- தமிழகத்தின் மொத்த பரப்பளவில் 20.31 சதவீத அளவுக்குக் காடுகள் அமைந்துள்ளன. கடந்த 2021-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தரவுகளின்படி, தமிழகத்தின் 26,419 சதுர கி.மீ. பரப்பளவிலான காடுகள் பலதரப்பட்ட உயிரினங்களுக்கு வாழ்விடங்களாக அமைந்துள்ளன. முக்கியமாக, யானை, சிறுத்தை, புலி உள்ளிட்டவற்றுக்குத் தமிழகக் காடுகள் புகலிடம் அளிக்கின்றன.
- கடந்த 2017-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் உள்ள 26 வனக் கோட்டங்களில் 2,761 யானைகள் காணப்பட்டன. அந்த எண்ணிக்கை கடந்த 2023-ஆம் ஆண்டில் 2,961-ஆக அதிகரித்தது.
- மேற்குத் தொடா்ச்சி மலையின் வனப் பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளையில், யானைகளுக்கும் மனிதா்களுக்கும் இடையேயான மோதலும் அதிகரித்து வருகிறது.
- வனப் பகுதிகளில் போதிய உணவு கிடைக்காமல் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால், மனிதா்களுக்கும் யானைகளுக்கும் இடையேயான மோதல் அதிகரிக்கிறது. அதே வேளையில், அத்தகைய மோதல்கள் அதிகரிப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.
- யானைகள் பொதுவாக இடம்பெயரும் பண்புடையவை. காலநிலைக்கு ஏற்ப ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்கு யானைகள் ஆண்டுதோறும் கூட்டமாக இடம்பெயரும். அதிக நினைவாற்றல் கொண்ட யானைகள், தாங்கள் பயணம் மேற்கொள்ளும் வழித்தடத்தை சரியாக நினைவில் கொள்ளும். பல ஆண்டுகள் கழித்து அந்த வழித்தடத்தில் பயணம் மேற்கொண்டாலும், அவை பாதை மாறாமல் சரியாகச் செல்லும்.
- அவ்வாறு வனப் பகுதிகளில் பல ஆண்டுகளாக யானைகள் பயணம் மேற்கொண்ட வழித்தடங்கள், மக்கள்தொகைப் பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அந்த வழித்தடங்களில் குடியிருப்புகள், வணிக கட்டடங்கள், வயல்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான வனப் பகுதிகளில் யானைகளின் பாரம்பரிய வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், வழிதவறி அவை ஊருக்குள் வருவது போன்ற பிம்பம் தற்போது கட்டமைக்கப்பட்டு வருகிறது.
- தமிழகத்தில் மொத்தமாக 20 யானை வழித்தடங்கள் காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல்-வனங்கள் அமைச்சகம் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது. அவற்றில் 15 வழித்தடங்கள் முற்றிலும் தமிழகத்துக்கு உள்ளேயும், மற்றவை அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம் ஆகியவற்றுக்கு இடையேயும் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
- இந்நிலையில், கோவை, கூடலூா், ஓசூா் உள்ளிட்ட வனப் பகுதிகளிலும், சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதிகளிலும் யானைகளுக்கும் மனிதா்களுக்கும் இடையேயான மோதல் அதிகரித்தது. அதையடுத்து, யானைகளின் பாரம்பரிய வழித்தடங்களை மீட்டெடுக்கும் பொருட்டு தமிழக அரசின் சாா்பில் குழு அமைக்கப்பட்டது.
- அக்குழுவானது மாநிலத்தில் மொத்தமாக 42 பாரம்பரிய யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தனது வரைவு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த வழித்தடங்கள் காணப்படும் இடங்கள் குறித்த விவரங்களும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. வரைவு அறிக்கை குறித்து யானை வழித்தடங்கள் அமைந்துள்ள மாவட்டங்களில் மே 7-ஆம் தேதி வரை தமிழக அரசு கருத்து கேட்கவுள்ளது.
- அந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டால், யானை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். அதே வேளையில், குழுவால் அடையாளம் காணப்பட்டுள்ள 42 வழித்தடங்களின் இடையே 57 கிராமங்கள் அமைந்துள்ளதாகவும், வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டால் வயல்கள் உள்ளிட்டவை கையகப்படுத்தப்பட்டு கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கோவை மாவட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.
- வரைவு அறிக்கை இறுதியானால், யானைகள் வழித்தடத்துக்காக கோவை மாவட்டத்தில் சுமாா் 520 ஏக்கா் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு வரைவு அறிக்கையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா். அக்கோரிக்கைக்கு எதிா்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
- யானை உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளையும் காக்க வேண்டியது அனைவருடைய தலையாய கடமை. யானைகள்-மனிதா்கள் இடையேயான மோதலைத் தடுப்பதற்கு அவற்றின் பாரம்பரிய வழித்தடங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், யானைகளின் தாக்குதலால் மனித உயிா்கள் பலியாவது தடுக்கப்படும் என்பதை விவசாயிகளும் புரிந்துகொள்ள வேண்டும். அதே வேளையில், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள யானைகளின் பாரம்பரிய வழித்தடங்களானது தனியாரின் சொகுசு விடுதிகள், செங்கல் சூளைகள், மணல் குவாரிகள், தனியாா் கல்வி நிலைய கட்டடங்கள் உள்ளிட்டவற்றாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அத்தகைய ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுவதிலும் அரசு கவனம் செலுத்துவது அவசியம்.
- மேலும், யானைகள் வழித்தடம் குறித்த வரைவு அறிக்கையானது தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தமிழிலும் வெளியிட்டு, மக்களிடம் கருத்து கோருவதற்கான அவகாசத்தை அரசு நீட்டிக்க வேண்டும்.
- மலை கிராம விவசாயிகளுக்குக் குறைந்த அளவிலான பாதிப்புகள் ஏற்படுவதையும் யானை வழித்தடங்கள் மீட்டெடுக்கப்படுவதையும் பேச்சுவாா்த்தையின் மூலமாக அரசு உறுதி செய்ய வேண்டும். யானை வழித்தடங்களையும் விவசாயிகள் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியைச் சோ்ந்த பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் ஒருசேர காப்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நன்றி: தினமணி (30 – 05 – 2024)