TNPSC Thervupettagam

வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் பற்றிய புரிதல்

October 23 , 2024 84 days 152 0

வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் பற்றிய புரிதல்

  • சமூக நிறுவனங்கள் எவ்வாறு பொருளாதார வளர்ச்​சி​யை​யும், நாடுகளின் செழுமை​யையும் தீர்மானிக்​கின்றன என்பது பற்றிய ஆய்வு​களுக்காக டாரன் அசெமோக்லு (Daron Acemoglu), சைமன் ஜான்சன் (Simon Johnson), ஜேம்ஸ் ஏ.ராபின்சன் (James A Robinson) ஆகியோ​ருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு வழங்கப்​பட்​டுள்ளது. அசெமோக்​லு​வும், சைமனும் அமெரிக்​காவில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்​நுட்ப நிறுவனத்தில் (MIT) பேராசிரியர்​களாகப் பணிபுரி​கின்​றனர். ராபின்சன் அமெரிக்​காவில் உள்ள சிகாகோ பல்கலைக்​கழகத்தில் பொருளா​தாரப் பேராசிரியராக உள்ளார்.

ஏற்றத்​தாழ்வின் அடிப்​படைக் காரணங்கள்:

  • உலகின் முதல் 20 சதவீதப் பணக்கார நாடுகள், தற்போது ஏழை நாடுகளை​விடச் சுமார் 30 மடங்கு பணக்கார நாடுகளாக உள்ளன. பணக்கார நாடுகளுக்கும் ஏழ்மையான நாடுகளுக்கும் இடையே வருமான இடைவெளி நீடித்து​வரு​கிறது; ஏழ்மையான சில நாடுகள் பணக்கார நாடுகளாக மாறினாலும்கூட, முன்னேறிய நாடுகளின் நிலையை இன்னும் அவை எட்டவில்லை. பொருளாதார வளர்ச்​சியில் உள்ள வேறுபாடு​களை​யும், வளர்ச்சி ஏற்றத்​தாழ்வு​களையும் நிர்ண​யிப்பது என்ன என்பது பேரியல் பொருளா​தா​ரத்தின் (Macro Economics) மையக் கேள்வி​களில் ஒன்று.
  • ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார வளர்ச்​சி​யானது இலக்கியம், தொழில்​நுட்பம், மனித மூலதனம் அல்லது திறன் மேம்பாடு போன்ற மாறிகளைப் (Variable) பரிந்​துரைக்​கிறது. இந்த மாறிகள் அனைத்தும் நெருங்கிய காரணங்களாக இருந்​தா​லும், அடிப்​படைக் காரணங்​களைத் தேடுவது பேரியல் பொருளா​தா​ரத்தில் மிகத் தீவிரமான ஆராய்ச்​சிகளில் ஒன்றாகும்.
  • இங்குதான் அசெமோக்லு ஜான்சன், ராபின்​சனின் பகுப்​பாய்வு தனித்துவம் வாய்ந்​த​தாகக் கருதப்​படு​கிறது. ஏனெனில், அவர்கள் மேலாதிக்கம் சார்ந்த விளக்​கங்​களுக்கு அப்பால் சென்று, வளர்ச்​சியில் தற்போதைய ஏற்றத்​தாழ்வு​களுக்கான அடிப்​படைக் காரணங்​களைக் கண்டறிந்​தனர். பதினாறாம் நூற்றாண்​டிலிருந்து காலனிய​வா​திகள் அறிமுகப்​படுத்திய அல்லது தக்கவைத்​துக்​கொள்ளத் தேர்ந்​தெடுத்த அரசியல், பொருளாதார, சமூக அமைப்புகளே (நிறு​வனங்களே) தற்போதைய வளம் சார்ந்த வேறுபாடு​களுக்குக் காரணம் என்பதை நிரூபித்ததே இவர்களின் நுண்ணறிவும் பங்களிப்பும் ஆகும்.

சுரண்​டப்பட்ட பூர்வி​கர்கள்:

  • முதலில் ‘நிறு​வனங்கள்’ என்ற சொல்லை வரையறுப்​போம். பொருளா​தா​ரத்தில் ‘நிறு​வனங்கள்’ என்பது அரசியல், பொருளா​தாரம், சமூக வாழ்க்கையைக் கட்டமைக்க மனிதர்​களால் உருவாக்​கப்பட்ட கட்டுப்​பாடுகள் என வரையறுக்​கப்​படு​கிறது. அவை முறையான விதிகள் (அரசமைப்புகள், சட்டங்கள், சொத்துரிமை​கள்), முறைசாராக் கட்டுப்​பாடுகள் (சமூக விதிமுறைகள், தடைகள், பழக்கவழக்​கங்கள், மரபுகள், நடத்தை விதிமுறை​கள்). ஐரோப்​பியர்கள் உலகின் பெரும் பகுதி​களைக் காலனிமயப்​படுத்​தி​ய​போது, அன்றைய சமூக, அரசியல் நிறுவனங்​களைப் பிராந்​தி​யத்​துக்கு ஏற்ப வித்தி​யாசமாக மாற்றினர்.
  • சில காலனிகளில் பூர்விக மக்களைச் சுரண்டு​வதும், காலனிய​வா​தி​களுக்குப் பயனளிக்கும் வகையில் இயற்கை வளங்களைப் பயன்படுத்து​வதும் நோக்கங்களாக இருந்தன. மற்ற சந்தர்ப்​பங்​களில், காலனிய​வா​திகள் ஐரோப்​பியக் குடியேறிகளின் நீண்ட கால நலனுக்காக அனைத்​தையும் உள்ளடக்கிய அரசியல், பொருளாதார அமைப்புகளை உருவாக்​கினர்.
  • காலனிகளில் நிறுவப்பட்ட நிறுவனங்​களின் வகையைப் பாதிக்கும் ஒரு முக்கியமான காரணி, காலனிமயப்​படுத்​தப்பட வேண்டிய பகுதியின் மக்கள்தொகை அடர்த்தி. பூர்விக மக்கள் அதிகமாகவும் அடர்த்தி​யாகவும் இருக்கும் இடத்தில், எதிர்ப்பை எதிர்​பார்க்​கலாம். ஆனால் தோற்கடிக்​கப்​பட்​ட​வுடன், காலனிய​வா​திகள் இயற்கை வளங்களைச் சுரண்டு​வதற்​காகப் பூர்விக மக்களைக் கட்டாயப்​படுத்​தலாம். மறுபுறம், பூர்விக மக்கள்தொகை குறைவாக உள்ள இடங்கள் குடியேற்​றக்​காரர்​களுக்குக் குறைந்த எதிர்ப்​பை​யும், குறைந்த உழைப்​பையும் வழங்கிய​தால், அதிகமான ஐரோப்பியக் குடியேற்​றக்​காரர்கள் குறைந்த மக்கள்தொகை கொண்ட இடங்களுக்கே சென்றனர்.
  • காலனிகளில் உருவாக்​கப்பட்ட அரசியல், பொருளாதார நிறுவனங்​களின் வகையைப் பாதித்த முக்கியமான காரணி​களில் இதுவும் ஒன்றாகும். அதிகப் பூர்விக மக்கள்தொகை கொண்ட இடங்களில், காலனிய​வா​திகள் வளம்கு​விப்​புக்குப் பாதை வகுக்கும் அரசியல், சமூக நிறுவனங்களை நிறுவினர். மேலும், வளம்கு​விப்​புக்குப் பாதை வகுக்கும் அவர்களுடைய செயல்​பாடு​களுக்குப் பயனளிக்க, அப்போது இருந்த சமூகப் படிநிலைகளையும் பயன்படுத்​தினர்.
  • இதற்கு நேர்மாறாக, பூர்விக மக்கள்தொகை குறைவாக உள்ள காலனிகளில் (காலனிய​வா​திகள் குடியேறிய காலனிகள் -settler colonies) தங்கள் சொந்தப் பொருளா​தாரச் சுதந்​திரத்தை ஊக்கு​விக்​கும், குடியேற்​றத்தை மேம்படுத்த உதவும் உள்ளடங்கிய பொருளாதார நிறுவனங்களை நிறுவினர். பிரிட்டிஷ் காலனிகளாக இருந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நிறுவப்பட்ட நிறுவனங்​களின் வகைக்​கும், இந்தியாவில் நிறுவப்பட்ட நிறுவனங்​களின் வகைக்கும் உள்ள வித்தி​யாசம் ஒரு குறிப்​பிடத்தக்க உதாரணம்.

வளத்தின் வேறுபாடுகள்:

  • எளிமை​யாகச் சொன்னால், காலனிய நிறுவனங்​களில் உள்ள இந்த ஆரம்பகால வேறுபாடுகளே இன்று நாம் காணும் வளத்தின் பரந்த வேறுபாடு​களுக்கு முக்கியமான காரணம் என்பதுதான் அசெமோக்​லு-ஜான்​சன்​-ராபின்​சனின் அடிப்​படைப் பங்களிப்பு.
  • உதாரணமாக, ஸ்பெயினின் காலனிய ஆட்சிக்குப் பிறகு அமெரிக்கா​வுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையில் பிரிக்​கப்பட்ட நோகேல்ஸ் நகரத்தின் வாழ்க்கை நிலைமை​களில் தற்போதைய வேறுபாடுகளை ஆசிரியர்கள் ஆய்வுசெய்​தனர். அமெரிக்​காவில் நிறுவப்பட்ட முற்போக்கான சமூக, அரசியல், பொருளாதார நிறுவனங்களே (உதாரணமாக, சொத்துரிமை, பொது வாக்குரிமை, தொழிலாளர் உரிமைகள்) மெக்ஸிகன் நோகேல்​ஸைவிட அமெரிக்க நோகேல்ஸின் வளர்ச்​சிக்குக் காரணம் என்பதை அவர்களின் ஆராய்ச்சி நிரூபித்தது.
  • இதேபோன்ற முறையை பிரிட்​டிஷ், பிரெஞ்சு, போர்த்து​கீசியக் குடியேற்​றக்​காரர்கள் உலகம் முழுவதும் பயன்படுத்​தியதாக ஆசிரியர்​களின் ஆராய்ச்சி வெளிப்​படுத்​தியது. சுருக்​கமாக, காலனிய​வா​தி​களால் அறிமுகப்​படுத்​தப்பட்ட வளம்கு​விப்​புக்குப் பாதை வகுக்கும் நிறுவனங்​களின் காரணமாகக் கடந்த காலத்தில் மிகவும் வளமான, அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட காலனிகள் தற்போதைய ஏழை நாடுகளாகும். அதேபோன்று, குடியேற்​றவாசிகள் வாழ்ந்த குறைந்த மக்கள்தொகை கொண்ட காலனிகளில் அவர்கள் அறிமுகப்​படுத்திய முற்போக்கான நிறுவனங்​களின் காரணமாகத் தற்போது அவை பணக்கார நாடுகளாக உள்ளன.
  • மற்றொரு முக்கியமான காரணி - குடியேறிய சமூகங்​களில் ஏற்பட்ட நோய்களின் பரவல் நிறுவன வேறுபாடு​களுக்குப் பங்களித்​துள்ளது என்பதைத் தங்கள் ஆராய்ச்​சியில் வெளிப்​படுத்​தி​யுள்ளனர். கொடிய நோய்களின் பரவலானது அமெரிக்​காவின் வடக்கு, தெற்குப் பகுதி​களுக்கு இடையே பெரிதும் வேறுபடு​கிறது. இறப்புப் புள்ளி​விவரங்கள், பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்கும் ஆப்ரிக்கப் பகுதிகள், ஆப்ரிக்​காவின் தெற்குப் பகுதி​களைக் காட்டிலும் தொற்று நோய்களால் அதிக இறப்பு​களைக் கொண்டிருப்​ப​தாகக் காட்டு​கின்றன.
  • இதேபோல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் குடியேறிய பிரிட்டிஷ் குடியேற்​றங்​களின் இறப்புப் புள்ளி​விவரங்கள், பிரிட்டிஷ் காலனிய ஆட்சி​யின்போது இந்தியாவில், பிற இடங்களில் நிறுவப்பட்ட நிறுவனங்​களின் வகைகளில் உள்ள வேறுபாடுகளை விளக்கு​கின்றன. இந்த ஆராய்ச்​சியின் அடிப்​படை​யில், நிறுவனங்​களின் பரிணாம வளர்ச்சியை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்தனர்.

விடை தேடும் கேள்விகள்:

  • குடியேற்​றக்​காரர்​களால் உருவாக்​கப்பட்ட வளம்கு​விப்​புக்குப் பாதை வகுக்கும் சமூக, அரசியல் நிறுவனங்கள் ஏன் இன்னும் வளர்கின்றன? சீர்திருத்​தங்​களுக்கான சாத்தி​யக்​கூறுகள் இருந்​தாலும் வளம்கு​விப்​புக்குப் பாதை வகுக்கும் நிறுவனங்கள் எவ்வாறு நீண்ட காலமாக நீடிக்​கின்றன? அதே நேரத்​தில், சமூக, அரசியல், பொருளாதார நிறுவனங்கள் மாற்றங்​களுக்கு உள்ளாகின்றன.
  • உதாரணமாக பெரும்​பான்மை​யினரின் அரசியல் உரிமைகள் அவர்களுக்கு வாக்குரிமை வழங்குவதன் மூலம் விரிவாக்​கப்​பட்டன. இத்தகைய மாற்றங்கள் எப்போது, எப்படி நிகழ்​கின்றன என்பன போன்ற கேள்வி​களுக்கு அனுபவரீ​தி​யாகப் பதில் சொல்வது கடினம். மாறாக, இத்தகைய கேள்வி​களுக்கு எதிர்​நிலையை உருவாக்கும் திறன் கொண்ட கோட்பாட்டு மாதிரிகள் தேவை.
  • விளையாட்டுக் கோட்பாட்டின் (Game Theory) பகுப்​பாய்வுக் கருவி​களைப் பயன்படுத்தி, அத்தகைய கேள்வி​களுக்குப் பதிலளிக்க மாதிரிகளை ஆசிரியர்கள் உருவாக்​கினர். இது அவர்களின் மிகவும் புதுமையான பங்களிப்பு. சக்திவாய்ந்த உயரடுக்கு வர்க்கம் தங்களுக்கு அதிகார உரிமையை வழங்கும் அரசியல், சமூகக் கட்டமைப்புகளை மாற்றும் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்பதை இந்தப் பகுப்​பாய்வுக் கருவி​களைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் நிரூபித்​துள்ளனர். வளம்கு​விப்​புக்குப் பாதை வகுக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து நீடிப்​ப​தற்கு இதுவும் முக்கியமான காரணங்​களில் ஒன்றாகும்.
  • இந்தப் பகுப்​பாய்வில் புதிதாக என்ன இருக்​கிறது என்று கேட்கலாம். ஏனெனில், பொருளாதார வளர்ச்சி சார்ந்த மார்க்​சியப் பகுப்​பாய்வின் மையமாக, சமத்து​வமற்ற அதிகார உறவுகளே மையப் பங்கு வகிக்​கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இருப்​பினும், நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்​சி​யாளர்​களின் பகுப்​பாய்வு தனித்து நின்றதற்குக் காரணம், நிறுவனங்​களின் பங்கு, அதிகாரத்​தினுடைய பங்கின் மையத்​தன்மையை ஆதிக்க மரபுவழி பொருளா​தாரக் கோட்பாட்டின் எல்லைக்குள் இருந்து அவர்கள் வெளிப்​படுத்​தியதே.
  • எவ்வாறு இருந்​தாலும் நோபல் பரிசின் அரசியலைத் தாண்டி, இந்தியப் பொருளாதார வளர்ச்​சிக்கும் மேம்பாட்டுக்கும் அவர்களின் பகுப்​பாய்வுக் கட்டமைப்பைப் பயன்படுத்துவது மிகவும் ஆக்கபூர்​வ​மானதாக இருக்​கும். இந்தியப் பொருளா​தா​ரத்தைப் பற்றிய கடினமான உண்மை​களில் ஒன்று இந்தியாவில் உள்ள மாநிலங்​களுக்கு இடையேயான சமத்து​வமற்ற வளர்ச்​சி​யாகும். வளர்ச்சிக் கொள்கை சிந்தனையில் ஆதிக்கம் செலுத்​திவரும் பொருளாதார மரபுவழி, பொருளாதார வளர்ச்​சிக்குத் தொழில்​நுட்பம் (Technology), மனித மூலதனத்தின் (Human capital) பங்கைத் தொடர்ந்து வலியுறுத்து​கிறது.
  • ஆனால், இந்த ஆண்டின் நோபல் பரிசு, இந்த நெருங்கிய காரணி​களைத் தாண்டி, இந்தியாவின் சமத்து​வமற்ற வளர்ச்​சியின் பகுப்​பாய்வில் சாதி, அரசியல் அதிகாரம், பாலின விதிமுறைகள் போன்ற சமூக நிறுவனங்​களின் பங்கை விமர்​சனரீ​தி​யாகப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை ஊக்கு​விக்க வேண்டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories