- மக்களவை வரலாற்றில் மிக அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வென்றவர் பாரதிய ஜனதா கட்சியின் பிரீதம் முண்டே. 2014 தேர்தலில் மகாராஷ்டிரத்தின் பீட் தொகுதியில் போட்டியிட்ட இவர், இரண்டாம் இடம் பெற்றவரைவிட 6.96 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றார். 2019 தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த சி.ஆர்.பாட்டீல் குஜராத்தின் நவசாரி தொகுதியில் 6.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- மக்களவை வரலாற்றில் மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள் இருவர். 1989 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் கோனதலா ராமகிருஷ்ணா ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி தொகுதியில் ஒன்பது வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- 1998 தேர்தலில் பாஜகவின் சோம் மராண்டி, பிஹார் மாநிலம் ராஜ்மஹல் தொகுதியில் போட்டியிட்டு, ஒன்பது வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பி.பி.சரோஜ் உத்தரப் பிரதேசத்தின் மச்லிஷஹர் தொகுதியில் 181 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
- வாக்கு சதவீத அடிப்படையில் பார்த்தாலும் மிகக் குறைந்த வாக்கு சதவீத வித்தியாசத்தில் வென்றவர் கோனதலா ராமகிருஷ்ணா. 0.0014% வாக்கு வித்தியாசத்தில் இவர் 1989 தேர்தலில் வென்றிருக்கிறார். அதிக வாக்கு சதவீத வித்தியாசத்தில் வென்றவர் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த பியாரி லால் ஹண்டு. 1989 மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் போட்டியிட்டவர்களில் இரண்டாம் இடத்தைப் பெற்றவரைவிட 97.19% வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றிபெற்றார்.
- மக்களவையில் மிக நீண்ட காலம் உறுப்பினராக இருந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இந்திரஜித் குப்தா. இவர் 1960 தொடங்கி 2001இல் மறையும்வரை 36 ஆண்டு காலம் மக்களவை உறுப்பினராக இருந்தார். 1960இல் இடைத்தேர்தலில் வென்று முதல் முறையாக மக்களவை உறுப்பினர் ஆனார். இடையில், 1977 தேர்தலில் மட்டுமே தோல்வியடைந்த இவர் 1980 தேர்தலில் வென்று மீண்டும் உறுப்பினராகிவிட்டார். மொத்தமாக 11 முறை இவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 10 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- 2019இல் தொடங்கிய 17ஆவது மக்களவையில் மிகவும் முதிய உறுப்பினர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த ஷஃபிகுர் ரஹ்மான் பர்க். இவருக்கு இப்போது வயது 93; மிக இள வயது உறுப்பினர் பிஜு ஜனதா தளம் கட்சியின் சந்திராணி முர்மு. இப்போது 30 வயதாகும் இவர் 25 வயதிலேயே மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 03 – 2024)