TNPSC Thervupettagam

வழிகாட்டுகிறது கலிங்கம்!

May 16 , 2019 2042 days 1336 0
  • அசோகனுக்கு அறிவுரை வழங்கியதிலிருந்தே கலிங்கத்தின் பெருமை கால வரலாற்றில் நிலைத்து விட்டது. கொடுங்கோலனாகவும் போர் வெறியனாகவும் அறியப்பட்ட அசோகனை மனிதனாக்க எண்ணற்ற கலிங்கர்கள் உயிர்துறக்க வேண்டியதாயிற்று. யோகத்திலும் யாகத்திலும் கூடப் பெற முடியாத ஞானத்தை அசோகச் சக்கரவர்த்தி கலிங்கத்துப் போர்க்களத்தில்தான் பெற்றுக்கொண்டான்.
கலிங்கம்
  • இதிகாச காலத்திலிருந்தே கலிங்கம் பெயர் பெற்று விளங்கியிருக்கிறது. துரியோதனின் மனைவியாகிய பானுமதி கலிங்க நாட்டைச் சேர்ந்தவள். குருúக்ஷத்ரப் போரில் கலிங்கர்கள் கெளரவர்களுக்காகப் போரிட்டிருக்கிறார்கள். என்றாலும், அவர்கள் போர் வீரர்கள் மட்டுமல்லர், கடின உழைப்பாளிகள் என்பதையும் அறிந்து கொள்ளலாம். கலிங்கத்தோடு தமிழருக்கும் தொடர்பு போர் வழியே நிகழ்ந்திருக்கிறது. பரணி என்னும் இலக்கியம், கலிங்கத்தின் மீது சோழன் மேற்கொண்ட படையெடுப்பு குறித்தும் போர்க்களத்துக் கொடுமைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறது.
  • இன்றைய காலத்தில் ஒடிஸா என்று பெயர் பெற்று மாநிலமாக விளங்கித் திகழ்வதுதான் அந்தப் பழைய கலிங்கம். போர்த் தொல்லைகள் ஓய்ந்துவிட்டாலும், அடிக்கடி போராட்டத்துக்கு வழிவகுக்கும் இயற்கைப் பேரிடர்களின் தாக்கத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை.
வேளாண்மை
  • பல மொழிகளும் பல சமயங்களும் ஒட்டி உறவாடுகிற ஒடிஸாவில் வேளாண்மைதான் முதன்மைத் தொழில். இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகமான பாரதீப் ஒடிஸாவில்தான் அமைந்துள்ளது. கலிங்கமாக இருந்த காலத்திலேயே கடற்படையில் கோலோச்சி இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியத்நாம், ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணித்து வணிகத்திலும் சிறந்திருக்கிறார்கள் ஒடிஸா மாநிலத்தவர்கள். இயற்கைப் பேரிடர்களையும் எதிர்கொள்ளக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
புயல்கள்
  • உலக அளவில் ஆண்டுதோறும் சுமார் 90 ஆபத்தான புயல்கள் ஏற்படுகின்றன. அவற்றில் 7% புயல்கள் வங்காள விரிகுடாவிலேயே தோன்றுகின்றன. வங்காள விரிகுடாவில் ஏற்படுகிற இயற்கைச் சீற்றங்கள் பெரும்பாலும் ஒடிஸாவையே குறிவைக்கின்றன. கடந்த 1891-2016 ஆகிய இடைப்பட்ட 125 ஆண்டுகளில் ஏற்பட்ட 500 புயல்களில், 107 புயல்கள் ஒடிஸாவைப் பதம் பார்த்திருக்கின்றன. இதனால் பெரும் பேரழிவும் உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன என்று புவனேசுவரத்திலிருந்து செயல்படும் இந்தியத் தொழில்நுட்பவியல் பயிலகத்தின் புவி பெருங்கடல் பருவநிலைத் துறைப் பேராசிரியர் உமா சரண் மொஹந்தி தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
புள்ளிவிவரம்  
  • 1999-ஆம் ஆண்டு ஒடிஸாவைத் தாக்கிய புயல்தான் இந்தியாவில் ஏற்பட்ட புயல்களிலேயே கொடுமையான பெரும் புயல். சுமார் 10,000-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி கொண்ட புயல். 1866-ஆம் ஆண்டு பஞ்சத்துக்கு அடுத்து மிகப் பெரிய உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய புயல். கலிங்கம் அப்போது ஆட்டம் கண்டுதான் போனது. இருந்தும், தனது தளராத உழைப்பினால் மீண்டது. ஆனால், இத்தகைய இயற்கைச் சீற்றங்களின் மூலமாகப் பாடம் கற்றுக் கொண்ட ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தற்போது கடந்துபோன பானி புயலின் மூலமாக அந்தப் பேரிடரைச் சாதனையாகவும் மாற்றிக் காட்டியிருக்கிறார்கள்.
  • பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாகச் செய்யப்பட்டன என்றாலும் இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்வது என்பது அத்தனை எளிதானதா? அதைத்தான் எளிமையாக ஏற்றுச் சாதனையாக்கியிருக்கிறது ஒடிஸா. வரப்போகும் சூழலின் அபாயத்தைப் புரிந்து கொண்டு ஏற்கெனவே பெற்ற அனுபவத்தின் வாயிலாக பத்து லட்சத்துக்கும் மேலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எந்த நேரமும் அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலமாகத் தகவல்கள் பறந்து கொண்டிருந்தன. சுமார் 200 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அதற்கு ஏற்றவாறு பாதுகாப்புப் பணிகள் முன்கூட்டியே அதிவிரைவாகச் செயல்படுத்தப்பட்டன.
முன் எச்சரிக்கை
  • நிவாரணப் பொருள்கள், மருந்துத் தேவைகள், முதலுதவி மற்றும் உயிர் காப்பு அவசர உதவிகள் உள்ளிட்ட அனைத்தும் புயல் தாக்கும் பகுதிகளுக்குத் தேவையான அளவு பகிரப்பட்டது. மே 3-ஆம் தேதியன்று ஒடிஸாவின் கரையைப் புயல் தொட்டபோது பெருஞ்சூறைக் காற்று, இடி, மின்னல், கனமழை என்று துவம்சம் செய்யத் தொடங்கியது.
  • புயல் தாக்கிய பிறகு மின்சாரம், தொலைதொடர்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்ய அனைத்து மாநிலங்களிலிருந்தும் உதவிக்குக் கரங்கள் நீள்கின்றன. 7,000-க்கும் அதிகமான பல மாநிலங்களைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாகப் போராடி மின்தடங்களைச் சீரமைத்து வருகின்றனர். இயற்கைக்கு முன்னால் எதுவும் பெரிதில்லை. ஆனாலும், எதிர்கால வாழ்க்கையை நோக்கிப் போராடத் துணிந்து நிற்கிற மனிதர்களின் தன்னம்பிக்கையின் முன்னால் சீற்றத்தைக் காட்டிப் புரட்டிப் போட்டாலும் பானி புயல் பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை.
  • ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் மன உறுதியைக் குலைக்க முடியவில்லை. இந்த அற்புதத்தை உலகமே வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மிகச் சிறந்த சாதனையாக ஐக்கிய நாடுகள் சபையும் பாராட்டிப் போற்றியிருக்கிறது.
  • இந்தியாவின் ஒரு சாதாரண மாநிலமாக விளங்கும் பண்டைய கலிங்கம் என்னும் ஒடிஸா மாநில மக்கள் எதிர்கொண்டிருக்கும் சோதனையான இந்தச் சாதனை, உலகத்துக்கே சரியான வழிகாட்டுதலாகும். ஒடிஸா மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பை அளிப்பதுடன், இந்த முன்னெச்சரிக்கைத் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றிப் பேரிடர்களைத் தவிர்க்கலாமே!

நன்றி: தினமணி(16-05-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories