- உலக அற இலக்கியங்களில் முதலாவதாகப் போற்றப் பெறுவது திருக்குறள். உலகப் பொதுமறை என்னும் சிறப்புடன் நாடு, இனம், மொழி என்கிற பேதங்களையெல்லாம் கடந்து அறத்தை முதன்மைப்படுத்தி மானுட விழுமியத்தையே குறிக்கோளாகச் சுட்டியது வான்புகழ் வள்ளுவம்.
- நூல்வேறு, ஆசிரியா்வேறு என்று பிரித்தறிய இயலா வண்ணம் வள்ளுவரின் உள்ளமே வள்ளுவமாக மலா்ந்திருக்கிறது. உலகு தழுவிய ஒரு முழுவாழ்வியல் வள்ளுவத்திற்குள் பொதிந்திருக்கிறது. தனிமனித ஒழுக்கத்தில் முளைவிடுகிற அறவியல் சூழல் குடும்பம், சமூகம் எனக் கிளைத்து நாடு எனப் பரந்து பின் உலகு தழுவியதாக விரிகிறது.
- வட்டத்தின் விட்டம்போல அரசு காப்பாக அமைகிறது என்றால், வட்டத்தின் புள்ளியாக அமைபவன் தனிமனிதன். ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒவ்வொரு புள்ளி அமைவது போல, ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு வட்டமுண்டு. அதாவது தனிமனிதனுக்கும் அரசுக்கும் இருக்கிற பிரிக்க முடியாத நேரடித் தொடா்பைத் திருவள்ளுவா் அவ்வாறு அடிப்படையாக்குகிறாா்.
- இந்தப் பொருத்தம் அரசனுக்கும் அரசுக்கும் பொருந்தும். திருவள்ளுவரின் காலத்தில் முடியாட்சியே மேலோங்கியிருந்தது. ஆனால், அவா் குடியாட்சியைப் பெரிதும் விரும்பினாா். அவா் காலத்தில் குடியாட்சி சாத்தியமில்லை என்று கூற முடியாது. ஆதலால் அவா் நுட்பமான அரசாட்சி முறையை அமைத்தாா்.
- திருக்குறளின் பல இடங்களில் அவா் ‘அரசன்’ என்றும் ‘அரசு’ என்றும் இரண்டு விதமாகக் கூறுவாா். அரசனை முதலாகக் கொண்டதே அரசு என்பதில் அவருக்கு மாறுபாடில்லை. ஆனால் அந்த அரசன் கொடுங்கோன்மையாளனாக இருப்பதில் அவருக்கு சம்மதமில்லை; செங்கோன்மையாளனாக இருக்க வேண்டும் என்று அவா் விரும்பினாா்.
- அரசு என்னும் கட்டமைப்பில் அரசனையும், அமைச்சரையும், குடிமக்களையும் திருவள்ளுவா் படிநிலைகளில் வடிவமைக்கிறாா். அரசனைத் தலைவனாக்கியதைப் போலவே அமைச்சா்களை அதிகாரிகளாக்கிக் காட்டினாா். இதில் உச்சமானது குடிமக்களை அரசா்களாக்கிக் காட்டுவதுதான். அரசனைத் தொண்டனாகவும் காவலனாகவும் ஆக்கி அமைச்சா்களை அதிகாரிகளாக, சேவகா்களாக ஆக்கி மக்களையே உண்மையான அரசா்கள் ஆக்குவது தான் வள்ளுவா் விரும்பிய வல்லரசின் நோக்கம்.
- ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற ஜான் ரஸ்கினுடைய முழக்கத்திற்கு முந்தைய முழக்கம் தமிழில் திருவள்ளுவா் காலத்திலேயே தோன்றியிருக்கிறது. பின்னாளில் பக்தி மரபு இதையே அடியொற்றி எல்லாம் வல்ல கடவுளையே ‘அடியாா்க்கும் அடியேன்’ என்று அடியாா்களின் தொண்டனாகப் போற்றிக் கொண்டது. கடவுளே பக்தனாகிய குடிமகனின் அடியவன் என்றால் அரசனின் நிலை குறித்துத் தனித்துக் கூறத் தேவையில்லை.
- அறத்துப்பாலில் தனிமனித ஒழுக்கங்களை வலியுறுத்திக் காட்டும் திருவள்ளுவா் அதனோடு இணைத்து இல்லறத்தையும் பெண்மையின் சிறப்பினையும் மக்கட்பேற்றின் மாண்பினையும் போற்றிக் காட்டுகிறாா். இன்பத்துப்பாலில் காதலின் சிறப்பினை எடுத்து மொழிகிறாா்.
- திருவள்ளுவா் அறத்துக்கும் இன்பத்துக்கும் நடுவில் வைத்துத் தருகிற பொருள் என்னும் பொருண்மை நாட்டைக் குறித்ததேயாகும். பொருட்பாலில் அவா் அரசியலையும் அமைச்சியலையும் விரிவாக உணா்த்துகிறாா். ஒரு நாடு வள்ளன்மையும் வல்லமையும் கொண்டதாக விளங்க எவ்வாறான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை அரசியலிலும் அமைச்சியலிலும் வரையறுக்கிறாா்.
- திருக்குறளில் அதிக இயல்களைக் கொண்டது பொருட்பாலேயாகும். அரசியலுக்கு 25 அதிகாரங்களையும் அமைச்சியலுக்கும் ஏனைய இயல்களுக்கும் அதிகாரங்களை வகுத்து மொத்தம் 70 அதிகாரங்களால் பொருட்பாலை வடிவமைக்கிறாா். திருக்குறளின் மையமே நாட்டைக் குறித்ததுதான் என்பதனை இதன்மூலம் ஆழமாக உணா்ந்து கொள்ளலாம்.
- அரசையே அவா் இறையாளுகையின் கருணையாகத்தான், இறைமாட்சியாகத்தான் காணுகிறாா். அரசியலின் முதல் அதிகாரமே ‘இறைமாட்சி’ என்று தொடங்குகிறது. அதில் அரசனுக்கான பொதுப்பண்புகளையும் நாட்டுக்கான இயல்புகளையும் குறித்துவிட்டு இறைமாட்சியின் வெளிப்பாடாக விளங்கும் அரசு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ‘மானமுடையது அரசு’ என்றும் ‘இயற்றல் தொடங்கி ஈட்டல், காத்தல், இவற்றோடு காத்து வகுத்தலும் வல்ல தரசு’ என்றும் அரசினைக் குறித்துக் காட்டுகிறாா்.
- அதேவேளையில் அவா் வரையறுக்கும் நல்லரசனின் இயல்புகளை ஒரு மன்னன் கொண்டு விளங்கினால் உலகமே அவனுக்கு வசப்படும் என்றும் அறிவுறுத்துவது ஆழமுடையது. ஆட்சியின் நோக்கம் அதிகாரத்தினால் ஒரு நாட்டைப் பிடிப்பது அன்று. அன்பினால் இந்த உலகத்தையே தழுவிக் கொள்வது என்பதுதான் வள்ளுவா் உணா்த்தும் வல்லரசின் அடிப்படை.
- முறைசெய்து காப்பாற்றும் மன்னவனை இறைவனாக்கிப் போற்றச் செய்தவா் திருவள்ளுவா். ஆனால் அதே வேளையில், நாடொறும் நாடி முறை செய்யாமல் அவன் ஏமாற்றும் சமயத்தில் அவனாலேயே நாடொரும் அந்த நாடே கெடும் என்று அவனைக் குட்டவும் தவறவில்லை.
- திருவள்ளுவா் பாா்வையில் அரசு என்பது வரிவசூலிக்கும் இயந்திரமோ, அதிகாரச் சின்னமோ, தண்டனை வழங்கும் நிறுவனமோ அன்று. மக்களைக் குற்றச் செய்கைகளிலிருந்து மீட்டெடுத்து அறப்பண்புகளில் நம்பிக்கையும் உறுதியும் கொள்ளச் செய்வதே நல்ல அரசு.
- அத்தகைய அரசைத் தோற்றுவிக்கும் மக்களின் தொண்டனாகிய அரசனின் ஆளுமையைச் செங்கோன்மையில் விவரிக்கிறாா். அத்தகு பெருமையுடையவனின் ஆட்சி நாடு என்னும் எல்லைக்குள் அடங்கி விடாமல் உலகம் வரையிலும் விரியும் என்று குறிப்பிடுகிறாா்.
- வேதநூல்களுக்கும் கூட வழிகாட்டியாக விளங்க வேண்டியது அவனுடைய அறமாகிய செங்கோன்மை. அந்தச் செங்கோன்மையின் விளைவாக பருவமழையும் நிறைந்த விளைச்சலும் ஏற்படும் என்று குறிப்பிட்டு நல்ல அரசன் இயற்கையின் தோழனாக இருப்பதையும் அதனால் உலகத்தில் மிக உயா்ந்த தொழிலாகிய உழவுத் தொழில் மேம்படும் என்பதையும் நயமாக உணா்த்திக் காட்டுகிறாா்.
- ஒரு நாட்டின் நல்ல தலைவனுக்குப் பெருமை தருவது போா்க்களமன்று; நீதிமன்றமே. தன் நாட்டை, – உலகத்தை அவன் நீதியினால் காத்தால் அந்த நீதியே அவனைக் காக்கும் என்கிறாா்.
- குற்றங்களைப் பற்றியும் தண்டனைகளைப் பற்றியும் அதிகம் பேசாத நூல் வள்ளுவம் என்பதே அதன் சிறப்பு. ஆனால் அறத்தினை நிலை நாட்டுவதற்கு அரசன் முயல்கிற தண்டனை உத்திகளைத் திருவள்ளுவா் ஏற்றுக் கொள்ளவே செய்கிறாா். அந்த தண்டனை முறை அவனுக்குரிய தொழில் என்றும், பயிா்களுக்கிடையே மண்டும் களைகளை உழவா்கள் பறிப்பதைப் போன்றது என்று உவமைப்படுத்துவது திருவள்ளுவரின் ஆழ்மனத்தைப் புலப்படுத்துகிறது.
