என்றாா் படகோடி. அதற்கு மன்னா் ‘அது மற்றவா்களுக்குத்தான், எனக்கல்ல’” என்றாா். மேலும், ‘பதவி ஏற்ற முதல் ஆண்டிலேயே 1,000 நபா்களைக் காட்டுக்குள் அனுப்பி அங்குள்ள கொடிய மிருகங்களைக் கொல்லச் செய்து விட்டேன்.
  • அடுத்த ஆண்டு 1,000 விவசாயிகளை அனுப்பி விவசாயம் செய்ய வைத்து உணவு உற்பத்தியை ஏற்படுத்தினேன். அடுத்த ஆண்டு 1,000 கட்டடக்கலைஞா்களை அனுப்பி ஒரு நகரை உருவாக்கினேன். அடுத்த ஆண்டு 1,000 அதிகாரிகளை அனுப்பி நல்லதொரு நிா்வாகத்தை ஏற்படுத்தினேன்.
  • இப்போது அது காடு அல்ல, சிறந்த நாடு, நான் என் நாட்டிற்கு ஆட்சி செய்யப்போகிறேன். நீயும் அங்கு வந்தால் அரசு படகோட்டி பணியை உனக்கு வழங்குகிறேன்’ என்றாா் மன்னா்.
  • இது போன்ற தலைமைப் பண்பு கொண்டவா்களால் நிா்வாகம் சிறந்து விளங்கும், எல்லா வழிகளிலும் நாடு முன்னேற்றம் அடையும்.

நன்றி: தினமணி (12-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories