- “பதின்ம வயதில் ஏற்படும் எந்தக் கவனச் சிதறலுக்கும் இடம் கொடுக்காதவர் பிரக்ஞானந்தா. இது தொடர்ந்தால் விரைவிலேயே அவர் உலக சாம்பியனாக உருவெடுப்பார்” என்று கடந்த ஆண்டு சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது பெருமையாகத் தெரிவித்திருந்தார் பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷ். சரியாக ஓராண்டிலேயே செஸ் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தைத் தொட்டுவிடும் தொலைவை நெருங்கிவிட்டார் பிரக்ஞானந்தா.
- அசர்பைஜான் நாட்டில் நடைபெற்ற செஸ் உலகக் கோப்பையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 206 வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவிலிருந்து மட்டும் குகேஷ், விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நிஹல் சரின், எஸ்.எல். நாராயணன், அபிமன்யு, அதிபன் பாஸ்கரன், கார்த்திக் வெங்கட்ராமன், ஹர்ஷா பாரதக்கொடி எனப் பத்து வீரர்கள் பங்கேற்றனர்.
- இந்தியர்கள் உள்பட 206 வீரர்களுமே உலகத் தரவரிசையில் முன்னணியில் இருப்பவர்கள்தாம். சர்வதேசத் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் குகேஷ் மட்டுமே இடம்பிடித்தவர். விதித் 20ஆவது இடத்திலும், பிரக்ஞானந்தா 29ஆவது இடத்திலும் இருந்தனர். எனவே, இத்தொடரில் இந்தியர்கள் கடும் போட்டியை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சாதித்த இந்தியர்கள்
- எதிர்பார்த்தது போலவே செஸ் விளையாட்டில் உலகின் தலைசிறந்த போட்டியாளர்கள் பங்கேற்கும் தொடராக இது இருந்தது. இந்திய வீரர்களான குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, பிரக்ஞானந்தா ஆகியோர் ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறினர். சொல்லி வைத்தாற்போல நால்வருமே காலிறுதிக்கும் முன்னேறினர். காலிறுதியில் அர்ஜுன் எரிகைசியைத்தான் பிரக்ஞானந்தா எதிர்கொண்டு வென்றார்.
- ஆனால், நால்வரில் பிரக்ஞானந்தா மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் காருணாவுடனான போட்டி கடுமையாக இருந்த நிலையில், இறுதியில் 3.5க்கு 2.5 என்ற புள்ளிகள் கணக்கில் அவரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் பிரக்ஞானந்தா. இதன்மூலம் செஸ் உலகக் கோப்பையில் விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வீரர், இறுதிப் போட்டிக்குச் சென்ற இளம் வீரர் என்கிற பெருமைகளை பிரக்ஞானந்தா பெற்றார்.
கார்ல்சன் Vs பிரக்ஞானந்தா
- இறுதிப் போட்டியில் கார்ல்சலுடன் பிரக்ஞானந்தா மோதும் சூழல் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இணையவழிப் போட்டிகளில் மூன்று முறை கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்ததால், அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பிரக்ஞானந்தா பூர்த்தியும் செய்தார். அதனால்தான் இறுதிப் போட்டி டை-பிரேக்கர் வரை சென்றது.
- ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக செஸ் உலகில் ஆதிக்கம் செலுத்திவரும் கார்ல்சன், பிரக்ஞானந்தாவை வென்று கோப்பையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றார். கார்ல்சன் ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தாலும், முதல் முறையாக செஸ் உலகக் கோப்பையில் இப்போதுதான் வெல்கிறார்.
- அதுவும் 32 வயதில்தான் சாதிக்க முடிந்திருக்கிறது. ஆனால், பிரக்ஞானந்தா 18 வயதிலேயே இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கம் பெற்றுத் திரும்பியிருக்கிறார். இதன்மூலம் செஸ் உலகக் கோப்பையில் இரண்டு முறை கோப்பையும் தங்கப் பதக்கமும் வென்ற ஆனந்துக்குப் பிறகு, வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்கிற முத்திரையைப் பதித்திருக்கிறார் பிரக்ஞானந்தா.
அடுத்த சாம்பியன்?
- செஸ் உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்ததன்மூலம் அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் தொடருக்கு பிரக்ஞானந்தா முன்னேறியிருக்கிறார். இது 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான சவாலைத் தீர்மானிக்கும் வகையில் எட்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் தொடர். இத்தொடருக்கு இதுவரை தகுதி பெற்றுள்ள ஐந்து வீரர்களில் பதின்ம வயதில் இருக்கும் ஒரே வீரர் பிரக்ஞானந்தா மட்டுமே.
- அது மட்டுமல்ல, ஆனந்துக்குப் பிறகு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதிபெற்ற முதல் இந்தியரும் பிரக்ஞானந்தாதான். அடுத்தடுத்து பெரிய உலக செஸ் தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறும் பிரக்ஞானந்தா, அவருடைய பயிற்சியாளர் சொன்னது போல விரைவில் உலக செஸ் சாம்பியனாக உருவெடுப்பார் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டின் பெருமையாக மிளிரும் பிரக்ஞானந்தாவுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!
நன்றி: இந்து தமிழ் திசை (01– 09 – 2023)