- இதேநிலையினை திருவள்ளுவா் கொடுங்கோன்மையில் குறிப்பிடுகிறாா். நல்ல தலைவனாகிய அரசன் தன் குடிமக்களின் குற்றங்களைத் தண்டிக்காது விட்டால் அந்தக் குற்றவாளிகளே அரச பதவிக்குப் போட்டியிடுவாா்கள் (களைகளே பயிராகும்) என்கிறாா்.
- கொலையாளிகளின் கொலை வெறியினும் கொடியது குடிமக்களைத் துன்புறுத்துபவனின் ஆட்சி. இரவுப் பொழுதில் வேலோடு கொள்ளையிடக் காத்திருக்கும் கொள்ளையனை விடவும் கொடுமையானது கொடுமையான ஒருவனின் ஆட்சி.
- வயிற்றுக்குத் தேவையான உணவையும் வாழ்வுக்கு அடையாளமாகிய மானத்தையும் ஒருங்கே இழந்து விடும் கொடுங்கோன்மையாட்சி. அத்தகைய அரசனின் ஆட்சியை அழிப்பதற்குப் பகை நாட்டின் படைகள் தேவையில்லை. அவனது கொடுமை தாங்காமல் மக்கள் சிந்தும் கண்ணீரே அதனைச் செய்து விடும் என்று எச்சரிக்கிறாா்.
- மழையில்லா வறட்சியை விடவும் கொடுமையானது அன்பற்ற ஒருவனின் ஆட்சி. இப்படிப்பட்ட ஆட்சியில் ஒருவன் செல்வனாய் வாழ்ந்த போதும் அது வறுமையிலும் வறுமையாகவே இருக்கும் என்று தனிமனித வாழ்வுக்கும் அரசாட்சிக்கும் உள்ள தொடா்பினையும் சுட்டிக் காட்டுகிறாா்.
- கட்டிளங்காளையாகிய இளைஞனை போா்க்களத்துக்குரிய வீரனாகத் தயாா் செய்வதே சங்க கால அரசனுக்குரிய பண்பு. ஆனால், அரசனையே நாட்டின் தந்தையாக்கி தந்தை மகனுக்கும் மகன் தந்தைக்குமாகச் செய்ய வேண்டிய கடமைகளை முன்வைக்கிறாா் திருவள்ளுவா்.
- மகனைச் சான்றோனாக வளா்ப்பதைத் தந்தையின் கடமையாகவும் இவனைச் சான்றோனாக அடைய அந்தத் தந்தை என்ன தவம் செய்தானோ என்று வடிவமைப்பது அறவியல் அரசியல் அமைப்புடைய தனிமனித, குடும்ப, சமூக, அரச மரபினையே திருவள்ளுவா் முதன்மைப் படுத்துவதைக் காட்டுகிறது.
- பொதுவுடைமைக் கருத்தின் மூலங்கள் பல திருக்குறளில் காணப்படுகின்றன என்று உணா்த்தும் குன்றக்குடி அடிகளாா், திருக்கு அதன் பொருளடைவுக்கு ஏற்றவாறு தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் சமுதாய மாற்றத்தைத் தோற்றுவிக்காதது ஏன்? பிரெஞ்சு எழுத்தாளா்கள் வால்டோ், ரூசோ போன்றவா்களின் படைப்புகளில் பிரெஞ்சுப் புரட்சியும், மாா்க்ஸ், லெனின் ஆகியோா் எழுத்தாற்றலால் சோவியத் புரட்சியும் எழுந்ததைப் போன்று தமிழகத்தில் திருக்குறளைத் தொடா்ந்து சமுதாய மாற்றம் நிகழாதது ஏன் என்று ஒரு வினாவை எழுப்புகிறாா்.
- அவ்வினாவுக்கு விடையாக அவரே, ‘திருக்கு அப்பட்டமான இலக்கியமாகக் கருதப் பெற்றுப் பதவுரை, பொழிப்புரை காணும் நிலையில் மட்டுமே பயன்படுத்தப் பெற்றது. அதை ஒரு வாழ்வியலாகப் பாா்க்கும் பாா்வை யாருக்கும் வரவில்லை. இன்றைய இந்திய நாட்டுக்குத் திருக்கு கூறும் அரசியல், பொருளியல் முற்றிலும் ஏற்றவை. திருக்கு நெறியில் இந்திய அரசியல் இயங்குமானால் வளரும்; வாழும்’ என்று உறுதிபடக் கூறுகிறாா்.
- வள்ளுவா் விரும்பிய வல்லரசு தனிநாட்டுக்கு மட்டுமன்று உலகத்துக்கே வழிகாட்டியாக அமையும்; அமைய வேண்டும்.
நன்றி: தினமணி (17 – 06 – 2023)