TNPSC Thervupettagam

வளர்ச்சியா? பணவீக்கமா? - ஏப்ரலில் ஜிஎஸ்டி வருவாய்!

May 10 , 2023 424 days 280 0
  • இதுவரை இல்லாத அளவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ஏப்ரல் மாதத்தில் ரூ. 1,87,035 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாத வருவாயான ரூ.1.68 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 12% அதிகம். ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியைக் கடப்பது இது 15-ஆவது முறை.
  • கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் பாதிப்பிலிருந்து ஓரளவுக்கு மீண்டு இந்தியப் பொருளாதாரம் பழைய நிலையை எட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தொடர்ந்து 14 மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.40 லட்சம் கோடிக்கும் அதிகமாக காணப்படுவது வரவேற்புக்குரியது.
  • 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் ஆண்டில் ரூ. 7.19 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், கடந்த நிதியாண்டில் (2022 - 23) ரூ. 18.10 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. அதற்கு முந்தைய நிதியாண்டு வருவாயுடன் ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டு வருவாய் 22% அதிகம்.
  • கடந்த மாத ஜிஎஸ்டி வருவாயில் மத்திய சரக்கு - சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ. 38,440 கோடியும், மாநில சரக்கு - சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ. 47,412 கோடியும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ. 89,158 கோடியும் வசூலாகியிருக்கிறது. கூடுதல் வரியாக (செஸ்) ரூ. 12,025 கோடியும் வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
  • கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ. 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 68,228 கோடி ஜிஎஸ்டி வருவாய் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டின் அதிகபட்ச தினசரி வருவாய் ரூ. 57,846 கோடி. ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், எண்மப் பரிவர்த்தனை மிக முக்கியமான காரணி என்பதை அடிக்கோடிட்டுக் குறிப்பிட வேண்டும்.
  • 2019 ஜூலை மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முதல் பட்ஜெட் உரையில், 2022 - 23 நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் ஸ்திரத்தன்மை பெறும் என்று குறிப்பிட்டதை இப்போது நினைவுகூரத் தோன்றுகிறது. அப்போது கொள்ளை நோய்த்தொற்றோ, அதனால் பொருளாதார மந்தநிலையோ ஏற்படும் என்று யாரும் கனவில்கூட சிந்தித்திருக்க வழியில்லை. அதையும் மீறி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் எதிர்பார்ப்பு நிகழ்ந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. அவரது தீர்க்க தரிசனம் பலித்திருக்கிறது.
  • ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருவது இந்தியப் பொருளாதாரம் தளர்ந்து விடவில்லை என்பதை உணர்த்துகிறது.
  • சர்வதேச பொருளாதாரம் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கும் நிலையில், உலகமய தாக்கத்தையும் மீறி இந்தியா வளர்ச்சி அடைவது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்புக்கு எண்மப் பரிவர்த்தனை போலவே மக்கள் மத்தியில் வரி ஏய்ப்பு மனநிலை குறைந்து வருவதும் காரணமாக இருக்கக்கூடும்.
  • மக்களின் நுகர்வுத்தன்மை சார்ந்த வரி என்பதால், ஜிஎஸ்டி வருவாய் அதிகரிக்கிறது என்கிற விமர்சனத்தை நிராகரிக்க முடியாது. அதிகரித்த விலைவாசி உயர்வு, கடந்த நிதியாண்டின் கூடுதல் வரி வருவாய்க்கு நிச்சயமாக உதவியிருக்கிறது. இந்த நிதியாண்டில் பணவீக்கம் குறைந்து, அதனால் விலைவாசி குறைந்தால் ரூ. 2 லட்சம் கோடி மாத இலக்கை எட்டுவதோ, தற்போதைய ஆண்டு சராசரி ரூ. 1.4 - 1.5 லட்சம் கோடியை அடைவதோ சாத்தியமில்லை. அரசு சில மாற்றங்களைச் செய்தாக வேண்டும்.
  • சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும்கூட அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுகின்றனவே தவிர, வரி விதிப்பு முறை முழுமை பெறவில்லை. ஆரம்பத்தில் காணப்பட்ட பல பிரச்னைகளுக்குத் தீர்வு எட்டப்பட்டாலும்கூட, இன்னும் ஜிஎஸ்டி செலுத்துவதில் பல பிரச்னைகள் தொடர்கின்றன.
  • ஜிஎஸ்டி தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குறைபாடுகளைக் களைய, ஜிஎஸ்டி கவுன்சில் இனியும்கூட திணறுகிறது. மேல்முறையீட்டு ஆணையம் அமைப்பதிலும், வழக்குகளையும் குறைபாடுகளையும் களைவதிலும் கவுன்சிலின் அணுகுமுறை குறித்த விமர்சனங்கள் நிலவுகின்றன.
  • தற்போது சரக்கு மற்றும் சேவை வரி 5%, 12%, 18%, 28% என்று நான்கு வகையாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. அன்றாட, அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருள்களுக்கு விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான பொருள்கள் விலக்கு வரம்பில் உட்படுத்தப்பட்டிருக்கின்றன அல்லது 5% குறைந்த வரி வரம்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் எந்தவித மாற்றமும் ஏற்புடையதல்ல.
  • புகையிலை, மதுபானம் உள்ளிட்டவையும், மகிழுந்துகள் போன்றவையும் 28% வரி வரம்பில் இருக்கின்றன. அவற்றின் மீது ஏற்கெனவே கூடுதல் வரி விதிக்கப்படும் நிலையில், வரி வரம்பை அதிகரிக்க முடியாது.
  • நான்கு விதமான வரி விதிப்பையும் இணைத்து ஒரே வரியாக 18% ஜிஎஸ்டி வசூலிக்கலாம் என்கிற கருத்து வருவாய் இழப்புக்கு வழிகோலக்கூடும். பல ஆய்வுகளும், 8%, 15%, 30% என்று மூன்று பிரிவாக மாற்றலாம் என்று பரிந்துரைத்திருப்பதும் சாமானியர்களின் பார்வையில் சுமையாகத்தான் இருக்கும்.
  • ஜிஎஸ்டி வருவாயை அதிகரிக்க பெட்ரோலியப் பொருள்கள், மனைவணிகம், மின்சாரம் போன்றவற்றை அதன் வரம்பில் கொண்டுவரலாம். ஆனால், மாநில அரசுகள் அனுமதிக்காது. எப்படியிருந்தாலும், 2024 பொதுத்தேர்தல் வரை மாற்றம் எதுவும் இருக்காது என்பது உறுதி!

நன்றி: தினமணி (10 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories