TNPSC Thervupettagam

வழக்குகள் தேங்காமல் இருக்க...

June 6 , 2019 2054 days 1651 0
  • நாட்டின் மிகப் பெரிய பிரச்னைகளை எல்லாம் அலசி ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள் பற்றிய புரிதல் பொதுமக்களில் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.  பல நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கும், நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்குரைஞர்களுக்கும், வழக்குகளில் தொடர் புடைய வாதி மற்றும் பிரதிவாதிகளுக்கும் தெரிந்த பல விவரங்கள், மற்றவர்கள் யாருக்கும் தெரியாது.
நீதிமன்றங்கள் 
  • இந்த விவரங்களின் மையமான பிரச்னை நீதிமன்றங்களில் தேங்கி நின்று, வழக்குகளில் தொடர்புள்ளவர்களைப் பாதிக்கும் தாமதங்களே.  இவற்றுக்கான காரணம் என்ன, அதைத் தீர்ப்பது எப்படி என்ற விவரங்களை நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
  • 2011-ஆம் ஆண்டில் நம் நாட்டின் நீதிமன்றங்களில் தேங்கி நிற்கும் வழக்குகள் பற்றிய கணக்கைப் பார்க்கலாம்.  உச்சநீதிமன்றத்தில் 56,383 வழக்குகளும், 21 உயர்நீதிமன்றங்களில் 42,17,903 வழக்குகளும் அந்த ஆண்டில் தேங்கியுள்ளன.  அவற்றைவிடவும், மக்களின் நேரடி பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான கீழ்நிலை நீதிமன்றங்களில் இரண்டு கோடியே 79 லட்சத்து 53 ஆயிரத்து 70 வழக்குகளும் தீர்ப்பிற்காகக் காத்திருக்கின்றன எனக் கண்டறியப்பட்டது.
  • நம் நாட்டின் நீதிமன்றங்களில் வழக்குகளை முடித்து வைப்பதற்கு நிறைய காலதாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதைப் பற்றி தனது கருத்துகளை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் வெளியிட்டுள்ளார். தாமதமாக வழக்குகள் நடைபெறுவதற்குக்  காரணம் நீதிபதிகளா அல்லது வழக்குரைஞர்களா என்ற விவாதத்தை முன்னெடுத்து தனது சுய அனுபவத்தை விவரித்துள்ளார் அந்த நீதிபதி.
நீதிமன்ற உத்தரவு
  • உத்தரப் பிரதேச மாநிலத்தில் வழக்குகளின் தாமதத்தைத் தவிர்க்க, அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.  ஒரு கீழ்நிலை நீதிமன்றத்தில், ஒரு நேரத்தில் 300 வழக்குகளுக்கு மேல் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது என்பதே அந்த உத்தரவு.
  • அந்த உத்தரவைப் பிறப்பித்த பின், கான்பூர் நகரின் சி.ஜே.எம். எனப்படும் நீதிபதி, உயர்நீதிமன்ற நீதிபதியை அலாகாபாத் நகரில் சந்தித்து அவரது நீதிமன்றத்தில் 30,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
  • அதைப் போலவே, காசியாபாத் நகரில் சி.ஜே.எம். தனது நீதிமன்றத்தில் 21,000 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறியுள்ளார். புலாந்த் சஹார் என்ற நகரின் சி.ஜே.எம். நீதிமன்றத்தில் 25,000 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அலாகாபாத் உயர்நீதிமன்றம் மற்றொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
  • அதன்படி, செஷன்ஸ் நீதிபதி ஒருவர், ஒரு சமயத்தில் 75 செஷன்ஸ் விசாரணைகள்தான் நடத்த வேண்டும்.  ஆனால், புலாசந்த் சாஹர் நகரின் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 1,600 விசாரணைகள் நிலுவையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 349 வழக்குகளும், மதுரை உயர்நீதிமன்றத்தில் 86 ஆயிரத்து 41 வழக்குகளும் நிலுவையில் இருந்தன.  கீழ்நிலை நீதிமன்றங்களில் 10 லட்சத்து 94 ஆயிரத்து 897 வழக்குகள் நிலுவையிலிருந்தன.
  • தமிழகத்தில் நீதிமன்றங்களுக்குத் தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் தமிழக அரசு செய்து தர நிதிநிலை அறிக்கையில்ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும், வழக்குகளின் தேக்கம் அதிகரித்ததே அல்லாமல் குறையவே இல்லை.
நிலுவையில் உள்ளவை
  • மேலே கூறிய இந்தக் கணக்கீட்டின்படி, இந்திய நீதிமன்றங்களில் சுமக்க முடியாத அளவு "எடை'கள் (நிலுவையில் உள்ள வழக்குகள்) உள்ளன.  ஒரு மனிதன் 100 கிலோ எடையைத்தான் சுமக்க முடியும் என்று இருக்கும் நிலையில், அவனது தலையில் ஒரு யானையை வைத்தால் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது.  அவன் கீழே சரிந்து விழுந்து விடுவான் என்பது போலவே, இந்திய நீதிமன்றங்களும் கீழே விழுந்து கிடக்கும் நிலைமை.
  • 1994-ஆம் ஆண்டில் வினோத்குமார், அவரது உறவினர் அசோக்குமார் மற்றும் அவர்களது கார் டிரைவர் முக்தியார்சிங் ஆகிய மூவரும் வடநாட்டின் சந்திகா நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  இதற்குக் காரணம், பஞ்சாப் மாநிலத்தின் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. சைனியின் தனிப்பட்ட விரோதம் எனக் கூறி, வினோத் குமாரின் தாயார் அமர் கௌர்,  தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு 24 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கிடையில், 10 ஆண்டுகளாக மூளை பாதிப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபடி அந்த அம்மையார் வழக்கை நடத்தியுள்ளார். 2011-ஆம் ஆண்டு மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி, தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு தந்தியை அனுப்பி, தனது வழக்கை அவசரகதியில் நடத்தி முடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
  • ஆனால், அதுபடி நடக்காத நிலைமையில், 2017-ஆம் ஆண்டு 100-ஆவது வயதில் மரணமடைந்தார்.  இந்த வழக்கு 24 ஆண்டுகள் நிலுவையிலிருந்த நிலையில், வழக்கைத் தொடர்ந்தவர் மரணமடைந்தது குறிப்பிடத்தகுந்தது. இன்றைய நிலைமையில், நம் நாட்டின் நீதிமன்றங்களில் சுமார் 3 கோடியே 30 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.  வேறு எந்தப் புதிய வழக்குகளும் நீதிமன்றங்களில் பதியப்படாமல் இருந்தாலும், இந்த நிலுவையிலுள்ள எல்லா வழக்குகளையும் முடிக்க சுமார் 360 ஆண்டுகள் தேவைப்படலாம்.   இந்த நிலமையில், நீதிபதிகளைக் குறை கூற முடியாது.  இந்தப் பிரச்னையைத் தீர்க்க சில அடிப்படை நடவடிக்கைகளை இந்திய நாடாளுமன்றம்தான் எடுத்தாக வேண்டும்.
  • 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் நீதிமன்றங்களும் இதே நிலைமையில்தான் இருந்தன.
  • அந்த நாட்டில் அதைச் சீராக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாற்று தீர்ப்பு நடவடிக்கைகள் என்று அழைக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளின்படி, "ஆர்பிட்ரேஷன்' எனப்படும் முறையில் இரு வழக்காடுபவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதும், அவர்களுக்குள் சமாதானம் செய்து வைக்கும் "கன்சிலியேஷன்'  செய்யப்படுவதும், "மீடியேஷன்' எனப்படும் நல்ல எண்ணங்களை உருவாக்குவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன.
  • இந்த வழக்குகளைப் பிரித்தெடுப்பதில் சரியான கவனம் செலுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதால், இன்றைய நிலைமையில் அமெரிக்காவின் நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் 7 சதவீத வழக்குகளே நீதிமன்றங்களில் வழக்காடப்பட்டு, முடிவு செய்யப்படுகின்றன.  மற்றவை மாற்று தீர்ப்பு நடவடிக்கைகளின் கீழ் விசாரிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகின்றன.
அமெரிக்காவில்
  • அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் ஆண்டுக்கு 5,000 முதல் 6,000 வழக்குகளே முறையிடப்பட்டாலும், 100 முதல் 150 வழக்குகளே அனுமதிக்கப்படுகின்றன; மற்றவை வாதங்கள் எதுவும் நடைபெறாமல் தள்ளுபடி செய்யப்படுகின்றன. அமெரிக்காவின் தேசிய உச்சநீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் உள்ளனர். அவர்களில் 4 பேர் ஒரு வழக்கை அனுமதித்து எடுத்துக்  கொண்டால்தான், அந்த வழக்கில் வாதங்கள் நடைபெறும்.  அல்லது அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.
  • அந்நாட்டில், மாநிலங்களில் உள்ள உச்ச நீதிமன்றங்களில்தான் கீழ் நீதிமன்றங்களிலிருந்து மேல் முறையீட்டு வழக்குகள் வரும்.  தேசிய உச்சநீதிமன்றத்தில், நாட்டின்
  • முக்கியமான அம்சத்தைப் பற்றிய வழக்குகள், பொது நன்மைகளைப் பாதிக்கும் தேசியத்தன்மை கொண்ட வழக்குகள் மற்றும் கீழ் உயர்நீதிமன்றங்களில் சட்ட விரோதமான முடிவுகள் ஆகியனஎடுத்துக் கொள்ளப்படும்.
  • இதுபோன்ற ஒரு கட்டமைப்பு நமது நாட்டிற்கும் அவசரத் தேவை என ஓய்வுபெற்ற பல உச்சநீதிமன்ற நீதிபதிகளே கருத்துகளை வெளியிடுகின்றனர். இந்திய அரசியல் சட்டத்தின் 136-ஆம் பிரிவின்படி, நமது உச்சநீதிமன்றம் தேவைப்படும்போது தவறான கீழ்நிலை நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தலையிட்டு வழக்குகளை நடத்தலாம். ஆனால், எல்லா உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை எதிர்த்து மேல் முறையீடுகளைச் செய்யும் வழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டது எனவும் இவர்களில் சிலர் கூறியுள்ளனர்.
  • இந்தப் பிரச்னையை இந்திய நாடாளுமன்றமே முடிவுக்குக் கொண்டு வர முடியும். மத்திய அரசு உடனடியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும்.  அதில், உச்சநீதிமன்ற நீதிபதி தலைவராகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய சட்ட அமைச்சர், சில மாநிலங்களின் மூத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அட்டார்னி ஜெனரல்,  மூத்த வழக்குரைஞர்கள் பலர் உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும்.  இவர்களின் கருத்துகளை உள்ளடக்கிய ஓர் அறிக்கையை நாடாளுமன்றம் விவாதித்து, 136-ஆம் பிரிவினை மாற்றி அமைக்கும் வகையில் திருத்தி அமைத்துச் சரிசெய்ய வேண்டும் என்பது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்து.
சீர்திருத்தங்கள்
  • இந்தச் சீர்திருத்தங்களை நாம் செய்தால், நம் நாட்டிலும், வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கி மக்களை பாதிப்படையச் செய்யாமல் இருக்கும் என்பது திட்டவட்டமான ஒரு நிகழ்வாகிவிடும்.  நமது புதிய மத்திய அரசு இதை உடனடியாகக் கையிலெடுத்தால் நல்லது.
  • தாமதப்படுத்தப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதி என்னும் உயர் மொழி கவனிக்கத்தக்கது.

நன்றி: தினமணி (06-06-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories