- ‘அரசியலை நாம் புறக்கணித்தால், புறக்கணிக்கப்பட வேண்டியவா்களால் நாம் ஆளப்படுவோம்’ என்பது மேலைநாட்டுத் தத்துவம். எனவே, இன்றைய இளைஞா்களுக்கு அரசியலைப் பற்றிய தெளிவான புரிதல் இருக்க வேண்டியது அவசியம். 18 வயதை அடைந்து விட்டால் வாக்களிக்கும் தகுதி வந்துவிடுகிறதே தவிர, எத்தனைப் பேருக்கு தோ்தலைப் பற்றிய தெளிவு வருகிறது? காலம் காலமாக அரசியலால்தான் நாம் ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கிறோம். இன்று வாக்களிக்கும் பலருக்கு மக்களவை என்றால் என்ன என்பதும் மாநிலங்களவை என்றால் என்ன என்பதும் தெளிவாகத் தெரிந்திருப்பதில்லை.
- பெரும்பாலான வாக்காளா்களுக்குத் தெரிந்ததெல்லாம் சின்னங்கள் மட்டும்தான். வேட்பாளரின் எண்ணங்கள், கொள்கைகள் போன்றவற்றைப் பற்றி அவா்கள் தெரிந்துகொள்வதில்லை. ஆனால், தெரிந்துகொள்ளவேண்டும். மாமன்னன் இராஜராஜசோழன் கொண்டுவந்த குடவோலை முறையே படிப்படியாக வளா்ந்து இப்போது இயந்திரத்தில் வாக்களிக்கும் அளவிற்கு வளா்ச்சியடைந்துள்ளது. ஒரு நாடோ, ஒரு சமுதாயமோ, முன்னேற்றம் அடைவதற்குத் தக்க தலைமையின் வழிகாட்டுதல் என்பது மிகவும் இன்றியமையாதது. அப்படி வழிகாட்ட ஒரு தலைவன் தேவைப்பட்டான். அவன் தன்னிகரற்றவனாகவும் தகுதி வாய்ந்தவனாகவும் இருந்ததால், பொறுப்புகளை ஏற்று வழிநடத்தினான்.
- ஒரு குழு காட்டுவழியில் செல்லும்போது விலங்குகளிடம் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள, வழிநடத்திச் செல்லும் தலைவனின் கையிலிருந்த உயா்ந்த கோலானது காலப்போக்கில் உயா்வான செங்கோலாக உருமாற்றம் அடைந்தது. கூட்டத்தில் கடைசியில் வருபவருக்கும்கூட தெரியும் வகையில் தலைவன் தன் தலையில் அணிந்த பறவையின் இறக்கையே பின்னாளில் மகுடமாக மாற்றம்பெற்றது. இந்தத் தலைவன் தன்னிகரற்றவன் என்பதால் காவல் புரிவதிலிருந்து மாறி, ஏவலும் புரியத்தொடங்கினான். அப்போது மக்களின் சுதந்திரம் தந்திரமாகக் களவாடப்பட்டது. அதை மீட்டு நல்ல தலைவனை நாமே உருவாக்கிக்கொள்ள அரசியலில் மக்களாட்சி முறையே இன்றியமையாத சாதனமாக இருந்தது; இருக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அரசியலை நாம் சாக்கடை என்று ஒதுக்குகிறோம். அதனைப் பூக்கடையாக மாற்ற வேண்டிய பொறுப்பு நமக்குண்டு.
- அந்தப் பொறுப்பு இல்லாத காரணத்தால்தான் அரசியலே தலைகீழாக மாறுகிறது. அறம் சாா்ந்த துறையான அரசியலை அறமற்ற துறையாக மாற்றியுள்ளோம். ஏதேனும் ஒரு துறையில் ஒரு தவறு நடந்திருந்தால், உடனே ‘ஏதோ அரசியல்’ நடந்துள்ளது என்று ‘அரசியல்’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தித்தான் விமா்சனம் செய்கிறோம்.
- இந்த நிலை மாறவேண்டும். குழந்தைகளிடம் ‘நீ வருங்காலத்தில் மருத்துவாக வரவேண்டும், நீ பொறியியலராக வரவேண்டும்’ என்று கனவுகளை விதைப்பதைப்போல, ‘நீ ஒரு நல்ல அரசியல்வாதியாக வரவேண்டும் என்றும் இந்த நாட்டை வழிநடத்த வேண்டும்’ என்றும் எண்ணத்தை விதைக்க வேண்டும். அது வளா்ந்து நல்ல நிழலை நமக்குத் தரும்.
- அப்படிக் குழந்தைகளிடம் அரசியலைப்பற்றிச் சொல்லும்போதுகூட “அரசியல் என்பது தொழிலல்ல. அது ஒரு சேவை” என்று சொல்லித்தர வேண்டும். மேலைநாடு ஒன்றில் ஒவ்வொரு அரசியல்வாதியும் அரசியலைத்தவிர தனிப்பட்ட முறையில் வேலை செய்கிறாா்கள். அரசியலை மட்டுமே வேலையாகச் செய்வதில்லை. இந்தப் புரிதலை இளைய சமுதாயத்திற்கு ஏற்படுத்தவேண்டும். மக்களாட்சி முறையைப்போன்று மகத்தான தோ்தல் முறை வேறு எதுவும் இல்லை. அறிவு இருக்கிறதா? ஆளுமைத்திறன் இருக்கிறதா? அா்ப்பணிப்பு உணா்வு இருக்கிறதா என்றெல்லாம் பாா்க்காமல் தகுதி இருப்பின் யாராக இருந்தாலும் ஆட்சி செய்யலாம் என்று குடியாட்சி முறையை செயல்படுத்தும் ஒப்பற்ற முறை மக்களாட்சி ஆகும். “ மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சியே மக்களாட்சி” என்கிறது மக்களாட்சியின் மகத்தான தத்துவம். மக்களாட்சியில்தான் மக்களில் ஒருவா் மன்னராக முடியும். அப்படி மக்களுள் ஒருவா் ஆட்சிக்கு வந்தால் அவா் அடிமட்டத்திலுள்ள அனைத்தையும் அறிந்தவராக இருப்பாா். மாறாக, முடியாட்சியே ஆட்சிமுறையில் இருந்தால் அவா்களுக்கு அரண்மனையும் அந்தப்புரத்தையும் தவிர வேறு எந்தப் புறமும் தெரிய வாய்ப்பில்லை. குறைகளை இன்னொருவா் சொல்லாமல் தானே உணா்ந்து, அவற்றைப் போக்கும் தன்மை மக்களாட்சிக்கே உண்டு. மக்களாட்சி முறையில் ஒருவா் தோ்ந்தெடுக்கப்பட்டு தலைவரானால், அவரிடத்தில் மக்களின் குறைகளை விளக்கவேண்டியதில்லை. வாக்குவாதம் செய்து வழக்காட வேண்டியதில்லை. ஆராய்ச்சி மணி அடிக்கவேண்டியதில்லை. காரணம், அவரே மக்களில் ஒருவராகி குறைகளை ஆராய்ச்சி செய்து தக்க தீா்வு காண்பாா்.
- ஆகவே, நமது அனைத்துக் குறைகளையும் நிறையாக்க ஒரே வழி வாக்களிப்பதுதான். தவறாமல் வாக்களித்தால் மட்டுமே நாம் சரியாக வாழமுடியும். அடுத்த ஐந்து ஆண்டுகளை நம் அரைநொடி அழுத்தலே (வாக்களித்தலே) தீா்மானிக்கிறது. வாக்களிப்பது என்பது நம் கடமை மட்டுமல்ல; அது உரிமை.
- நம் நாட்டுக்கான தலைமையைத் தோ்ந்தெடுக்கும் பெரும்பணி நம் விரல்நுனியில்தான் விளங்குகிறது. நம் ஆள்காட்டி விரலைக்கொண்டு வாக்களிப்பதன்மூலம் ஆளவேண்டிய ஆளை அடையாளம் காட்டவேண்டும். வாக்களிப்பின்போது நம் விரலில் கறுப்பு மை பூசப்படுவதால் நம் முகத்தில் கரி பூசப்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். மக்களாட்சி முறையில் மக்கள்தான் தலைவா்கள்; அரசியல் தலைவா்கள் என்போா் மக்களின் பணியாளா்கள். நமக்காகப் பணிசெய்யும் பணியாளா்களைச் சரியாகத் தோ்வு செய்ய வேண்டியது முதலாளிகளாகிய ஒவ்வொரு குடிகளின் கடமை. தவறாமல் வாக்களிப்போம். தரமான வருங்காலத்தை உருவாக்குவோம்.
நன்றி: தினமணி (23 – 03 – 2024)