TNPSC Thervupettagam

வாக்குப்பதிவும் பெண்களும்

February 21 , 2024 187 days 220 0
  • இந்தியாவில் பெண்களின் வாக்குப் பதிவு விகிதம் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த வாக்குப் பதிவு அதிகரித்துவருவதற்குப் பெண்களின் வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதே முக்கியக் காரணம். வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு நீண்ட போராட்டங்கள் தேவைப்பட்டன.
  • ஆனால், சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தலில் இருந்தே சாதி, மத, இன, பாலின வேறுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் வாக்குரிமை என்பது நடைமுறையில் இருந்து வருகிறது.
  • தொடக்கக் காலத் தேர்தல்களில் ஆண்களின் வாக்குப்பதிவுக்கும் பெண்களின் வாக்குப்பதிவுக்கும் இடையே பெருத்த இடைவெளி நிலவியது. உதாரணமாக, 1962 மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற ஆண்களில் 63.3% பேர் வாக்களித்தனர்; பெண்களில் 46.6% மட்டுமே வாக்களித்தனர்.
  • மொத்த இடைவெளி 16.7%. ஒட்டுமொத்த வாக்குப்பதிவைப் போலவே ஆண்களின் வாக்குப்பதிவுக்கும் பெண்களின் வாக்குப்பதிவுக்கும் இடையிலான இடைவெளியும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்துள்ளது; இந்த இடைவெளி 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் கணிசமாகக் குறைந்துள்ளது.
  • 2004 தேர்தலில் 8.4%இல் இருந்து, 2009 தேர்தலில் 4.4%ஆகவும், 2014 தேர்தலில் 1.5%ஆகவும் குறைந்தது. 2009 தேர்தலில் வாக்களித்த 42 கோடி வாக்காளர்களில் 19 கோடிப் பேர் பெண்கள். 2014 தேர்தலில் வாக்களித்த ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 55 கோடியாக அதிகரித்தது.
  • இதில் பெண்களின் பங்கு 26 கோடி. 2019 மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக ஆண்களின் வாக்குப்பதிவு விகிதத்தைவிட (67.01%) பெண்களின் வாக்குப்பதிவு விகிதம் (67.18%) அதிகரித்தது.
  • 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 2.63 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பெண்கள் 1.41 கோடிப் பேர்; ஆண்கள் 1.22 கோடிப் பேர். ஆக, 2024 தேர்தலில் பெண்கள் வாக்குப்பதிவு ஆண்கள் வாக்குப்பதிவுக்கு இணையாகவோ அதிகமாகவோ இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
  • தேர்தலில் பெண்கள் வாக்களிப்பது அதிகரித்திருப்பதற்குக் கல்வி வளர்ச்சியும் பெண்கள் தொடர்பான பிற்போக்குச் சிந்தனைகள் தகர்ந்துவருவதும் முக்கியமாகப் பங்களித்துள்ளன. பெண்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்களது கணவர் அல்லது தந்தை போன்ற குடும்ப ஆண்கள்தான் தீர்மானிக்கிறார்கள் என்கிற கருத்து நிலவுகிறது.
  • ஆனால், கடந்த சில மக்களவைத் தேர்தல்களிலும் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் இலவச சமையல் எரிவாயு, மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்துப் பயணம் எனப் பெண்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் பெண் வாக்காளர்கள் சுயாதீனமாக வாக்களிப்பதை அரசியல் கட்சிகள் உணர்ந்துள்ளதாகப் புரிந்து கொள்ளலாம்.

நன்றி: தி இந்து (21 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories