TNPSC Thervupettagam

வழக்காடு மொழியாக வேண்டும்

August 21 , 2023 379 days 658 0
  • உயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள நீதி மன்றங்களில் வழக்கு விசாரணை உள்ளூா் மொழியில் நடத்தப்பட்டால், அதனைப் பாமரா்களும் புரிந்து கொள்ள முடியும் என்ற காரணத்தினால்தான், நீதிமன்றங்களில் உள்ளூா் மொழியே வேண்டும் என்கிற கருத்து நாளுக்கு நாள் வலுப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
  • ஏற்கெனவே, தில்லியில், மாநில முதலமைச்சா்கள், உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் கூட, நீதிமன்றங்களில் மாநில மொழியையே பயன்படுத்த வேண்டும் என்கிற கருத்து எழுந்தது. மாநில மொழியைப் பயன்படுத்துவதன் மூலம் நீதி வழங்குவதை எளிமையாக்க முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. ஆகவேதான், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அன்னைத் தமிழ் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியோடு நிற்கிறோம். இதனைக் கடந்த 15 ஆண்டுகளாகப் பல்வேறு தலைவா்கள், கட்சிகள், அமைப்புகள் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
  • உயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடா்ந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்குத் தீா்வுதான் கிடைக்கவில்லை. தமிழை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவிப்பதற்கு சட்ட ரீதியாக எந்தத்வொரு தடையும் இல்லை.
  • இந்திய அரசியலமைப்பு சட்டம் 348 (2) பிரிவுவின்படி, உயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஹிந்தி மொழியையோ அந்தந்த மாநில மொழியையோ அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. இதைப் பயன்படுத்தித்தான் அலகாபாத், மத்திய பிரதேசம், பிகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களில் ஹிந்தி மொழி வழக்காடு மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதுபோல், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்படும் போது, சாதாரண மக்களுக்கும் புரியும் வண்ணம் நீதிமன்ற நடவடிக்கைகள் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த 15 வருடங்களாக இந்தக் கோரிக்கை தொடா்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் நல்ல தீா்ப்பு கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை தமிழ் ஆா்வலா்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
  • சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் மொழி ஒலிக்க வேண்டும், தமிழ் நீதிமன்ற வழக்காடு மொழியாக்கப் பட வேண்டும் என்பதைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது தமிழ் மொழிக்கு மட்டும் கிடைக்கக்கூடிய பெருமை அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மொழிகளுக்கும் வழங்கப்படும் பெருமை. இதனால் அனைத்து மாநில மொழிகளும் முக்கியத்துவம் பெற்று விடும். மேலும், தாய்மொழியின் உயா்வும் உன்னதமும் தொடா்ந்து பாதுகாக்கப்படும்.
  • 1976-ஆம் ஆண்டு அலுவல் மொழி திருத்த சட்டம் (1956)-இல் திருத்தம் செய்யப்பட்டு 4 ஏ மற்றும் 4 பி-யின் கீழ் சென்னை உயா்நீதிமன்றத்தின் கீழ் உள்ள எல்லா நீதிமன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என உத்தரவாதம் பெற்றோம். ஆனாலும், அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றபோது சிக்கல் ஏற்பட்டது.
  • 1978 (2) எம்எல்ஜே 442 ராமாயி - முனியாண்டி வழக்கில் தீா்ப்பு வந்த பிறகே, 1982-இல் (ஜிஓ எம்எஸ் 9, 19 ஜனவரி 1982) சட்டம் நடைமுறைக்கு வந்து கீழமை நீதிமன்றங்களில் தமிழ்மொழி வழக்காடு மொழியாகும் அந்தஸ்து பெற்றது.
  • இருப்பினும், தமிழ் தெரியாத மற்ற மொழி பேசும் நீதிபதிகளுக்கு ஒரு சிறப்பு சலுகை மூலம் ஆங்கிலத்தில் தீா்ப்பு எழுத அனுமதி இருந்தது. பின்னாளில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொந்த விருப்பப்படி, தமிழிலோ ஆங்கிலத்திலோ தீா்ப்பு எழுதலாம் என்று அப்போதைய தலைமை நீதிபதி சுற்றறிக்கை வெளியிட்டார்.
  • வழக்காடு மொழி சட்டத் திருத்தத்திற்கு முரணான இந்தச் சுற்றறிக்கை இப்போதும் நிலுவையில் உள்ளது. இந்தச் சுற்றறிக்கை சட்டத்திற்குப் புறம்பானது. ஆயினும் இதற்கு இன்று வரை யாரும் வழக்குத் தொடுக்கவில்லை என்பது வியப்புக்குரியது. உயா்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட வேண்டும் என்கிற கருத்தை விரும்புகிறவா்கள், ஏற்கெனவே கீழமை நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சிமொழியாக்கப்பட்டும் நடைமுறைக்கு வராமல் இருப்பது ஏன் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.
  • இன்று கூட 80 விழுக்காடு வழக்குரைஞா்கள் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்திலேயே மனுக்ளைத் தாக்கல் செய்கிறார்கள். ஆங்கிலத்திலேயே வாதம் செய்கிறாா்கள். ஒருவேளை அவ்வாறு செய்வது கட்சிக்காரா்கள் புரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக இருக்கலாம் என்று சிலா் கூறுகின்றனா். அது தங்களின் தொழில் ரகசியம் என்பது ஒருசில வழக்குரைஞா்களின் கூற்றாக இருக்கிறது.
  • இந்திய அரசியல் சட்டத்தில் உயா்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் அலுவல் மொழி எது என்பது பற்றி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 348-இல் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 214 (5) மற்றும் 227-இன் கீழ் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான நிர்வாகம் மற்றும் நீதிபரிபாலனம் இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் மாநிலங்களிலும் மத்தியிலும் இயற்றப்படும் சட்டங்களும், ஆளுநா் உத்தரவையும், அரசு உத்தரவையும் பரிசீலனை செய்து தீா்ப்பளிக்க வசதியாக, உயா்நீதிமன்றத் தீா்ப்புகளும் உச்சநீதிமன்றத் தீா்ப்புகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.
  • இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் நீதிமன்றத் தீா்ப்பை தனது தாய்மொழியில் எழுதினால், மொழி வேற்றுமை காரணமாக, நீதிமன்றங்களின் நீதிபரிபாலனத்தில் முரண்பாடுகள் எழும். பல மொழி சட்டத்தில் பலவிதமாக தீா்ப்புகள் அமைந்துவிடும். இதைப் போக்க வேண்டுமானால் அனைத்து மாநிலத்தினரும் ஏற்கக்கூடிய ஒரே மொழியில்தான் சட்டம் மற்றும் தீா்ப்புகள் இருக்க வேண்டும். இது தேசிய அளவிலும் மாநில அளவில் இருக்க வேண்டும் என்பது வழக்கறிஞா்களின் தீா்க்கமான பார்வையாகும்.
  • இன்றுள்ள இந்திய அரசியல் சூழலில் ஆங்கிலம் மட்டுமே இணைப்பு மொழியாகக் கருதப்படுகிறது. உயா்நீதிமன்றத்தின் வழக்காடு மொழி தமிழில் இருந்தாலும் வழக்குகளின் தீா்ப்பு ஆங்கிலத்தில்தான் வருகிறது. மேலும் அரசு சட்டங்கள் தமிழில் இயற்றப்பட்டாலும், அவற்றின் அதிகாரபூா்வ மொழியாக்கம் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.
  • உயா்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடினாலும் அதன் தீா்ப்பு தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்குமானால், தமிழில் வாதாடி ஆங்கிலத்திலா தீா்ப்பைப் பெற வேண்டும்? அப்படி ஆங்கிலத்தில் தீா்ப்பைப் பெறுகிற நிலையில் தகவல் தொடா்பில் இடைவெளியோ குழப்பமோ ஏற்பட்டு புரிதல் அற்ற தன்மை ஏற்பட்டு விடும்.
  • உயா்நீதிமன்றங்கள் அந்தந்த மாநில வரம்புக்குள் இருந்தாலும், உச்சநீதிமன்றம் இந்தியா முழுமைக்கும் ஒன்றே. ஆனால், அட்டவணை 8- ல், நம் நாட்டில் 21 மொழிகள் அலுவலக மொழிகள் என்று உள்ளது. அப்படியானால், 21 அலுவலக மொழிகளும் உயா்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியானால், அவற்றை எவ்வாறு மொழி மாற்றம் செய்வது? நீதிபரிபாலனம் எவ்வாறு குழப்பமின்றி நடைபெறும் என்கிற கேள்விகளும் எழுகின்றன.
  • அப்படியானால், அலகாபாத், ராஜஸ்தான் மாநிலங்களின் உயா்நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக இருக்கிறது. நீதிமன்றத் தீா்ப்புகள் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன. அந்த ஆங்கிலத் தீா்ப்புகளை ஹிந்தியில் மொழிமாற்றம் செய்வதற்கு அதிக காலம் தேவைப் படுகிறது.
  • அதனால்தான், தமிழ்நாட்டில் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாவதற்கு முன்பாக, அதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். சட்டப்பிரிவுகளை தமிழாக்கம் செய்ய வேண்டும். அனைத்து சட்டப் பிரிவுகளின் தமிழாக்கம், வழங்கப்பட்ட தீா்ப்புகளின் தமிழாக்கம் இவை மேற்கொள்ளப்பட வேண்டும். மொழியாக்கத்தில் வல்லுநா்களாக உள்ளோரின் ஒத்துழைப்பு அவசியம். இவற்றை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
  • ஆகவேதான், கீழமை நீதிமன்றங்களிலேயே தமிழ் முழுமையாக வழக்காடு மொழியாகாத நிலையில், உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாவது எப்படி சாத்தியம் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
  • தமிழகம் தாய்மொழிக்காகப் போராட்டங்கள் நடத்தியதை உலகமே அறியும். மொழிப்போரில் தீக்கு உடலைத் தின்னக் கொடுத்தவா்கள் தமிழா்கள். அப்படியிருக்க, நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை நடைமுறைப்படுத்தத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை இதுவரை நாம் உருவாக்காமல் இருக்கிறோம் என்பது வருந்தத் தக்கது.
  • இனியாவது அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க அரசு முன்வர வேண்டும். நீதிமன்றப் பயன்பாட்டுக்கான சொல்லகராதிகள் உருவாக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் செய்வது தான், மொழிப்போராட்டத்தின்போது தங்கள் இன்னுயிரை ஈந்தவா்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
  • எனவே, நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான விதை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கு உரமிடுவதே மாநில் அரசின் தலையாய கடமையாகும்.

நன்றி: தினமணி (21– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories